மன்பதை நூல் மருத்துவர் க.ப.அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்
மன்பதை நூல் மருத்துவர் க.ப.அறவாணன்
தமிழர்க்கு எழுச்சி ஊட்டும் வகையில் பேசியும் எழுதியும் வந்தாலும் மன்பதை நோக்கில் தான் காணும் குறைகளையும் வெளிப்படுத்தி வருபவரே மனோமணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் அறிஞர் க.ப.அறவாணன். நூலாசிரியர், இதழாசிரியர், கதை எழுத்தாளர், பதிப்பாசிரியர் என்ற முறையில் தமிழுக்கு அணிசெய்யும் வகையில் தொண்டாற்றி வருபவர்.
திருவாரூர் (தஞ்சாவூர்) மாவட்டம் கடலங்குடியில் ஆவணி 24, 1972 / 8.9.1941 அன்று பழனியப்ப(பிள்ளை)-தங்கபாப்பு இணையரின் திருமகனாகப் பிறந்தார். இவர் மனைவி தமிழறிஞர் முனைவர் தாயம்மாள் அறவாணன் தமிழ்நூல் படைப்பாளர். மகன் அறிவாளன், மருமகள் வாணி அறிவாளன்.
கல்வி
தஞ்சாவூர் விட்டுணுபுரம் சியார்சு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பை முடித்தவர்(1959), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று (1959-63) புலவர் பட்டம் பெற்றார். அங்கேயே கீழ்த்திசை மொழி இளங்கலை (பி.ஓ.எல்.) பட்ட வகுப்பில்(1963-65) சேர்ந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். உடன் பேச்சு ஆங்கிலம், மொழியியல் ஆகியவற்றில் சான்றிதழ்த் தேர்ச்சியும் பெற்றார். தமிழ் முதுகலையைத் திருனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக் கழகத்தில் பெற்றார்(1967). இதிலும் முதல் வகுப்பில் முதன்மை பெற்றார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில், மானுடஇயல்(1972), தொல்லியல்(1973) சான்றிதழ்கள், இலக்கிய இளங்கலை(பி.லிட்.)(1974), இலக்கிய முதுகலை(எம்.லிட்.)(1975) பட்டங்கள் பெற்ற பின்னர் முனைவர் பட்டம் பெற்றார்(1977). ஆய்வு அளிப்பேட்டுத் தலைப்பு: தொல்காப்பியம் – அகத்திணையியல், புறத்திணையியல் உரைவேறுபாடுகள் என்பதாகும்.
சொற்பொழிவாளர்
சிறந்த சொற்பொழிவாளராகத் திகழும் அறவாணன் படிக்கும் பொழுதே தன் திறமையை வெளிப்படுத்தினார். மாணாக்க நிலையிலும் ஆசிரிய நிலையிலும் ஆங்கிலச் சொற்பொழிவுப் போட்டிகள், தமிழ்ச் சொற்பொழிவுப் போட்டிகள், பிற போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளை வாங்கிக் குவித்தார்.
அறிந்த பிற மொழிகள்
ஆங்கிலம், ஃபிரெஞ்சு, உருசியன் முதலான பிற மொழிகளையும் அறிந்தவர். சென்னைப்பல்கலைக்கழகத்தில் உருசியன்(1971), பிரான்சில் கத்தோலிக்கக் கல்வி நிறுவனத்தில் பிரெஞ்சு மொழியில் (1978)சான்றிதழ்த் தேர்ச்சியுற்றார். தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆராய்ச்சிப் படைப்புகளை வழங்கி வருகிறார்.
பணியாற்றிய இடங்கள்
பாளையங்கோட்டையில் உள்ள தூய சேவியர் கல்லூரியில் 1967 ஆம் ஆண்டு தமிழ் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து தன் பணி வாழ்க்கையைத் தொடங்கினார். அடுத்த கல்வியாண்டில்(1968-69) பாபநாசம், திருவள்ளுவர் கல்லூரியில் முதல்வராகப் பணிப் பொறுப்பேற்றார். அதற்கடுத்த கல்வியாண்டில்(1969-70) முன்னர்ப் பணியாற்றிய தூய சேவியர் கல்லூரியில் மீண்டும் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1970இல் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தவர் 7 ஆண்டுகள் இங்கே பணியாற்றினார். மேற்கு ஆப்பிரிக்கா செனகாலில் தக்கார் பல்கலைக்கழகத்தில் மானுடஇயல் ஆராய்ச்சியாளராக 1977-82 இல் பணியாற்றி அயல் மண்ணில் தமிழ்த் தொண்டாற்றினார். திராவிட-ஆப்பிரிக்கர்களின் பழக்கவழக்கப் பண்பாட்டு ஒற்றுமைகள் என்னும் தலைப்பில் ஆய்வேடு அளித்தார். இதனடிப்படையில் சில நூல்களைப் பின்னர் எழுதினார்.
1982 இல் தாயகம் திரும்பியவர் சென்னை இலயோலா கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியில் சேர்ந்து 1987 வரை பணியாற்றினார். அதற்கடுத்த 11 ஆண்டுகள்(1987-98) புதுவைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றினார். தொடர்ந்து வந்த 3 ஆண்டுகள் (1998-2001)மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் (திருநெல்வேலி) துணைவேந்தராக சீர்மிகு பணிகளை யாற்றினார்.
1982இல் வேலையில் சேர்ந்த நாள் முதல் விடுப்பு எடுக்காமல் அயராது பணியாற்றியமைக்காக இலயோலா கல்லூரி ஆட்சிக்குழு, ஆண்டுதோறும் பத்தாயிரம் உரூபாய்ப்பரிசு அளித்துச் சிறப்பித்தது.
கட்டுரையாளர்
மாணவ நிலையிலும் ஆசிரிய நிலையிலும் பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை அளித்துப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றார். 1960 முதல் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். தவத்திரு (உ)லூர்து எத்தனப்பள்ளி அடிகளார் நினைவு ஆராய்ச்சிக் கட்டுரைப் பரிசு, வயவர் ஆர்.கே. சண்முகம்(செட்டியார்) தமிழ் ஆராய்ச்சி விருது(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)(1963), இராணி சேது பார்வதி(பாய்) வரலாற்று ஆராய்ச்சிப் பரிசு (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.)(1964) முதலியன குறிப்பிடத்தக்கன. மேலும் 1983-84இல் மிகுதியான ஆராய்ச்சிக்கட்டுரைகளை வெளியிட்டமைக்குச் சிறப்புப் பரிசும் பெற்றார்.
தினமணி, தினமலர், குமுதம், கல்கி, சுதேசமித்திரன், தமிழ்நாடு, செந்தமிழ்ச்செல்வி, மறவன் மடல், முத்தாரம், மக்கள் செங்கோல், தாமரை, ஆராய்ச்சி, இளந்தமிழன், தமிழ்க்கலை, தென்மொழி, கொங்கு, கலைமகள், தமிழ்மாருதம், மலேசிய நண்பன், தமிழ்முரசு, அறிக அறிவியல் முதலான பல்வேறு இதழ்களில் இவரது கட்டுரைகள் இடம் பெற்றுப் பொது மக்களனின் பாராட்டுகளைப் பெற்றுவருகின்றன.
கல்விப்பணியும் தமிழ்ப்பணியும் ஆற்றியமைக்கு வகித்த பொறுப்புகள்
திராவிட ஆராய்ச்சி மையம், இந்திய நடுவண்மொழி நிறுவனச் செம்மொழித் திட்டம்(மைசூர்), தமிழ் சாகித்ய அகதமி(தமிழக அரசு), தமிழாராய்ச்சி நிறுவனம், தென்னகப் பண்பாட்டு மையம், தமிழ்வளர்ச்சிக் குழு(தமிழக அரசு), இந்திய, மாநில, அயல்நாடுகளில் தமிழ்வளர்ச்சிக்குழு(தமிழக அரசு), தமிழ்ப்பல்கலைக்கழக ஆட்சி மன்றம், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவன ஆட்சிக்குழு, புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவன மொழிபெயர்ப்புக்குழு (பாரதிதாசன் கவிதைகள்), மதுரை தோக்கு பெருமாட்டி(Lady Doak) கல்லூரியின் கல்விக்குழு, பாரதிதாசன் பல்கலைக்கழகத் தெரிவுக்குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்து தொண்டாற்றியுள்ளார்.
உயர்கல்வியின் தமிழ்ப்பகுதிக் குழு(தமிழக அரசு) (1995), உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறப்புக்குழு (1997), சிறந்த புத்தக வெளியீட்டுத்தேர்வுக்குழு(தமிழ்வளர்ச்சித் துறை, தமிழக அரசு) (1997), ஆகியவற்றில் தலைவர் பொறுப்பேற்று வழி நடத்தியுள்ளார்.
அனைத்திந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் செயலர், பொருளாளர் முதலான பொறுப்புகளை 1991-2000ஆண்டுகளில் ஏற்றுத் திறம்பட நடத்திச் சென்றுள்ளார்.
உலகச் சைவ மன்றத்தின்(இலண்டன்) துணைத்தலைவர், சிகாகோ உலகத் தமிழ் மொழிக் கூட்டமைப்பின் இந்திய ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் (கோலாலம்பூர், மலேசியா) அறக்கட்டளை உறுப்பினர், புது செர்சி தமிழ்ச்சங்கத்தின் நேற்று, இன்று, நாளை செயல்பாட்டின் ஒருங்கிணைப்பாளர், கணக்கெடுப்பு 2000 சிந்தனை வட்டம், புது செர்சி அமைப்பின் தமிழ்நாட்டு ஒருங்கிணைப்பாளர் எனப் பிற பொறுப்புகளையும் ஏற்றுத் திறம்படச் செயலாற்றியுள்ளார்.
நூல்கள்
பண்பாட்டுப் பழக்க வழக்கங்களின் குறைகளைச் சுட்டிக் காட்டும் இவரது கருத்துகள் ஒரு சாராரால் எதிர்ப்பிற்கும் மறு சாராரால் அறுவை மருத்துவம் எனப் பாராட்டிற்கும் உள்ளாகின்றன.
தமிழர் குமுகவியல், பண்பாடு, வாழ்க்கை முன்னேற்ற நூல்கள், மொழி பெயர்ப்பு நூல்கள், வரலாறு, தன் வரலாறு, கல்வி, பயண நூல், திறனாய்வு, இலக்கணம், சிறுகதைத் தொகுப்புகள், புதினம், அறிவியல், அற இயல், பொது எனப் பல துறைகளிலும் எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
அவருடைய ஆய்வுகள்(His studies), மானிடவியல் ஆய்வுகள்(Anthropological studies), பாம்பு வழிபாடு(The serpent cult), திராவிடர்கள் (பதிப்பு நூல்)(Dravidians), தமிழியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள்(Research papers on Tamilology) ஆகிய ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார்.
சிலர் எண்ணுவதுபோல் இவர் குறைகளைமட்டும் கூறுபவர் அல்லர். தமிழ்ச் சமுதாயம் நோயும் மருந்தும், தமிழ்ச்சமூகம் அவலங்களும் தீர்வுகளும், தமிழர் வருந்தவும் திருந்தவும், தமிழர் உணரவும் உயரவும் முதலான நூல் தலைப்புகள் இதனை உணர்த்தும். எனவே, பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன், மன்பதை நூல் மருத்துவர் என அழைக்கப்பெறலாம்.
தமிழர் களைகளும் கவலைகளும், தமிழர் + தன்னம்பிக்கை = தற்கொலை, தமிழரின் எழுச்சியும் வீழ்ச்சியும், தமிழர் தடங்கள் தடுமாற்றங்கள், தமிழா எழுந்து வா, இலஞ்சம் எனும் நஞ்சு, நீயே வெல்வாய், உயருங்கள், பொறு புறக்கணி புறப்படு, புரட்சிப் பொறிகள், தமிழர் சிந்தனை புதிது, தமிழரால் முடிந்தால் தமிழால் முடியும், தமிழா! தலைமை தாங்க வா முதலான நூல்கள் இவர் எப்பொழுதும் தமிழரிடையே உள்ள அவலங்களையும் அவற்றைப் போக்குவத ற்குரிய வழிமுறைகளையுமே சிந்தித்து வந்துள்ளார் என்பதை உணர்த்தும்.
தொல்தமிழர் காலம், தொல்வழிபாட்டுக் காலம், அயலவர் காலம், நாயக்கர் காலம், இசுலாமியர் காலம், பாண்டியர் காலம், சோழப் பேரரசின் காலம் எனக் காலமுறையிலே தமிழர் வரலாற்று நூல்களை அளித்துள்ளமை சிறப்பிற்குரியதாகும். இவரின் தமிழர்மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள் என்னும் நூலை விழிப்புணர்வு பெற வேண்டிய ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். வரலாற்று நூல்களில் ‘ஈழம்: தமிழரின் தாயகம்’ என்பது குறிப்பிடத்தக்க படைப்பாகும்.
சிறந்த புத்தகங்களுக்கான பரிசுகளும் விருதுகளும்
பேரா.க.ப.அறவாணன், ‘சைனரின் தமிழிலக்கண நன்கொடை’ (1978), ‘தமிழர் பிறந்தகம்’(1986), ‘தமிழர்தம் மறுபக்கம்’(1990), ‘படைப்பாளி+சமுதாயம்= இலக்கியம்’ (1997), என்னும் நூல்களுக்காகத் தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார்.
‘கவிதையின் உயிர், உள்ளம், உடல்’ நூலுக்குத் திருப்பூர்த் தமிழ்ச்சங்கம்(1994), ‘தமிழ்ச் சமுதாய வரலாறு’ நூலுக்குச் சென்னைத் தமிழ்ச்சங்கம் (1996), ‘இலஞ்சம் எனும் நஞ்சு’ நூலுக்குப் பல்மருத்துவர் தெய்வசிகாமணி அறக்கட்டளை (திருச்சி)(2011), ‘தமிழ் மக்கள் வரலாறு (நாயக்கர் காலம்)’ நூலுக்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு பேரவை(நாகர்கோயில்)(2013) எனத் தமிழமைப்புகளும் இவரது நூற்சிறப்பை உணர்ந்து விருதுகள் வழங்கியுள்ளன.
தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு? என்னும் நூல், தினத்தந்தியின் நூறாயிரம் உரூபாய்ப் பரிசினைப் பெற்றது.
சிறந்த சிறுகதைக்கான விருதுகளைத் திண்டுக்கல் மொழியியல் நிறுவனமும் திருவாரூர் இயற்றமிழ் அகமும் வழங்கியுள்ளன. சிறந்த கட்டுரைக்கான விருதினைத் திண்டுக்கல் திருவள்ளுவர் மன்றம் வழங்கியுள்ளது.
விருதுகள்
அமெரிக்கன் தன் வரலாற்றாளர் நிறுவனம்(American Biographical Institute) 1997 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் விருது அளித்தது.
1986 இல் அனைத்திந்தியக் கிறித்தவ அமைப்பின் கல்வி நிறுவனம்(புதுதில்லி), சிறந்த பேராசிரியர் விருது அளித்தது.
குன்றக்குடி ஆதினம் வழங்கிய கபிலர் விருது, திருவள்ளுவர் மன்றம்(கோவில்பட்டி) வழங்கிய திருவள்ளுவர் விருது, திருக்குறள் பேரவை(திருச்சி) வழங்கிய தமிழ் ஞாயிறு விருது, முருகாலயம்(சென்னை) வழங்கிய மாவீரன் பூலித்தேவன் விருது, பண்ணைத் தமிழ்ச்சங்கம்(சென்னை) வழங்கிய தமிழறிஞர் விருது, கேம்பிரிட்சு வரலாற்று மையம்(இங்கிலாந்து) வழங்கிய 1998 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் விருது முதலியன இவரது சிறப்பைத் தமிழன்பர்கள்போற்றியதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
தமிழக அரசின் திருவள்ளுவர் விருது நூறாயிரம் உரூபாய், இராசா வயவர் முத்தையா(செட்டியார்) விருது நூறாயிரம் உரூபாய், திரு. சி.பா. ஆதித்தனார் விருது நூறாயிரம் உரூபாய் முதலியன இவர் பெற்ற சிறப்பான விருதுகளாகும்.
பயணம் மேற்கொண்ட நாடுகள்
ஆத்திரேலியா(1992), ஆத்திரியா(1984), கனடா(1994,1996,1999,2000), செக்கோசுலோவிக்கியா(1977), தென்மார்க்கு (1984), ஃபிரான்சு(1977, 1978, 1980, 1994, 2000), காம்பியா(1978), செருமனி(1980, 1981, 1984,1993,1994,1996,1999), ஆங்காங்கு(1979), இத்தாலி(1978,1979), சப்பான்(1979), மலேசியா(1979,1994,1996,1997,1998,1999), மொரிசியசு(1996), நைசீரியா(1997), செனகால்(1997-1981), சிங்கப்பூர்(1979,1981,1992,1994,1996,1997,1998,1999,2000), தென் ஆப்பிரிக்கா(1996), இலங்கை(1975,1995), சுவிட்சர்லாந்து(1993), இங்கிலாந்து (1997,1978,1979,1980, 2000), அமெரிக்கா(1979, 1994, 1996, 2000) முதலான 20 நாடுகளுக்கும் மேற்பட்டஅயல்நாடுகளுக்குத் தமிழ்ப்பயணம்மேற்கொண்டுள்ளார்.
மன்பதை நூல் மருத்துவர் பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன் வழியில் தமிழரிடையே ஏற்பட்டுள்ள அயல் தாக்க நோய்களை அறிந்து தமிழ்ப்பண்பாட்டை மீட்டெடுத்துத் தமிழராய்த் தலை நிமிர்ந்து வாழ்வோம்!
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply