புகழுடல் எய்தினார் முத்துச்செல்வன் (எ) மீனாட்சிசுந்தரம்
பகுத்தறிவு முத்து முத்துச்செல்வன் (எ) மீனாட்சிசுந்தரம் மறைந்தார்
பெங்களுர் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவர், அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர், 2009ஆம் ஆண்டு மேனாள் தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் பெங்களுரில் திருவள்ளுவர் சிலையைத் திறப்பதற்குக் காரணமானவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவர், கன்னியாகுமரி மாவட்டம் காப்பியக் காட்டில் தொல்காப்பியர் சிலை நிறுவித், திறக்கப்படுவதற்கு முதன்மையானவர்களுள் ஒருவராக இருந்து பணியாற்றியவர், பெங்களுரு இந்தியன் தொலைபேசி தொழிலகத்தில் முதுநிலைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர், பெங்களுரில் வசிக்கும் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்தவர், பெரியார் அன்பர், சொற்பொழிவாளர், தமிழ்த்தொண்டர், தமிழறிஞர், மு. மீனாட்சி சுந்தரம் என்னும் முத்துச்செல்வன் ஐயா(அகவை 78) இன்று(மாசி 24/2053 , 08.03.2022) மாலை 3.50 மணிக்கு மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் இறுதி ஊர்வலம் நாளை மாசி 25,2053 / 9-3-2022 நண்பகல் 12.00 மணிக்கு
அவருடைய வீட்டிலிருந்து ( 41/25, முதல் குறுக்கு, குப்புதா மனையமைப்பு(லே அவுட்), பழைய சென்னைச் சாலை, அல்சூர், பெங்களூர்) புறப்பட்டு கல்பள்ளி மின் மயானத்தில் முடிவடையும்.
கருநாடகத் தமிழர்களாலும் அனைத்து இந்தியத் தமிழ் அமைப்பினராலும் பெரிதும் போற்றப்படும் அன்னாரின் மறைவிற்கான ஆழ்ந்த இரங்கலை அன்னாரின் குடும்பத்தினருக்கு அகரமுதல மின்னிதழும் தமிழ்க்காப்புக்கழகமும், இலக்குவனார் இலக்கிய இணையமும் புதுச்சேரி-தமிழ்நாடு தமிழ் அமைப்புகளும் தெரிவித்துக் காெள்கின்றன.
நான் பெரிதும் மதிக்கும் அன்னார், என் மீது தனிப்பட்ட முறையில் அன்பு கொண்டவர். திங்களிருமுறையேனும் நாங்கள் அலைபேசி வழி உரையாடிக்கொள்வோம். சில ஆண்டுகளுக்கு முன்னர் இல்லம் வந்திருந்த பொழுது அனைவரிடமும் இனியமையாகப் பழகிய நினைவையும் மறக்க இயலாது.
தமிழ்ப்பாதுகாப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் நடத்தும் நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றியவர். அகரமுதல இதழின் தொடர் வாசகர். என் அறிவியல் தமிழ் நூல்களையும் சொல்லாக்க நூல்களையும் பெரிதும் பாராட்டி, “விலைப்பட்டியலை அனுப்புங்கள் அனைத்துத் தமிழ்ச்சங்கங்களுக்கும் இவற்றை வாங்குமாறு மடல் அனுப்புகிறேன்” என அன்புடன் கூறியவர். கட்டுரை மணிகளில் உள்ள ஒவ்வொரு கட்டுரை பற்றியும் சிறப்பித்துப் பேசியவர். எனவே, இவரது நினைவு என்றென்றும் நீங்காமல் துணை நிற்கும்.
Leave a Reply