(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 4 தொடர்ச்சி)

‘பழந்தமிழ்’

2  மொழிகளும் மொழிக்குடும்பங்களும் தொடர்ச்சி

  இத்தாலிய மொழி, மலேயா மொழி, வங்காள மொழி, போர்ச்சுகீச மொழி, அராபி மொழி ஆயவை பேசுவோர் தொகை ஐந்து கோடிக்கும் ஏழு கோடிக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையாகும்.

  இவற்றில் சில உலகின் நிலப்பரப்பில் பெரும் பகுதியைத் தாம் வழங்குமிடமாகக் கொண்டுள்ளன. ஆங்கிலம் ஐந்தில் ஒரு பகுதியையும், உருசியம் ஆறில் ஒரு பகுதியையும் ஆட்சி புரிகின்றன. சப்பான் மொழியும் இத்தாலிய மொழியும் சிறு நிலப்பரப்புள் வழங்குகின்றன. ஆங்கிலமும் பிரெஞ்சும் உலகமெங்கும் பரவிய ஆட்சியைப் பெற்றுள்ளன. சீனம், இந்துஃச்தானி, வங்காளம் ஆயவை தம் நாட்டை விட்டு அப்பாற் சென்றில. இவற்றில் சில வாணிபத்திற்கும், அறிவியல் ஆராய்ச்சிக்கும், கலைக்கும், இசைக்கும், இலக்கியத்திற்கும் உரியவையாகி மக்களால் விரும்பப்பட்டுக் கற்கும் நிலையில் உள்ளன.

  எடுத்துக்கூறப்பட்ட பதின்மூன்று மொழிகளுள் ஆறு ஐரோப்பிய மேற்புறத்தைச் சார்ந்தன. அவையாவன: ஆங்கிலம், பிரெஞ்சு, சிபானிசு, ஆறு ஆசியஆப்பிரிக்கப் பகுதிகளைச் சார்ந்தன. அவையாவன: சீனம், சப்பானியம், இந்துஃச்தானி, மலேயம், வங்காளம், அரபி.

  எஞ்சிய ஒன்றாம் உருசிய மொழி கிழக்கு ஐரோப்பாவிலும் வட ஆசியாவிலும் பரவியுள்ளது. ஆங்கிலம் ஒன்றுதான் அளப்பரும் பேருக்கு உரியதாக விளங்குகின்றது. உலகில் மிகுதியாகப் பேசுகின்ற மக்கள் தொகையை உடைய மொழிகளில் இரண்டவதாக விளங்குகின்றது; உலகமெங்கணும் பரவியுள்ளது. ஆங்கிலேயர்  ஆட்சியில் ஞாயிறு மறைவதே கிடையாது என்று கூறி வந்தனர். அவ்வாட்சிப்பரப்புக்கூட இன்று குறைந்துவிட்டது. ஆனால் அவ்வாட்சி மறைந்த இடங்களிலும் ஆங்கில மொழி இன்னும் ஆட்சி செய்து கொண்டுதான் உள்ளது. ஆங்கிலேயரை வெளியேற்றினாலும் ஆங்கிலத்தை வெளியேற்ற மாட்டோம் என்று கூறிக்கொண்டு ஆங்கிலத்தை விரும்பிக் கற்கும் மக்களும் உளர். இன்று ஆங்கிலமே வாணிபத்திற்கும் தொழில் முறைக்கும் உயர்கல்விக்கும் உரிய மொழியாக உள்ளது. ஆங்கில மொழி பேசுவோரிடமே  உலகச் செல்வ வளத்தில் அரைப்பகுதி அடங்கிக் கிடக்கின்றது. தொடர்  வண்டி, உந்து வண்டி, தொலைபேசி, வானொலி, செய்தி இதழ் திரைப்படம் முதலியனவும் ஆங்கில மொழியாளர்க்கே உரிமையாக உள்ளன. அறிவியல்களை அளிக்கும் மொழிகளுள் ஒன்றாகவும் அறிவியல் அறிக்கைகளில் அரைப்பங்கைத் தாங்கிவரும் மொழியாகவும் உள்ளது. ஆதலின் உலக முழுவதுக்கும் பயன்படக் கூடிய பொது மொழியாதற்குரிய தகுதியை ஆங்கிலம்தான் பெற்றுள்ளது. ஆயினும் மற்ற மொழிகளின்  சிறப்பையும் உரிமையையும் நாம் புறக்கணிப்ப தற்கில்லை.

  தமிழர்களாகிய நாம் நம் தாய்மொழியாம் தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்தையே போற்றி வந்தோம். ஆங்கிலத்தைப் போற்ற வேண்டியது நமது  முன்னேற்றங் கருதியேதான் என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு இடம் இல்லை. ஆனால் அதற்காகத் தமிழை அறவே மறந்துவிடுதல் கூடாது அன்றோ? நமக்கொரு பணிப்பெண் வேண்டிய நிலைமையை நினைத்து நமது வீட்டுத் தலைவியைப் புறக்கணித்துவிடலாமா? தமிழர்களில் சிலர் அவ்வாறே செய்யும் நிலையில்  இருக்கின்றனர். ஆங்கிலம் தமிழுக்கடுத்துக் கற்க வேண்டிய மொழியேயன்றித் தமிழை விடுத்துக் கற்பதற்குரியதன்று ஒவ்வொரு தமிழரும் தமிழை முதன் மொழியாகவும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகவும் கற்றல் வேண்டும். கல்வி நிலையங்களில் அவ்வாறு கற்பதற்குரிய வசதிகளைச் செய்தல் வேண்டும்.

  இந்திய அரசு இந்தி மொழியை எல்லாரும் கற்க வேண்டுமென்று மறைமுகமாக வற்புறுத்தி வருகின்றது. ஆங்கிலம் இன்னும் சில ஆண்டுகள்தான் இந்நாட்டில் பயன்படுத்தப்படும் என்று அதற்குரிய கால வரையறை செய்யப்பட்டுள்ளது. இந்தி ஆங்கிலத்தின் இடத்தில் அமரப் போகின்றது. ஆனால் ஆங்கிலம் போன்று அனைத்து வளமும் பெற இன்னும் பன்னூறு ஆண்டுகள் சென்றாலும் அதனால் இயலுமா?

  தமிழ், தொன்மையும் வளமும் உடையது. ஆங்கிலமே தோன்றப் பெறாத காலத்தில் அஃது உயர் தனிச் செம்மொழியாக விளங்கியது. ஆங்கிலேயரைப் போன்று தமிழர்களும் திரைகடல் ஓடியும் செல்வம் ஈட்டினர்; கடல் கடந்தும் நாடுகளை வென்றனர். ஆனால் ஆங்கிலேயரைப் போன்று தம் மொழியைப் பிறர்மீது  சுமத்தவில்லை. சென்றனர்; வென்றனர்; திரும்பினர். தமிழரும் ஆங்கிலேயர் வழியைபிறரை அடிமைப் படுத்தும் வழியை மேற்கொண்டிருப்பின் இன்று தமிழும் உலகப் பொது மொழியாக ஆகும் தகுதியைப் பெற்றிருக்கும்.

  நாகரிக மக்கள் கற்க வேண்டிய மொழிகளுள் ஒன்று தமிழ் என்பதை யாரும் மறத்தல் இயலாது. உலக அரங்கில் இடம் பெறுவதற்கு முன்னர் அதன் பிறப்பிடமாம் இந்நாட்டில் அதற்குரிய இடத்தை அளித்தல் வேண்டும். பாரதக் கூட்டரசு செயல்முறை மொழிகளுள் ஒன்றாகத் தமிழை ஏற்கச் செய்தல் வேண்டும். பாரத மொழிகளின் தாயே  தமிழ்தான். தாயைப் புறக்கணித்து, மகளைப் போற்றும் மதியிழந்த மாந்தரைப்போல் இன்று தமிழைப் புறக்கணித்து இந்தியை அரியணையில் ஏற்ற முயல்கின்றனர். பழந்தமிழுடன் ஆரியம் வந்து கலந்ததனால் உண்டான விளைவே பாரத மொழிகளின் தோற்றம். ஆனால் பாரத மொழிகளின் தாய் ஆரியமே; தமிழும் அதன் புதல்விகளுள் ஒன்றே என்று கருதிவிட்டனர். வடவாரியம், இந்தோ ஐரோப்பியப் குடும்பத்தைச் சேர்ந்தது. பழந்தமிழோ தனிக்குடும்பத்தைச் சார்ந்தது. மொழிக்குடும்பங்களை ஆராயின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனி இயல்புகள் உள என்பதை அறியலாகும்.

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்