(இலக்குவனாரின் ‘பழந்தமிழ் – 42 : பழந்தமிழும் தமிழரும் தொடர்ச்சி)

பழந்தமிழும் தமிழரும் 3

 மக்கள் பல்லாண்டுகள் நல்வாழ்வு வாழ்ந்துள்ளனர். முதியோர் கையில் கொண்டிருந்த கோலே தொடித்தலை விழுத்தண்டு என்று கூறப்படுகின்றது. அத் தண்டினைக் கொண்டிருந்த முதியோர் தம் கடந்த கால வாழ்வை நினைந்து இரங்குகின்ற முறையில் பாடப்பட்டுள்ள பாடல் பல முறை படித்துச் சுவைக்கத் தக்கது.

            இனிநினைந்து இரக்க மாகின்று; திணிமணல்

            செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்

            தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து

            தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி

            மறையெனல் அறியா மாயம்இல் ஆயமொடு

            உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து

            நீர்நணிப் படிகோடு ஏறிச் சீர்மிகக்

            கரையவர் மருளத் திரையகம் பிதிர

            நெடுநீர்க் குட்டத்துக் துடுமெனப் பாய்ந்து

            குளித்து மணற்கொண்ட கல்லா இளமை

            அளிதோ தானே! யாண்டுஉண்டு கொல்லோ

            தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று

            இருமிடை மிடைந்த சிலசொல்

            பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே. (புறம்243)

  இப் பாடலைப் படிப்போர் உள்ளத்தில் தொடித் தலை விழுத்தண்டு என்ற தொடர் ஆழப் பதிந்து விட்டது. ஆகவே, இப் பாடலை இயற்றிய புலவரைத் தொடித்தலை விழுத்தண்டினர் என்று அழைத்தனர். அவ்வாறு அழைக்கத் தொடங்கவே அப் பெயரே அவர்க்குரிய பெயராக நிலைத்துவிட்டது. தொடித்தலை விழுத்தண்டினார் என்றனர். அப் புலவரின் இயற்பெயர் மறைந்து போய்விட்டது. மறந்தே விட்டனர்.

  நடப்பதற்குத் துணைபுரியும் ஊன்றுகோலை அழகுபடப் புனையும் கலையார்வம் பெற்ற தமிழர் நாகரிகத்தில் உயர்ந்தவராகத்தான் இருந்திருப்பர்  என்பதில் ஐயமும் உண்டுகொல்! செல்வச் சிறப்பு என்பது யாது? விரைந்து செல்லும் ஊர்திகளில் செல்லுதல், பிறரை ஏவல் கொள்ளும் ஆணை மொழிகளைப் பகர்தல் இவையே செல்வத்தின் சிறப்பு என இன்றும் கருதுவோர் உளர். ஆனால், பழந்தமிழர் அவ்வாறு கருதினாரிலர். அவர்கட்கு விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டப்பெற்ற தேர்களில் செல்லும் ஆற்றலும் இருந்தது; வளமும் வாய்ப்பும் கிடைத்தன. பிறர் அஞ்சி நடுங்குமாறு ஆணைகளைப் பிறப்பிக்கும் அரசு நிலையும் உண்டு. உள்ளத்தினும் விரைந்து செல்லும் குதிரை பூட்டப்பட்ட தேர்களில் சென்று மகிழ்ந்தனர் பலர். புலவர் நல்வேட்டனார் செல்வச் சிறப்பின் பயன் இவ்வளவு தானா? என்று எண்ணினர்  இல்லை  செல்வச் சிறப்பு இந் நிகழ்ச்சிகளில் இல்லை என்று உணர்ந்தார். தம்மை அடைந்தோர் துன்பங்கண்டு வருந்தி, இரக்கங் கொள்ளுதல் வேண்டும். அவர்கள் துன்புறுமாறு ஏதும் நிகழ்ந்துவிடுமோ என்று அஞ்சுதல் வேண்டும். இப் பண்புடையோரே சிறந்த செல்வமுடையவராவர். சான்றோர் இச் செல்வத்தையே செல்வம் என மதிப்பர் என்று மொழிந்தார்.

            நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்

            செல்வ மன்றுதன் செய்வினைப் பயனே

            சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்

            புன்கண் அஞ்சும் நண்பின்

            மென்கட் செல்வம் செல்வம்என் பதுவே

            (நற்றிணை210)

 செய்வினைப் பயன் என்பதற்கு முற்பிறவியில் செய்த வினையின் பயன் என்றும், இப் பிறவியில் நாம் செய்து வரும் ஆக்கத் தொழின் பயன் என்றும் பொருள் கொள்ளலாம். முற்பிறவியில் செய்த வினைகட்கு ஏற்ப இப் பிறவியில் பயன் பெறுகின்றோம் என்ற கொள்கை தமிழரிடமிருந்தே ஆரியர்க்குச் சென்றதாக ஆராய்ச்சியாளர் கூறுவர். இருக்கு வேதத்தில் இக் கொள்கை இடம்பெறவில்லையாம். கங்கைக் கரையைக் கடந்து சென்ற பிறகுதான் இக் கொள்கை அவர்கள் நூலில் இடம் பெற்றதாம். (As Aryan culture pressed further down the Ganges it absorbed new ideas about the after life).1

  ஆனால் செல்வத்தை வெறுத்திலர். ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் என்பதை நன்கு அறிந்தருந்தனர். செய்வினை கைம்மிக2 எண்ணுதலில் கருத்துச் செலுத்தினர். நட்டோர் இன்மையும் கேளிர் துன்பமும்3 போக்க ஆர்வம் கொண்டிருந்தனர். சுற்றத்தாரை என்றும் மகிழ்விக்கவும், நல்லிசையை வளர்க்கவும், அறம் பொருள் இன்பம் அடைய வேண்டுமெனின் பொருள் வேண்டுமெனவும் கருதி உழைத்தனர்.

            இசையும் இன்பமும் ஈதலும் மூன்று

            அசையுநர் இருந்தோர்க்கு அரும்புணர்வு இல்

என்று வினைவயிற் சென்றனர்; பொருளீட்டிப் புகழ்பட வாழ்ந்தனர்.

            கோடியர் நீர்மைபோல் ஆடுநர் கழியும் இவ்வுலகம்

என்று அதன் நிலையாமையை அறிந்திருந்தனர். ஆயினும் அதற்காகப் பெண் வேண்டா, மண் வேண்டா, பொன் வேண்டா என்று வெறுத்துத் தள்ளாது உரிய காலத்தில் தமக்குரிய வாழ்க்கைத் துணைவியைக் காதலில் மணந்தனர். அக்காலத்தில் காதல் மணத்திற்குத் தடையாக ஏதும் இருந்திலது. முன்பின் உறவின்றியே அன்புடை நெஞ்சத்தால் கலந்து ஈருடல் ஓருயிராய் வாழ்ந்தனர்.

+++

1   The wonder that was India : Page 242

2 குறுந்தொகை : 63 ;   3  அகம் : 279  

+++

            யாயும் ஞாயும் யாரா கியரோ

            எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

            யானும் நீயும் எவ்வழி அறிதும்

            செம்புலப் பெயல்நீர் போல

            அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனனே.1

எனக் காதலில் பிணிப்புண்ட காதலன் ஒருவன் தன் காதலியிடம் கூறுகின்றான். இப் பாடலை இயற்றிய புலவர் பெயரும் மறைந்துவிட்டது. செம்புலப்பெயல்நீர் என்ற உவமை எல்லார் உள்ளங்களிலும் நிலைத்துவிட்டது. இப் பாடல் இயற்றியோரையும் இத்தொடரால் செம்புலப் பெயல் நீரார் என்று அழைத்துவிட்டனர். இவ்வாறு மணக்கப்பட்ட தலைவியும்,

            இம்மை மாறி மறுமை யாயினும்

            நீயா கியர் என் கணவனை

            யானா கியர் நின் நெஞ்சுநேர் பவளே 2

என்று தன் உளமார்ந்த விருப்பத்தை வெளியிடுகின்றாள்.

  இப் பிறவியில் மட்டுமன்றி மறுபிறவியிலும் அவனே கணவனாக வேண்டும் என்ற விருப்பம் காதல் பிணிப்பையன்றோ எடுத்துக் காட்டுகிறது.

+++

  1. குறுந்தொகை : 40  ;  2 குறுந்தொகை : 49

+++

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்