இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 52 : அத்தியாயம் 11. தமிழ் மறுமலர்ச்சி 2/3
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 51 : அத்தியாயம் 11. தமிழ் மறுமலர்ச்சி 1/3 தொடர்ச்சி)
‘பழந்தமிழ்’
அத்தியாயம் 11. தமிழ் மறுமலர்ச்சி 2/3
ஆங்கிலம் இன்று உலகப் பொது மொழியாகக் கருதப்படும் நிலையை அடைந்துள்ளது. ஆங்கிலேயரை இந் நாட்டினின்றும் விரட்டியவர்கள்கூட ஆங்கிலத்தை விடமாட்டோம் என்று உறுதிபூண்டுள்ளனர். இந்தியர்க்கு ஆங்கிலமே கண்ணும் காதும் என்று கருதுகின்றனர் பலர். உலக மக்களில் பத்தில் ஒரு பகுதியினர் ஆங்கிலத்துக்கு உரியவராய் இருக்கின்றனர். . (English – speaking people constitute about one tenth of the world’s population – A History of English Language : Page 4). . இத்தகைய உயர்நிலையை அடைந்துள்ள ஆங்கிலம் ஒரு காலத்தில் அதன் நாட்டிலேயே இகழப்பட்டது. இலத்தீன் மொழியும் பிரெஞ்சு மொழியும் ஆங்கிலத்தின் இடத்தில் அமர்ந்து அரசு ஓச்சின. பின்னர் ஆங்கிலேயரிடத்தில் தோன்றிய மொழிப்பற்று வேற்று மொழிகளை அகற்றி ஆங்கிலத்திற்கு உரிய இடத்தை அளித்தது.
இலத்தீன் மொழி அரசோச்சியபோது அதனை விரும்பாத கல்விக்கூடத் தலைமையாசிரியர் ஒருவர் (Head master of the Merchant Taylor’s School ) தமது மொழிப் பற்றைப் பின்வருமாறு வெளிப்படுத்தினார். “… . . .கல்வியின் பொருட்டு ஒரு மொழிக்கு அடிமையாவது அடிமைத் தன்மைகளுள் பெரியதே யாகும். பிற மொழிகளைக் கற்பதனால் மிகுந்த நேரத்தை இழக்கின்றோம்; பிற மொழியால் பெறும் அதே செல்வத்தை நம் மொழியில் குறைந்த காலத்தில் பெறலாம். நம்முடைய மொழி நம் உரிமையையும் விடுதலையையும் வெளிப்படுத்துகின்றது. இலத்தீன் மொழி நம்முடைய அடிமைத் தன்மையையும் இழிவையும் நினைவூட்டுகின்றது. உரோம நகரை விரும்புகின்றேன்; ஆனால் இலண்டன் மாநகரை அதனினும் மிகுதியாக விரும்புகின்றேன். இத்தாலியைப் போற்றுகின்றேன்; ஆனால் ஆங்கிலத்தை நான் தொழுகின்றேன்(I honour the Latin; but I worship the English).” ஆங்கிலத்தைத் தொழுகின்றேன் என்று கூறியுள்ளமை நோக்கத்தக்கது. தமிழை வணங்குகின்றோம் என்றால் நகையாடும் நண்பர்கள் நல்லறிவு பெறட்டும். அரிய கலைகளை ஆங்கிலத்தின் வழியாகத்தான் கற்றல் வேண்டும் என்போர் அத் தலைமை ஆசிரியர் உரையை உளங்கொண்டு திருந்துவார்களாக.
கி.பி. 1356 இல் ஆங்கிலம் இலண்டன் மாநகரின் ஆட்சி மொழியாக ஆக்கப்பட்டது. 1362 இல் நீதிமன்றங்களில் வழக்குகள் ஆங்கிலத்திலேயே ஆயப்படவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. காரணம் என்ன கூறினார்கள் தெரியுமா? இந் நாட்டில் பிரெஞ்சு மொழி அறிந்தோர் பலராக இலர் என்றுதான் கூறினார்கள்.
மொழிப்பற்று மிக்க ஆங்கிலேயர் துணிந்து செய்தனர். தமிழர்க்கு மொழிப்பற்று ஆங்கிலேயரைப்போல் இருப்பின் துணிந்து செய்வர். மக்கட்பற்றும் இல்லை. கலை பயிலவும் ஆட்சி நடத்தவும் நம் மொழியே நன்று என்று ஆங்கிலேயர் அன்று கொண்டனர். இன்று ஆங்கிலம் உலகப் பொது மொழியாகும் உரிமையும் தகுதியும் பெற்றுள்ளது.
தூய தமிழ் என்றால் இன்று எள்ளுவோர்களும் உளர். ஆங்கிலத்தைப் பார் என்று அதன் கலப்புத் தன்மையைச் சுட்டிக் காட்டுவார்; ஆங்கில மொழியின் வரலாற்றை அவர் அறியார். அங்கும் தூய ஆங்கிலம் வேண்டுமென்ற இயக்கம் தோன்றியுள்ளது. தூய ஆங்கில இயக்கம் என்றே பெயரிட்டனர்(Society for pure English). அது 1913 இல் தொடங்கப்பட்டுள்ளது. தொடங்கியவர்கள் அந்நாட்டுப் பெரும் புலவர்கள். அதைத் தோற்றுவிக்க முதன்மையாய் இருந்தவர் அந்நாட்டு அரசவைப் புலவர்.
அதற்கு முன்பு அந் நாட்டில் வேற்று மொழிச் சொற்களை ஆங்கில மொழியில் கலப்பதை வெறுக்கும் கொள்கை உருவாகியது. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே வேற்றுமொழிச் சொற்கலப்பு வெறுப்பு அங்குத் தோன்றிவிட்டது. தெபோ (Defoe), திரைடன் (Drydon), அடிசன் போன்ற பெரும் புலவர்கள் பிறமொழிக் கலப்பை வன்மையாகக் கண்டித்தனர். 1711இல் அடிசன் தம் இதழில் (Spectator No.165) தெரிவித்துள்ள கருத்து நோக்கத்தக்கது. அக் கருத்து வருமாறு: “நம்முடைய சட்ட அமைப்பில் சட்டங்கள், உரிமைகள், வாணிபங்கள் முதலியவற்றைக் காக்க மேற்பார்வையாளர் நியமிக்க விதி இருக்கின்றது. அங்ஙனமே வேற்று மொழிச் சொற்கள் நம் மொழியில் வந்து கலவாமலிருக்குமாறு காக்க மேற்பார்வையாளர் நியமிக்கவும் விதி வேண்டும்.” கேம்பெல் ( Campbell) என்பவர் பின் வருமாறு கூறினார்: “பிறதுறைகளால் அழிவதைவிட, வேற்றுமொழிச் சொற்களால் அழிவது நம் மொழிக்குரிய பெரிய துன்பம் (Danger)”
இவ்வாறெல்லாம் கூறி ஆங்கில மொழியைப் போற்றி வளர்த்துள்ளனர் ஆங்கு.
ஈங்கு இன்று, தமிழ்வளர்ச்சி பற்றியும் பிறசொற்கலப்பினால் வரும் நன்மை பற்றியும் உரைப்போர் பலர்க்கு ஆங்கில மொழி வரலாறும் தமிழ் மொழி வரலாறும் தெரியாது. தெரிந்திருந்தால் பிறமொழிக் கலப்பால்தான் மொழி வளரும். அஃதே உண்மை மறுமலர்ச்சி என்று உரையார். மொழியானது சிறப்புற, மொழிக்குரியோர் சிறப்புற வேண்டும். முந்நூறு ஆண்டுகட்கு முன் ஆங்கிலம் உலகப் பொது மொழியாகும் என்று ஆங்கிலேயரே எண்ணிலர். ஆனால் ஆங்கிலம் இன்று அந்நிலையை அடைந்துள்ளது. அந்நிலையை அம்மொழி அடைந்தது ஆங்கிலேயரால் தான். அவர்கள் ஆட்சித்துறையிலும், அறிவியல் பகுதியிலும், திரைகடல் தாண்டி வாணிபம் செய்தலிலும், நாட்டுப் பற்று, உரிமைப் பற்று, மொழிப்பற்று முதலியவற்றிலும் சிறந்து விளங்கினமையால்தான் ஆங்கிலம் சிறப்படைய இயன்றது. ஆதலின் தமிழர்களும் பலவகைகளிலும் சிறந்தால்தான் தமிழ் மொழி சிறப்படைய இயலும். தமிழர்கள் தாம் சிறப்படைய முயல்வதோடு தம் மொழி பற்றியும் அறிந்துகொள்ள முயலுதல் வேண்டும்.
(தொடரும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்
Leave a Reply