(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 52 : அத்தியாயம் 11 தமிழ் மறுமலர்ச்சி 2/3 தொடர்ச்சி)

பழந்தமிழ்

அத்தியாயம் 11

தமிழ் மறுமலர்ச்சி 3/3

  மக்களுக்கும் மாக்களுக்கும் உள்ள வேறுபாடுகளில் ஒன்று பழமையைப்பற்றி அறிவதேயாகும். மக்களால் அறிய இயலும்; மாக்களால் அறிய இயலாது (It was observed by that remarkable twelth-Century Chronicler, Henry of Huntington that an interest in his past was one of the distinguishing characteristics of man as compared with the order animals- History of the English language). தமக்குப் பயன்படுகின்றவற்றுள் முதன்மையானது மொழி. பொருளியல், நாட்டு வரலாறு, அறிவியல் முன்னேற்றம், அரசியல் முதலியன பற்றி அறிய வேண்டியது இன்றியமையாதது என்று கருதுகின்றமை போன்று, தம் மொழியியல்பு, தோற்றம் வளர்ச்சி பற்றியும் தவறாது அறிய வேண்டும் என்ற எண்ணம் தமிழருக்கு உண்டாதல் வேண்டும். தம் எண்ணத்தையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்துவதற்குத் துணையாய் இருப்பது மொழிதானே? தம்முடைய தொழிலையும் அரசினையும் நடத்துவதற்குக் கருவாய் இருப்பதும் மொழிதானே? தாம் இன்னார் என்று அறிவிப்பதற்கும் பிறர் இன்னார் என்று அறிவதற்கும் இன்றியமையாது வேண்டப்படுவது மொழிதானே? ஆதலின் அம்மொழி பற்றி ஒவ்வொருவரும் அறிந்திருத்தல் தவிர்க்க முடியாதது என்ற எண்ணம் உண்டாக வேண்டும் (…it is reasonable to assume that the liberally educated man should know something of the structure of his language, its position in the world, and its relation to other tongues, the wealth of its Vocabulary and in general the great political social and cultural influences which have combined to make his language what it is).  கல்வித் திட்டமும் அவ்வாறு தம் மொழிபற்றி அறிவதற்குரிய வாய்ப்பினை நல்க வேண்டும்.

   தமிழ்மொழி இனிமையானது; தொன்மையானது; வளமானது; கற்பதற்கு எளிமையானது என்பனவெல்லாம் தமிழர்களே யறியார். தமிழ் இந்திய மொழிகளின் தாய்; ஏன் உலக மொழிகளின் தாய் என்ற உண்மையைத் தமிழர்களே அறிந்திலர். தமிழ்நாட்டளவிலும் எல்லாத் துறைகளிலும் பயன்படு கருவியாய் அது அமைந்திலது. அமைவதற்குரிய முயற்சியில் தமிழர்கள் ஈடுபடல் வேண்டும். தமிழ் மீண்டும் மலர்ச்சி பெறுவதற்குரிய வழி இதுதான்.

  கல்வி மொழியாகவும், கடவுள் வழிபாட்டு மொழியாகவும் அரசாள் மொழியாகவும், அறிவியல் மொழியாகவும், தமிழ் ஆகும் நாளே அது மீண்டும் மலர்ச்சி பெற்ற நாளாகும்.

   தமிழின் எதிர்காலம் என்ன? சமயத் துறையில் வடமொழிக்கும், அரசியல் துறையில் இந்திக்கும் உலகியல் துறையில் ஆங்கிலத்திற்கும் இடம் அளித்துவிட்டு வீட்டளவில் நின்றுவிடுவதுதான் தமிழுக்குரிய தலைவிதியா? வீட்டளவிலும் பல வேற்று மொழிச் சொற்களின் கலப்பால் ஆகிய கலவை மொழிதான் இடம்பெறும். அவ்வாறாயின் தமிழ் மெல்ல இனிச் சாகும் என்றுதான் கொள்ள வேண்டும். தமிழர் இருக்கத் தமிழ் மறைந்தது என்றால் அதனினும் நாணத்தக்க இழிவு வேறொன்றும் இன்று. தமிழர் உயர்தல் வேண்டும்; உலக நாடுகளின் மன்றத்தில் தமிழர் இடம் பெற்றால் தமிழும் அங்கு இடம் பெறல் வேண்டும். ஆனால் தமிழர்களில் சிலர் தாம் உயர முயல்கின்றனர்; தமிழ் உயர விரும்பிலர். தம் உயர்வுக்குத் தடையெனக் கருதுகின்றனர். வெளிநாட்டுப் பெருந்தலைவர்கள் எல்லாரும் எங்குச் சென்றாலும் தம் மொழியிலேயே பேசுகின்றனர். ஆனால் தமிழர்களோ தம் நாட்டிலேயே தமிழில் பேசுவதற்குக் கூச்சப்படுகின்றனர். தமிழில் பேசுதற்கு நாணுறும் தமிழன், தமிழனாகப் பிறந்ததற்கும் நாண வேண்டியவனே. வையம் அளந்த தமிழ், வானம் அளந்த தமிழ் என்று கூறிக்கொண்டு தம் வயிற்றை அளந்து கொண்டிருந்தால் தமிழ் வளர்ந்து மறுமலர்ச்சி பெற்றுவிடாது.

   எத்துறையில் உள்ளவர்களும் தம் கருத்து அறிவிக்கும் கருவி தமிழே என்று கொள்ளல் வேண்டும். தமிழில் முடியாதது, தமிழால் முடியாதது யாதும் இன்று என்ற துணிவு பிறத்தல் வேண்டும். உரையாடும் போதும் எழுதும்போதும் திருத்தமாக இனிய தமிழைப் பயன்படுத்துவோம் என உறுதி கொள்ளல் வேண்டும். நம் நாட்கடன்களுள் ஒன்றாகத் தமிழ் இலக்கியங்களுள் ஒன்றைப் பயிலும் வழக்கத்தைக் கொள்ளுதல் வேண்டும். வேளை தவறாது உண்ணுதலில் கருத்துச் செலுத்துதல் போன்று நாள் தவறாது தமிழ்நூல் கற்றறிலும் நாட்டம் கொள்ளுதல் வேண்டும். தமிழராகப் பிறந்தவர்கள் தொல்காப்பியத்தையும், திருக்குறளையும் பயிலாது சாதல் கூடாது. இரண்டும் தமிழரின் இரு கண்களாகும். இரண்டையும் பயிலாதவர்கள் இரு கண்களும் அற்றவர்களே.

   தொல்காப்பியத்தைக் கற்கும் பேறு பெறாது போயினும் திருக்குறளையாவது நாள்தோறும் பயில வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு குறள் வீதம் கற்று அதனை உள்ளத்தில் கொண்டு ஒழுகினாலே தமிழும் மலர்ச்சி பெறும்; வாழ்வும் மலர்ச்சி பெறும்.

        ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும்

          பாயிரத்தி னோடு பகர்ந்ததன்பின்  போயொருத்தர்

          வாய் கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவர்

          ஆய்க் கேட்க வீற்றிருக்கல் ஆம்.

  திருக்குறளைக் கற்பதனால் தமிழ்ப் புலமையும் உண்டாகும். வாழ்வும் செம்மையுறும். புலமையும் செம்மையும் வாழ்வில் பொருந்துமேல் அவ்வாழ்வே மலர்ச்சி பெற்ற வாழ்வாகும். மலர்ச்சி பெற்ற வாழ்வினையுடையோர் மொழியும் மலர்ச்சி பெறும். தமிழர் மலர்ச்சியே தமிழின் மலர்ச்சி. தமிழின் மலர்ச்சியே தமிழிரின் மலர்ச்சி. மொழியும் வாழ்வும் ஒரு காசின் இரு புறங்கள் போன்றன. ஆதலின் இன்பத் தமிழை வளர்ப்போம் இனிய வாழ்வினைப் பெறுவோம். வாழ்க தமிழ்; வளர்க நலம்.

நிறைவு

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்