தமிழ்ப் போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாருக்கு அவரின் தமிழ்ப் பணிகளுக்காகவும் தமிழ்ப் புலமைக்காகவும் வழங்கப் பெற்ற விருதுகளும் பட்டங்களும் நூற்றுக்கு மேற்பட்டன.

இந்த அளவிற்கு வேறு எந்த அறிஞரும் சிறப்பிக்கப் பெறவில்லை.

அவரைப் பற்றிய 1.) இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர் 2.) குறள்நெறி பரப்பும் கொள்கை வீரர், 3.)  குறள்நெறிக் காவலர், 4.)  குறள்நெறிச் செம்மல் முதலிய பட்டங்கள் பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் புலமையையும் திருக்குறள் பணிகளையும் தெரிவிப்பன.

குறள்நெறி அறிஞர் பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகளைப் பின்வரும் வகைப்பாட்டில் காணலாம்.

அ.) திருக்குறள் பரப்பியலாக்கப் பணிகள்

ஆ.) திருக்குறள் ஆய்வியலாக்கப் பணிகள்

இ.) திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்

ஈ.) யாரும் செய்யாத திருக்குறள் சாதனைகள்

அ.) திருக்குறள் பரப்பியலாக்கப் பணிகள்

இலக்குவனார் பள்ளிப் பருவத்திலேயே திருக்குறளில் ஈடுபாடு காட்டி அனைத்துத் திருக்குறள்களையும் மனப்பாடம் செய்து விட்டார்.

பள்ளி நிகழ்ச்சிகளில் பேசும் பொழுது திருக்குறளையும் மேற்கோளாகக் காட்டிப் பேசினார்.

மாலை நேரங்களில் அல்லது விடுமுறை நாள்களில் ஊரார் கூடியிருக்கும் இடத்தில் திருக்குறளைப் பற்றிப் பேசிப் பரப்பினார்.

ஊர்ப்பெரியவர்கள் “நம்மூர்ச் சிறுவன் அழகாகப் பேசுகிறானே! கேட்டு ஊக்கப்படுத்துவோம்” என்று ஆர்வமுடன் கேட்டு மகிழ்ந்தனர்.

இவரது பேச்சைக் கேட்டும் இவருக்குக் கிடைத்த பாராட்டுகளைப் பார்த்தும் பிற மாணா்கருக்கும் திருக்குறள் மீது ஆர்வம் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாகக் கல்லூரி மாணாக்கனாகப் புலவர் பட்டம் பயிலும் பொழுது நண்பர்கள் மூவரைச் சேர்த்துக் கொண்டு அக்கம் பக்க ஊர்களுக்கெல்லாம் சென்று திருக்குறளைப் பரப்பினார்.

உடன் தொல்காப்பியம் சங்க இலக்கியச் சிறப்புகளையும் பரப்பினார்.

திருக்குறள் பற்றிய வினாக்கள், புதிர்கள், போட்டிகள், திருக்குறள் நூல் பரிசாக அளித்தல் மூலம் மாணவர்களிடம் திருக்குறள்பால் நாட்டத்தை உண்டாக்கினார்.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பணியில் சேர்ந்த பின்னும் விடுமுறைதோறும் கால அட்டவணை போட்டு ஊர் தோறும் சென்று திருக்குறளைப் பரப்பினார்.

உடன் தமிழின் சிறப்பு தொல்காப்பியம், சங்க இலக்கியம் முதலான தமிழ் இலக்கியச் சிறப்பு, தமிழர் தமிழறிந்த தமிழராய் வாழவேண்டியதன் இன்றியமையாமை முதலியவற்றையும் பேசித் தமிழ் உணர்வையும் மொழியறிவையும் இலக்கிய அறிவையும் ஊட்டினார்.

தாம் பணியாற்றிய கல்வியகங்களில் எல்லாம் திருவள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் ஆண்டுதோறும் விழாக்களை நடத்தி மாணாக்கர்களுக்குத் தமிழ் உணர்வை உண்டாக்கினார்.

தாம் பணியாற்றிய கல்லூரிகளில் ஆண்டுதோறும்‌ “முத்திறப்‌ பொருளின்‌ மும்மை நெறியில்‌ மக்கள்‌ சென்று மாண்புறு வாழ்வின்‌ இன்பம்‌ துய்த்திட இன்னெறி காட்டிய வாழ்வியல்‌ வல்லுநர்‌ வள்ளுவர்‌ திருநாள்‌” (‘துரத்தப்பட்டேன்’) நடத்தினார்.

தொல்காப்பியர்‌ திருநாள்‌, திருவள்ளுவர்‌ திருநாள்‌, இளங்கோவடிகள்‌ திருதாள்‌, ஒளவையார்‌ திருநாள்‌, தமிழ்‌ மறுமலர்ச்சி நாள்‌ என்று மொத்தம் ஐந்து விழாக்கள்‌ நடத்தினார்.

விழாக்கள் மூலம் தமிழ்ப் புலவர்கள் சிறப்பையும் தமிழின் சிறப்பையும் உணர்த்தியதுடன் தனித்தமிழ்ப் பற்றையும் விதைத்தார்.

இவ்விழாக்கள் மூலமும் திருக்குறள் கருத்துகளைப் பரப்பினார். இவ்விழாக்கள் தொடரவும் நிலையான ஏற்பாட்டை  உருவாக்கினார்‌.

பாடலாயினும் கட்டுரையாயினும் தம் படைப்புகளில் திருக்குறளை முழுமையாக அல்லது குறள் தொடராகப் பயன்படுத்தியே எழுதுவார்.

“இன்னாமை இன்பம்‌ எனக்‌ கொளின்‌ ஆகும்‌ தன்‌ ஒன்னார்‌ விழையும்‌ சிறப்பு எனும்‌ தமிழ் மறையின்‌ இன்மொழிக்கேற்ப எவரும்‌ போற்றும்‌ இனிய தலைவராய்‌ ‌நேரு விளங்கினார்‌” எனத் திருக்குறளை மேற்கோளாக்கி நேருவின் பண்பினை வெளிப்படுத்துகிறார்.

சொலல்வல்லர்‌; சோர்விலர்‌; அஞ்சார்‌; சொல்லுறு

கலைகள்‌ போற்றும்‌ காவலர்‌; கட்டுரை வன்மையர்‌; பகைவரும்‌ நண்பராய்ப்‌ பண்புடன்‌ பொருந்த

அமைதி நாடிய அரசியல்‌ அறிஞர்‌;

உள்ளத்‌ தூய்மையர்‌; உணர்ச்சிப்‌ பெருக்கினர்‌;

என்று

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது.   (திருக்குறள், ௬௱௪௰௭ – 647)

என வரும் திருக்குறளில் இருந்து தொடரைக் கையாண்டுள்ளார்.

புரவலர் அண்ணல் சுப்பிரமணியனார் அவர்களைத் தலைவராகவும் பேரா.சி. இலக்குவனாரைச் செயலராகவும் கொண்ட திருவள்ளுவர் கழகம் என்னும் அமைப்பை நிறுவினார்.

அண்ணலாரால் வள்ளுவர் பதிப்பகம் நிறுவப்பட்டுப் பேராசிரியரின் திருக்குறள் நூல்களும் பிற நூல்களும் வெளியிடப்பட்டன.

திருக்குறள் கழகம் மூலம் இலக்குவனார் வாரந்தோறும் திருக்குறள் சொற்பொழிவுகள் நடத்தினார்; மக்களிடையே இதற்குப் பெரிதும் வரவேற்பு இருந்தது.

தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி, இது குறித்துப் பாராட்டி ‘விடுதலை’ நாளிதழில்  செய்தி வெளியிட்டிருந்தார்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலையில் 8-30 மணிக்குத் தொடங்கி முறையாகக் குறள்வகுப்பு நடைபெற்று வருகின்றது.

நூற்றுக்கணக்கான மாணவர்களும் பெரியோர்களும் வந்து கேட்கின்றார்கள், மாலையில் 6-30 மணிக்குத் தொடங்கிச் சொற்பொழிவு நடைபெற்று வருகின்றது.

ஒலிபெருக்கி அமைக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் ஆங்காங்கு இருந்து சொற்பொழிவைக் கேட்கின்றனர்.

குறளிடத்தில் மக்களுக்கு ஆர்வம் உண்டாகி ஞாயிற்றுக்கிழமை வருவதை எதிர்பார்த்திருக்கின்றனர்.

இவ்வாறு தொடர்ச்சியாக ஞாயிறு தவறாமல் ஒலிபெருக்கியுடன் சொற்பொழிவுகள் ஆற்றியமை முற்றிலும் புதுமையாகும்.

இராமாயணம், பாரதம் போன்ற புராண நூல்களைத்தான் இதுவரை தொடர்ச்சியாகக் காலட்சேபம் செய்து வந்துள்ளமை அறிவோம்.

ஒரு நீதிநூலைத் தொடர்ச்சியாகச் சொல்லுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கேட்பதும் என்றால் எங்கும் காணாத புதுமை என்றுதான் கூறுதல் வேண்டும்.”

‘குறள்நெறி’ என்னும்‌ பெயரில்‌ தனிச்சுற்று இதழையும் நடத்தினார்.

“குறள்நெறி ஓங்கின்‌ குடியரசு உயரும்‌” என்று குறள்நெறியை உயர்த்தும் முழக்கத்தைப் பரப்பினார்.

இம் முழக்கத்தை தமது குறள்நெறி இதழின்‌ முகப்புப்‌ பக்கத்தில்‌ இடம்‌ பெறச்‌ செய்து வந்தார்‌.

சில பாடல்களிலும் இம்முழக்கம் இடம் பெறச் செய்தார். சான்றாகப் பொங்கல்‌ வாழ்த்துப்‌ பாடலில் இடம் பெற்றதைப் பார்ப்போம்.

‘குறள்நெறி’ ஓங்கி குடியர சுயர்ந்து

பசியும்‌ பிணியும்‌ பகையும்‌ நீங்கி

வசியும்‌ வளனும்‌ சுரந்து வாழியர்‌

வையகம்‌ வாழ்க; வான்தமிழ்‌ வெல்க;

இசைப் பாடல்களை இயற்றினார். நிகழ்ச்சி மேடைகளிலும் இப்பாடல்கள் இடம் பெற்றன. திருக்குறளை இசைப்பாடல் மூலம் பரப்பியதற்குச்சான்றாக ஒரு பாடலைப் பார்ப்போம்.

“கற்றதனால்‌ பயன்‌ என்ன – கலைபல நற்றமிழ்ச்‌ செல்வர்காள்‌ (கற்ற) இடைநிலை பெற்ற கல்வியின்‌ பயன்‌ பேரிறைவன்‌ தாளை உற்றவர்‌ அன்புடன்‌ உறுதியாய்த்‌ தொழுவதே (கற்ற) இறுதிநிலை இருவினை இடும்பைகள்‌ என்றுமே அடையா கருவினில்‌ வருவதும்‌, கவலையும்‌ இலையாம்‌ இருநில மிசைதனில்‌ என்றுமே வாழ்வாம்‌ அருள்மிகு இறைவனை அன்புடன்‌ தொழாவிடில்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.   (திருக்குறள் ௨ – 2)

என்னும் திருக்குறளை இசைப்பாடல் மூலம் மக்களிடையே கொண்டு சென்றார்.

(தொடரும்…)

  • இலக்குவனார் திருவள்ளுவன்

03.09.2026 – தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனாரின் 53 ஆவது நினைவாண்டு

  • தாய் மின்னிதழ் 02.09.26