ல கரத்தை rh எனக் குறிப்பிடுவோம்!- இலக்குவனார் திருவள்ளுவன்

ல கரத்தை rh எனக் குறிப்பிடுவோம்!
லகர, ளகர, ழகரங்களை ஆங்கிலத்தில் எவ்வாறு நாம் வேறுபடுத்திக் குறிக்கலாம்?
தமிழில் இவற்றை நாம் எவ்வாறு குறிப்பிடுகிறோம் என முதலில் பார்ப்போம்.
ல – நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். இது ‘வ’ போல இருப்பதால் ‘வகர லகரம்’ என்கிறோம். எழுத்து மேல்நோக்கி முடிவதால் மேல்நோக்கு லகரம் என்றும் சொல்வர்.
ள – நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும். இதனைப் பொது ளகரம் என்கிறோம். இது ‘ன’ போல இருப்பதால் ‘னகர ளகரம்’ என்றும் கூறுவர். எழுத்து கீழ்நோக்கிமுடிவதால் கீழ் நோக்கு ளகரம் என்றும் சொல்வர்.
ழ – நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் ழகரம் தோன்றும். ழ தமிழுக்கே சிறப்பானது. எனவே இதனைச் சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம். இது ‘ம’ போல இருப்பதால் ‘மகர ழகரம்’ என்றும் கூறுவர்.
பொதுவாக
லனா/லாவன்னா/லகாரம் என்றும்
ளனா/ளாவன்னா/ளகாரம் என்றும்
ழனா/ ழாவன்னா/ ழகரம் என்றும் குறிப்பர். இருப்பினும் ஒலிப்பில் குறைபாடு ஏற்படலாம் எனக் கருதுவோர் இலக்கண அசிரியர் குறிப்பதுபோல் மேலே தெரிவித்தவாறு குறிப்பர்.
எழுத்தின் பெயர்களைக் குறிக்கையில் இது சரி. ஆனால் பிறமொழியில் எழுதும்பொழுது எவ்வாறு வேறுபடுத்திக் காட்டுவது? குறிப்பாக இப்போது நாம் ஆங்கிலத்தில் குறிப்பதைப் பார்ப்போம். ஆங்கிலத்தில் லகர, ளகர, ழகரங்களுக்கு L/l என ஓரெழுத்தையே பயன்படுத்துகிறோம். இதனால் குழப்பம் வருகிறது.
ல (Lakaram) la
ள (Lakarum) l’a
ழ (Zhakaram) l”a
என்று ஒரு சாரார் குறிப்பர். சிலர் எழுத்துமேல் அல்லது கீழே புள்ளி அல்லது கோடிட்டு வேறுபடுத்துவர். இவற்றில் ஒற்றுமை இல்லை.
சிறப்பு ழகரத்திற்குப் பேரா.முனைவர் சி.இலக்குவனார் zha எனப் பயன்படுத்த அறிமுகப்படுத்தினார். கற்றவரிடையே இஃது அறியப்பட்டிருந்தாலும் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை. எனவே, இதனை நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டும். அதற்கு முதற்கட்டமாக அரசு தமிழ்நாடு என்பதை THAMIZHNAADU என்றே குறிக்க ஆணை பிறப்பிக்க வேண்டும். TAMILNAD என்று சொல்லவும் தடை விதிக்க வேண்டும். இதனால் இயல்பாகவே சிறப்பு ழகரத்திற்கு ஆங்கிலத்தில் zha எனக் குறிக்க வேண்டும் என்பதை அனைவரும் அறிந்து பயன்படுத்துவர்.
இவை தொடர்பில் லகரத்திற்கு rh எனப் பயன்படுத்தலாம் என நீண்ட நாளாக எனக்கு எண்ணம் உண்டு. நண்பர் பேரா.தங்க.மாரியப்பன் இவற்றை வேறுபடுத்த ஏதும் குறிப்பு தந்தால் அனைவரிடமும் பரப்பி அவ்வாறே நாம் பயன்படுத்தலாமே என்றார். நான் இக்கருத்தைக் குறிதததும் இஃது ஏற்கத்தக்கதாகத்தான் உள்ளது. நாம் பயன்படுத்திப் பரப்புவோம் என்றார்.
ல என்பதற்கு rh எனக் குறிப்பதன் காரணத்தையும் நான் தெரிவித்தேன்.
புணர்ச்சி விதியில் ‘ல்’, ‘ற்’ ஆக மாறுவது இயற்கை.
சான்றுக்குச் சில சொற்களைப் பார்ப்போம்.
கல்+கண்டு=கற்கண்டு; கல்+கோயில்=கற்கோயில்; கல்+கோபுரம்=கற்கோபுரம்; கல்+குவியல்=கற்குவியல்; கல்+சட்டி=கற்சட்டி; கல்+சிலை=கற்சிலை; நல்+கனி=நற்கனி; நல்+சுழி=நற்சுழி; நல்+கதி=நற்கதி; நல்+குடி=நற்குடி; நல்+குணம்=நற்குணம்; நல்+செய்தி=நற்செய்தி; நல்+புதல்வன்=நற்புதல்வன்; நல்+புதல்வி=நற்புதல்வி; நல்+பயன்=நற்பயன்; நல்+பொழுது=நற்பொழுது; பல்+காறை=பற்காறை; பகல்+பொழுது=பகற்பொழுது; பல்+பசை=பற்பசை; பல்+கறை=பற்கறை; பல்+காவி=பற்காவி; பல்=பல=பற்பல; பல்+குச்சி=பற்குச்சி; கல்+கந்து=கற்கந்து; கல்+பலகை=கற்பலகை; மல்+போர்=மற்போர்; மல்+கூத்து=மற்கூத்து; விரல்+கிடை=விரற்கிடை; விடியல்+காலை=விடியற்காலை; விடியல்+பொழுது=விடியற்பொழுது என்பனபோல் வரும்.
அதே நேரம் தன்புகழ்ச்சி>தற்புகழ்ச்சி, தன் பெருமை> தற்பெருமை, தன்காலம்>தற்காலம், தன்+சமயம்>தற்சமயம் என்பனபோலும் வரும். எனினும் நாம் பெரும்பான்மையாக வரும் லகர மாற்றத்தை மட்டும் பார்ப்போம்.
லகரம் றகரமாக மாறுவதால் லகரத்தைக் குறிக்க ஆங்கில r பயன்படுத்தலாமா?ஆனால் r என்றால் ற என வந்து விடும். எனவே rh எனலாம்.
கலைச்செல்வி > karhaicherhvi;
கலைமாமணி > karhai maa mani;
மலைச்சாமி > marhaichamy
நல்லப்பன்> >narhrhappan;
நல்லுச்சாமி > narhrhuchamy
எனக் குறிப்பிடுவோம்.
தொடக்கத்தில் இடராகத் தோன்றும். பயன்படுத்தப் பயன்படுத்த எளிதாக மாறும்.
எனவே, லகரல, ழகர, ளகரங்களைப் பின்வருமாறு ஆங்கிலத்தில் அடையாளப்படுத்துவோம்.
லகரம்
ழகரம்
ளகரம்
தமிழார்வலர்கள் இது குறித்த ஏற்பை, மறுப்பை, மாற்றுக் கருத்தைத் தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
– இலக்குவனார் திருவள்ளுவன்







Leave a Reply