thamizhaga-chattamandram

eezham-with-prapakaran01

ஈழத்தீர்மான விளக்கப் பரப்புரை மேற்கொள்க!

  வரலாற்றில் இடம் பெறக்கூடிய, தமிழகச் சட்டமன்றத்தின் குறிப்பிடத்தக்க நாளாக ஆவணி 30, 2046 / செப்.16, 2015 அமைந்துள்ளது. அன்றுதான் முதல்வர் புரட்சித்தலைவி செ.செயலலிதா, ஈழத்தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் நம்பிக்கையும் ஆறுதலும் தரும் வகையில் தனியாள் தீர்மானம் ஒன்றைக் கொணர்ந்து நிறைவேற்றினார். தமிழ் ஈழ மக்கள் எண்ணற்ற சாலியன்வாலாபாக்(கு) படுகொலைக்கும் மேலான இனப்படுகொலைச் சதியால் மாண்டு போயினர். ஆனால், இதனை இனப்படுகொலை என்று சொல்லக்கூட உலக நாடுகள் அஞ்சுகின்றன. நடுநிலை என்று சொல்லிக் கொள்வோரும் போர்க்குற்றம் என்று சொல்லி அப்போர்க்குற்றத்தை இனப்படுகொலைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றிய விடுதலைப்புலிகளும் செய்ததுபோல் கூறி வருகின்றனரே தவிர, உண்மையை உரைப்பதில்லை. தமிழ்நாட்டில் இனப்படுகொலை எனப் பேசும் சிலரும் ஆவணமாக அமையக்கூடிய இடங்களில் அவ்வாறு குறிப்பதில்லை. எழுச்சிமிகு வைகோ முதலான சிலர்தான் இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ் ஈழமே ஈழத்தமிழர்களுக்குத் தீர்வு என்றும் சொல்லி வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டின் சட்ட மன்றத்தின் தீர்மான வடிவில் இனப்படுகொலை என்பதைக் குறிப்பிட்டும் கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பன்னாட்டு உசாவல் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவித்து நிறைவேற்றப்பட்டுள்ளது, தமிழ்நாட்டு மக்களின் குரல் என்ற அளவில் எல்லாவற்றிற்கும் மேலானதாக அமைகிறது. கொலைக்கூட்டாளிகளின் கட்சி உறுப்பினர்கள் இருந்தாலும் (அவர்கள் தலைமைக்குக் கட்டுப்பட்ட வாய்மூடிகளாயிற்றே! வேறுவழியின்றி அவர்களின் தலைமையும்) உண்மையின் பக்கம் நிற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். என்றபோதிலும் அவ்வாறு தீர்மானத்திற்கு ஆதவராக இருந்த அவர்களுக்கும் பாராட்டு. ஆதரவு தெரிவித்த பிற கட்சியினுக்கும் பாராட்டு.

  இதன்படி, “ஒட்டு மொத்தத் தமிழினத்தின் இலட்சியத்திற்கும், இலங்கை வடக்கு மாகாண அவையின் தீர்மானங்களுக்கும் வலு சேரக்கும் வகையிலும், இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்யும் வகையிலும், இலங்கையில் உள்நாட்டுப் போர் நடை பெற்ற போது பன்னாட்டுச் சட்டம், செனிவா ஒப்பந்தம் ஆகியவற்றில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி போர்க் குற்றங்களும் இனப் படுகொலைகளும் நிகழ்த்தியவர்கள் அனைவர் மீதும் பன்னாட்டு உசாவல் நடத்தும் வகையிலான வலுவான தீர்மானத்தினை இந்தியாவே ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழு முன்பு அமெரிக்கா உள்பட மற்ற நாடுகளுடன் இணைந்து கொண்டு வர வேண்டும் என்றும், அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்தால், அதனை மாற்ற அரசியல்தந்திர முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்” இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.

  உலகின்தலைமை வல்லரசு நாடான அமெரிக்காவின் போக்கிற்கு எதிரான தீர்மானம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரசு போலவே தமிழர் நலனுக்கு எதிரான பா.ச.க. ஆட்சிதான் மத்தியில் உள்ளது. இருப்பினும் ஈழத்தமிழர் ஆதரவு நிலை எடுக்குமாறு அதனிடம் கேட்டுள்ளது.

  சிங்கள இலங்கைக்காக இந்திய அரசுதான் போர் தொடுத்துத் தமிழ் ஈழமக்களை அழித்தது எனப் பன்முறை பல்வேறு நிலையிலுள்ள சிங்களத் தலைவர்களும் அதிகாரிகளும் கூறியுள்ளனர். ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத மத்திய அரசில் இத்தீர்மானத்தால் எந்த வகை நன்மையும் விளையப் போவதில்லை என்பது உண்மைதான். அதற்காக நாம் உண்மையின் பக்கம் குரல் கொடுக்காமல் இருக்க முடியாதல்லவா? இனப்படுகொலையால் உயிரிழந்த குடும்பங்களில் எஞ்சி நிற்பவர்களுக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், உடலுறுப்புகள், உடைமைகள், நிலபுலன்கள், வசிப்பிடங்கள் எனப் பலவற்றை இழந்தும், இன்னும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி வரும் ஈழத்தமிழர்களுக்கும் அவர்களுக்கெல்லாம் குரல் கொடுத்து வரும் புலம் பெயர் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழ் மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை உணர்வை ஊட்டும் அல்லவா? கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் வாயிலாகக் குரல் கொடுத்துவரும் பாராட்டிற்குரிய செயல்களைப் போல் அனைத்துக் கட்சி உறுப்பினர்களாலும் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்படுவது பெரிதும் மகிழ்ச்சிக்குரியது அல்லவா?

  முன்மொழிவின்பொழுது முதல்வர் குறிப்பிட்டவாறு, “மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் மத்திய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி வைகாசி 25, 2042 / சூன் 08, 2011 அன்று ஒருமனமாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள தமிழ்நாட்டின் சட்ட மன்றம் உலகத் தமிழ் மக்களின்   உணர்வுகளை எதிரொலிக்கும் வண்ணம் இத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

  இதனைத் தொடர்ந்து, பங்குனி 14, 2044 / மார்ச்சு 27, .2013 அன்று “இலங்கை நாட்டை ‘நட்பு நாடு’ என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இலங்கை இனப்போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை-போர்க் குற்றங்கள் குறித்துத் தன்னுரிமையான, நயன்மையான பன்னாட்டுப் புலன் உசாவல் நடத்திடவும் இந்தப்பன்னாட்டு உசாவல் அடிப்படையில், போர்க் குற்றம் நிகழ்த்தியவர்கள், பன்னாட்டு நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும்; தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும்; ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ‘தனி ஈழம்’ குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும்; ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் மத்திய அரசை வலியுறுத்தித் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததன் தொடர்ச்சியான தீர்மானமாக இத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

  ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றி வருவதுடன் இப்போதும் ஒருமனமாக ஈழ ஆதரவுத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள தமிழக முதல்வருக்கும் தமிழ்நாடுச் சட்ட மன்றப் பேரவைக்கும் உளமார நம் பாராட்டுகள் உரித்தாகுக!

  அதே நேரம் தீர்மான விளக்கக் கூட்டங்கள், இந்தியத் துணைக்கண்டத்து அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுவதே தீர்மானத்திற்கு வலு சேர்ப்பதாக அமையும். இல்லையேல், ஆறுதலுக்கான பயனற்ற தீர்மானமாகவே இஃதமையும். எனவே, தமிழக முதல்வர் அனைத்துக் கட்சியினரும் தமிழ் இயக்கத்தினரும் தமிழ் அமைப்பினரும் இணைந்த கூட்டுக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். இதன் மூலமாக ஈழத்தமிழர்கள் தன்னுரிமை குறித்தும் இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டிய கட்டயாம் குறித்துமான விளக்கக் கூட்டங்களைப் பிற மாநிலங்களில் நடத்த வேண்டும்.

  அனைத்துமொழிகளிலுமான துண்டறிக்கைகள், சிறு வெளியீடுகள், குறும்படங்கள், காணொளிகள் மூலமாக அந்தந்த மாநிலங்களில் மனித நேயர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள், அரசியல் வாதிகள், மக்கள் சார்பாளர்கள், முதலான அனைத்துத் தரப்பாரிடமும் விளக்கித் தமிழகச் சட்டமன்றத் தீர்மானங்கள் செயல்வடிவம் பெறவும் அதன் மூலம் ஈழத்தமிழ்மக்களைக் கண்மூடித்தனமாகக் கொத்துக் குண்டுகள் மூலமாகவும் வேதயில் குண்டுகள் மூலமாகவும் பிற வகைகளிலும் கொன்றொழி்த்த இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்படவும் தமிழ் ஈழம் மலரவும் வழி காண வேண்டும்.

  தமிழ் ஈழ ஆதரவு முழக்கங்கள் தமிழ்நாட்டிற்கு வெளியேயும் ஒலித்தால்தான் தம் இன்னுயிர் நீத்த போராளிகள், பொதுமக்கள் கனவு நனவாகும். எனவே, அதற்கான நடவடிக்கையைத் தமிழக முதல்வர் அவர்கள் எடுக்க வேண்டும்.

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்

(தெய்வப்புலவர் திருவள்ளுவர், திருக்குறள் 462)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

#தமிழே விழி! தமிழா விழி!#

                இதழுரை

(அகரமுதல 97, புரட்டாசி 3, 2046 / செப். 20, 2015)

Akaramuthala-Logo