சடங்காகிப்போன வீர வணக்க நாள் 

 

தாய்மொழியாம் தமிழ் மொழியின் உரிமை காக்கத் தீயுண்டும் நஞ்சுண்டும் சிறைப்பட்டும் உயிர்நீத்த மாமறவர்களின் நினைவைப் போற்ற சனவரி 25 அன்று வீர வணக்க நாள் நிகழ்த்துகிறோம். தமிழகக் கட்சிகள் மாவட்டந்தோறும் இதனை நிகழ்த்தத் தவறுவதில்லை. ஆனால், மொழி உரிமைக்காகப் பாடுபட்டவர்களையும் உயிரை இழந்து பாரினை நீங்கியவர்களையும் போற்றும் நாம், நாளும் மொழி உரிமை இழந்து நலிவதில் இருந்து மீள எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவ்வப்பொழுது இந்தி எதிர்ப்பு வீரர்கள் போல் கூக்ககுரலிடுவது தவிர அன்னைத்தமிழை அழிவிலிருந்து காக்க எந்தச் சிறுதுரும்பையும் எடுத்துப் போடுவதில்லை. ஒவ்வோர் இடத்திலிருந்தும் தமிழ் நீக்கப்படுவதற்கு உடன்பட்டும் அல்லது அதை அறிந்தும் எங்கும் தமிழ் எனப் போலி எக்காளமிட்டுக் கொண்டிருக்கிறோம்.

பிரதான் மந்திரி சுரக்சா பீம யோசனா, சீவன்சோதி பீம யோசனா, சன்தன் யோசனா, கிராம் சதக்கு யோசனா, பசல் பீம யோசனா, கிரிசி சிஞ்சை யோசனா, கிரிசி விகாசு யோகனா, அவாசு யோசனா எனத் திட்டங்களுக்கு இந்திப்பெயர்கள் சூட்டி அவையே நாடு முழுவதும் விளம்பரப் படுத்தப்படுகின்றன.

வானொலி, தொலைக்காட்சிகளில் இந்தி விளம்பரங்களே பெருகிக் கொண்டுள்ளன. விளம்பரங்களின்  நோக்கம் இந்தித்திணிப்பாகத்தான் உள்ளது. வானொலி நிகழ்ச்சிகளிலும் இந்தி ஒலிபரப்பு நேரங்கள் கூடிக் கொண்டுள்ளன. இந்தி வருவதால் அங்கிருந்த தமிழ் அகற்றப்படுகிறது; அங்கு வரவேண்டிய தமிழ் விரட்டப்படுகின்றது என்பதை உணராமல் இந்நிகழ்வுகளுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டுள்ளோம்.

மத்திய அரசின் அலுவலகங்களிலும் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் முதலான மத்திய அரசு சார் நிறுவனங்களிலும் தனியார் மருத்துவமனைகள், விடுதிகள் முதலான இடங்களிலும் ‘வணக்கம்’  மூட்டைக்கட்டி வைக்கப்பட்டுள்ளது. ‘நமசுதே’ அல்லது நமசுகார் குடி கொண்டுள்ளன.

தமிழ் நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும் தனியார் அலுவலகங்களிலும் இந்தியில் எழுதத் தெரிந்தால்தான் வேலை இந்தியில் தட்டச்சிட அல்லது கணிப்பொறியில் கணியச்சிடத் தெரிந்தால்தான் வேலை என்று வேலை வாய்ப்புகளில் இந்திக்கு வரவேற்புப்பா பாடிக்கொண்டு தமிழ் விரட்டப்பட்டுக் கொண்டுள்ளது.

தமிழ் முதலான தேசிய மொழிகள் பல இந்தியாவில் இருப்பினும் இந்தி மட்டுமே தேசிய மொழியாக விளம்பரப்படுத்தப்பட்டு பிற மொழிகள் விரட்டப்பட்டுக் கொண்டுள்ளன. நாமும் சேர்ந்து தமிழை விரட்டிக் கொண்டுள்ளோம்.

இந்தி திணிக்கப்படவில்லை என்றும் இந்தி கட்டாயமாக்கப்படவில்லை என்றும் கூறிக்கொண்டே இந்திக்கல்வி தவிர்க்க இயலாததாக மாற்றப்படுகிறது. விருப்பப்பாடம் என்ற பெயரில் அதுமட்டுமே பாடம் என்று நிலை நாட்டப்படுகிறது.

தமிழின் பெருமையைக் கூறி நம்மை மகிழ்ச்சி மாயையில் ஆட்படுத்திவிட்டுத் தமிழுக்கான தடங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. நாட்டுமொழியாக மட்டுமல்லாமல் வீட்டு மொழியாகவும் இந்தி இருக்கவேண்டும் என  மத்திய ஆட்சியாளர்கள் அறைகூவிக்கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து இந்தியை அப்புறப்படுத்த ஆழமான திட்டம் எதுவும்  இந்தி எதிர்ப்புப் போலி வீரர்களிடம் இல்லை.  தமிழை எல்லா இடங்களிலும் வீற்றிருக்கச் செய்யும் செம்மையான திட்டம் எதுவும் தமிழ்க்காப்புப் போலி வீரர்களிடம் இல்லை.

தமிழக ஆட்சியாளர்களிடம் தமிழ்நாட்டில் தமிழ்தான் கல்வி மொழி, தமிழே அலுவல் மொழி, தமிழ்மட்டுமே வழிபாட்டு மொழி, தமிழ் ஒன்றே இசையாக முழங்கும் என்று சொல்வதற்கும் செய்வதற்கும் துணிவு இல்லை.

திரைப்படப் பெயர்களில் கூடத் தமிழ் காணவில்லை. இதைக்கண்டும் தமிழக மக்கள் நாணவில்லை. தமிழ்ப்பெயர் சூட்டப்பட்டவன் தமிழன் என்ற நிலை மாறி, மறந்தும் தமிழ்ப்பெயர் சூட்டாதவனே தமிழன் என்ற நிலை நாளும் பெருகி வருகிறது.

தொடரிகள், கப்பல்கள், வானூர்திகள், ஏவுகணைகள் முதலான எவற்றின் பெயராயினும் இந்திவயமாக்கப்பட்ட சமசுகிருதப் பெயர்கள்தாம். மூத்த மொழியாம் தமிழுக்கு இடமில்லை. இதுகுறித்து நமக்குச் சிறுதுளி அளவேனும் வருத்தமும் இல்லை!

பெயரில் என்ன இருக்கிறது என்று எண்ணாமல் பெயரில்தான் வரலாறு, பண்பாடு, உரிமை எல்லாம் இருக்கின்றன என்பதை உணரவேண்டும். தமிழ்ப்பெயர் சூட்டப்படாத எப்பொருளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்ற நிலைப்பாட்டை நாம் உருவாக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டிலாவது தமிழ் காக்கப்படும்.

1965இல் “தமிழ் உரிமைப் பெருநடைப் பயணம் மேற் கொள்ள உள்ள பேராசிரியர் சி.இலக்குவனார் கைது செய்யப்பட இருக்கிறார் என்னும் செய்தி நண்பர் ஒருவர் மூலம் புலவர்மணி இரா.இளங்குமரன் அறிய வந்தார். இதனை அவர் தெரிவித்த பொழுது தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், தமிழ் மொழிக்காகச் சிலரேனும் பலியாக வேண்டும். அவர்களில் நான்  முதல் ஆளாக இருக்கிறேன் என்று வழக்கமான புன்முறுவலுடன் மொழிந்தார்.” (செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார், பக்கம் 79) அத்தகைய நெஞ்சுரம் படைத்த, மாணாக்கர்களையும் தமிழ் அன்பர்களையும் வழி நடத்தக்கூடிய தமிழ்ப்பேராசிரியர் ஒருவரும் இன்று இலரே அத்தகையோரை உருவாக்க வேண்டியது வீர வணக்கம் கொண்டாடுவோர் கடமையல்லவா?

அன்னைத்தமிழ் அனைவருக்கும்உரியதே அன்றி  ஒரு தரப்பாருக்கு மட்டும் உரியதல்ல! தமிழ் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் அமைப்பினர் அந்தக் குரல் பொதுமக்களிடமிருந்து எழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். ஒட்டு மொத்தத் தமிழினமும் தமிழுக்காகக் குரல் கொடுத்தால்தான் அது நிறைவேறினால்தான் நாம் தமிழ் மொழிக்காவலர்களுக்காக உண்மையில் வீர வணக்கம் செலுத்தியவர்கள் ஆவோம்.

மொழிப்போரில் உயிர் நீத்தவர்கள், உடலூறு நேர்ந்தவர்கள், துயரங்களைச் சந்தித்தவர்கள் உழைத்தவர்கள் முதலானோர் வழியில் செல்லாமல், நாமே மொழி அழிப்பிற்குத் துணை நிற்கின்றோம். அப்படியானால், மொழிப்போர் ஈகியருக்கான வீர வணக்க நாள் என்பது வெற்றுச்சடங்குதானே!

வீர வணக்க நாள் கொண்டாடுநரே! அன்று ஒருநாளாவது இந்தி எதிர்ப்புப் போரில் களப்பலியானவர்கள் குடும்பத்தினரை, மரபு வழியினரைச் சந்தித்துச் சிறப்பியுங்கள். அவர்களுக்குத் தேவையான கல்வி, வேலைவாய்ப்பு முதலியவற்றை அளியுங்கள். அவர்கள் யாரையும் சாராமல் தலைநிமிர்ந்து வாழும் வகையில் உதவுங்கள்!

தமிழ்க்காப்புச் செயல்களில் கட்சி, மதம், அமைப்பு முதலிய எவ்வேறுபாடின்றியும் அனைவரும் ஈடுபட வேண்டும். தமிழர் வாழும் நிலப்பகுதிகளில் எல்லாம் மத்திய அரசு இந்தித்திணிப்பை நிறுத்திவிட்டுத் தமிழ் கற்பிக்கவும் வளர்க்கவும் வகை செய்ய வேண்டும்.

தமிழ் நாட்டிலும் உலகெங்கும் வாழும் தமிழர்களிடையேயும் அயல்மொழிகளின் திண்பிற்குச்சிறிதும் இடம் இல்லாச் சூழலை உருவாக்க வேண்டும். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது பேச்சு என்பதை தாண்டிச் செயலாக்கப்பட வேண்டும். தமிழுக்குரிய தலைமைநிலையைத் தந்து உண்மையான வீரவணக்கத்தைச் செலுத்துவோம்.

மொழிப்போர் ஈகியர்களே! உங்கள் கனவுகளை நனவாக்குவோம்!

பாருள்ளளவும் பைந்தமிழும் இருக்கும். பைந்தமிழ் உள்ளளவும் உங்கள் புகழும் நிலைத்து நிற்கும். உங்கள் எண்ணங்களும் நினைவுகளும் எங்களை என்றென்றும் வழி நடத்தட்டும்!

வீர வணக்கத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல தை 11, 2051 / 25.01.2020