ஊனுருக்கி விளக்கேற்றிய திலீபன்! – தோழர் தியாகு
ஊனுருக்கி விளக்கேற்றிய திலீபன்!
தமிழ்நாட்டில் 1980களின் இறுதியிலும், 90களிலும் பிறந்த ஏராளமான குழந்தைகளுக்குத் திலீபன் என்று பெயர் சூட்டப்பட்டது. (1988 பிப்பிரவரி முதல் நாள் பிறந்த என் மகளுக்குத் திலீபா என்று பெயர் சூட்டினேன்.) சொட்டு நீரும் அருந்தாமல் திலீபன் நடத்திய பட்டினி வேள்வியும், அவரது ஈடிணையற்ற உயிர்த் தியாகமும் தமிழ் மக்களின் உள்ளத்தில் ஏற்படுத்திய ஆழமான பெருந்தாக்கத்துக்கு இது ஒரு சான்று.
ஆனால் திலீபனின் போராட்டத்த்துக்கும் ஈகத்துக்கும் இதையும் கடந்த ஒரு வரலாற்றுச் சிறப்பு உண்டு என்பதை நாம் போதிய அளவு உணர்ந்து உள்வாங்கியிருக்கிறோமா?
1987 இந்திய இலங்கை ஒப்பந்தம் எனப்படும் இராசீவ் – செயவர்த்தனா உடன்படிக்கையின் படி இந்திய அமைதிப் படை ஈழத்தில் கால்பதித்த போது தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு புதிய அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. இந்திய வல்லரசின் அரசியல்-இராணுவத் தலையீட்டினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும், அதற்கு முகங்கொடுக்க வேண்டிய தேவையையும் தலைவர் பிரபாகரனின் சுதுமலைச் சாற்றுரை தெளிவாக உணர்த்தியது. ஆனால் மக்கள்?
இந்தியாவைத் தங்களின் பண்பாட்டுத் தாயகமாக அவர்கள் எண்ணிப் பழகி யிருந்தார்கள். தமிழீழ மக்களும் தமிழ்நாட்டு மக்களும் ஒருகொடியில் பூத்த இருமலர்கள், தொப்பூழ்க்கொடி உறவுகள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டு மக்களின் இனப் பாசத்தையும் இந்தியப் பேரரசின் இனப் பகையையும் வேறுபடுத்திப் பார்க்கின்ற தெளிவு ஈழ மக்களுக்கு இல்லை. ஈழத்து அறிஞர்கள் சிலருக்கே இல்லை – அன்றும் இல்லை, இன்றும் இல்லை!
சிறிலங்கா வேறு, தமிழீழம் வேறு என்று புரிந்து கொண்டவர்களுக்கு, இந்தியா வேறு, தமிழ்நாடு வேறு என்று விளங்கவில்லை.
சிங்களப் பேரினவாதத்தைப் பகையாகக் கருதி எதிர்த்துப் போராடி வந்த மக்கள் இந்தியப் படையை அப்படிப் பார்க்கவில்லை. ஆனால் இந்திய அரசின் உண்மையான உள்நோக்கத்தை மக்களுக்கு விரைவாகவும் உடனடியாகவும் உணர்த்த வேண்டிய தேவையை நிறைவு செய்வதாகத் திலீபனின் பட்டினிப் போர் அமைந்தது. இந்திய வல்லரசியத்தின் அமைதி முகத் திரையைப் பட்டினிக் கூர்வாளால் கிழித்துப் போட்டு பகையைப் பகையென்று காட்டினார் திலீபன். அது இந்திய மயக்கம் எனும் நோய்க்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது.
திலீபன் தமிழீழ விடுதலைக்காகக் கருவியெடுத்த ஆய்தப் போராளி. ஆனால் அரசியலின் நீட்சிதான் போர் என்ற தெளிவு புலிகளுக்கு இருந்தது. ஆய்தப் போராட்டத்தின் இடையில் குறுக்கிட்ட தடையை நீக்க அவர்களால் அரசியல் வழியில் அறப் போராட்டத்தையும் திறம்பட நடத்த முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியது திலீபனின் போராட்டம்.
உண்ணாநோன்பிருந்து ஒரு தேசம் விடுதலை பெற முடியாது என்ற தெளிவு திலீபனுக்கு இருந்தது. அவர் விடுதலைக்காக நோன்பு நூற்றவர் அல்லர் என்பதை அவரது போராட்டக் கோரிக்கைகளிலிருந்தே அறியலாம்.
திலீபனின் ஐந்து கோரிக்கைகள்:
1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாகத் திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
2. சிறைக் கூடங்களிலும் இராணுவக் காவல் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4. ஊர்க் காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.
5. தமிழர் பிரதேசங்களில் புதிதாகக் காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
சிங்களப் பேரினவாதம் இந்த ஒப்பந்தத்தையெல்லாம் விழுங்கி ஏப்பம் விடக் கூடியது என்பதை இந்தியாவுக்கு உணர்த்தவும், இந்தியப் படையெடுப்பின் உண்மை நோக்கத்தைத் தமிழீழ மக்களுக்கு உணர்த்தவும் திலீபன் ஊனுருக்கி விளக்கேற்றினார் என்பதே உண்மை.
ஐந்து கோரிக்கைகளுக்காகப் போராடும் போதே தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டக் குறிக்கோளில் அவர் குறியாக இருந்தமைக்குப் பட்டினிக் களத்திலிருந்து அவர் ஆற்றிய உரைகளே சான்று.
ஒவ்வொரு முறையும் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வருவதாய் செய்தி பரவும் போதும் கூட்டத்தினரிடையே மகிழ்ச்சி பொங்கியது. திலீபன் காப்பற்றப்பட்டு விடுவார் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களுக்கு ஒவ்வொரு முறையும் கிடைத்தது ஏமாற்றம்தான்.
திலீபனின் போராட்டம் தமிழீழ மக்களைக் கிளர்ந்தெழச் செய்தது. தமிழீழப் பரப்பெங்கும் மக்கள் பல்வேறு போராட்டங்களைத் தொடங்கியிருந்தனர். நல்லூர் வீதியில் மக்கள் கூட்டம் உச்சம் தொட்டது. யாழ்க் கோட்டையிலிருந்த இந்திய அமைதிப் படையினர் வெளியே வர முடியாதவாறு மறித்துத் தமிழர்கள் மறியல் போராட்டம் தொடங்கினார்கள். திலீபன் விரும்பிக் கேட்கும் பாடலான “ஓ..மரணித்த வீரனே! உன் சீருடைகளை எனக்குத் தா! உன் பாதணிகளை எனக்குத் தா! உன் ஆயுதங்களை எனக்குத் தா!” எனும் பாடல் உண்ணாவிரதக் களத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. கூட்டத்தின் கண்ணீருக்கு இடையில், மக்கள் நாம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கிறோம் என்பதை உணரத் தொடங்கினார்கள். திலீபனின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது!
அணு அணுவாகச் சாவை நெருங்கிக் கொண்டிருந்தார் திலீபன். காந்தியின் தேசம் அகிம்சைக்கு மதிப்பளித்துக் கோரிக்கைக்கு செவி கொடுக்கும் என நம்பியிருந்த தமிழர்களின் எண்ணம் தகர்ந்து போயிற்று. ஈழத்தமிழர்களைக் கண்ணீரில் மிதக்க விட்ட திலீபனின் போராட்டம் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் எழுச்சி கொள்ள வைத்தது.
உண்ணாவிரதப் போராட்டத்தின் 12ஆம் நாள் 1987 செட்டம்பர் 26 காலை 10:48 மணிக்கு திலீபன் உயிர் பிரிந்தது. 265 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தி முடித்து விடை கொடுத்துச் சென்றிருந்தார் திலீபன். உயிர் தமிழீழ விடுதலைக்கு! உடல் மருத்துவக் கல்விக்கு! என்ற முறையில் திலீபனின் முடிவு அமைந்தது.
அமைதிப்படை அதிகாரிகள் எச்சரித்த போதும் இராசீவ் காந்தியின் இந்திய அரசு திலீபனின் பட்டினிப் போராட்டத்தை அலட்சியம் செய்தது என்பதைக் கட்டளைத் தளபதி அர்கிரத்து சிங்கு தனது நூலில் வெளிப்படுத்தியுள்ளார். சுருங்கச் சொன்னால் திலீபனைச் சாகடித்தது இந்தியாதான்! திலீபன் இறப்பதற்கு முன் இறுதியாக ஆற்றிய உரையில் “இங்கே ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” என்று அறைகூவி அழைத்தார்.
திலீபனின் வாழ்வை விடவும் வலிமையானது அவரது சாவு! இந்திய ஆக்கிரமிப்புப் படையைத் தமிழீழ விடுதலைப்புலிகள் விரட்டியடித்த வெற்றியின் வேர்களில் திலீபனின் மகத்தான ஈகம் உரம் சேர்த்தது என்றால் மிகையன்று.
இத்தனைக்குப் பிறகும் இந்திய வல்லரசின் மோடி வித்தைகள் தொடர்வதன் சான்றுதான் ஐநாவில் தமிழீழ மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு எதிராக இந்தியா நடத்தி வரும் ‘13 வகை’ புவிசார் அரசியல் சூதாட்டம். இந்தியாவின் சூதும் வாதும் புரியாமல் அது ஆட்டுவித்தபடி ஆடிக் கொண்டிருக்கும் தமிழீழத் தலைமைகள் ஆனாலும், புலம்பெயர் தமிழ்த் தலைமைகள் ஆனாலும், அவர்களுக்கெல்லாம் திலீபனின் போராட்டமும் ஈகமும் சொல்லும் சேதி: இந்தியாவிடம் எச்சரிக்கை! எப்போதும் எச்சரிக்கை!
– தோழர் தியாகு
தியாக தீபம் திலீபன் அவர்களைப் பற்றித் தோழர் தியாகுவின் நேர்காணல்.
Leave a Reply