perarivalan_and_six01

 

  அப்பாவிகள் எழுவரும் அவர்கள் குடும்பத்தினரும் தமிழ்ச்சுற்றத்தினரும் மனிதநேயர்களும் மகிழ வேண்டிய வாய்ப்பு பறிபோய்விட்டது! பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்த நல்ல தீர்ப்பு ஒன்று பொல்லாச் செய்தியாக மாறி விட்டது. ஏனிந்த அவலம்? யாரிதற்குப் பின்னணி? சதியாளர்கள் சொல்லித் தெரியவேண்டிய நிலையில் இல்லை. என்றாலும் இதுபோன்ற இன எதிர்ப்புக் குரல்களும் அதனை இனப்பற்றுள்ளவர் என்ற நம்பிக்கைக்கு ஆளானவர்களே எதிரொலிப்பதும் தமிழினத்திற்கே உரியன போலும்!

  ஆட்சியில் இருந்தால் ‘இந்தியனா’கவும் இல்லாவிட்டால் ‘தமிழனா’கவும் நடந்து கொள்ளும் முதுபெரும் தலைவர், ஆட்சியில் இல்லாத பொழுதும் ‘இந்தியனா’க நடந்து கொள்வதன் காரணம் என்ன? பேராயக் கட்சியான காங்.கின் தொண்டர்அடிப் பொடியாழ்வாராகக் காட்டிக் கொண்டு தம் குடும்பத்தைக் காப்பாற்ற விரும்பும் காப்பு உணர்சி தவிர, வேறு என்னவாக இருக்க முடியும்? இன்றைய ஆளும் கட்சியான அதிமுக, காங்.ஐ வேரொடு சாய்க்க முனைப்பாகப் பரப்புரை மேற்கொள்வதால் காங்.ஐ அண்ட வேண்டிய சூழல் இவருக்கு நேர்ந்திருக்கலாம். எனினும் சிலவற்றை விளக்கக் கடமைப்பட்டுள்ளார்.

  இராசீவு  கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள அப்பாவிகளின் மரணத் தண்டனையை மாற்றும் வாய்ப்பு வந்தபொழுது – மரணத்தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தாலும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழங்கி வந்தாலும் – நளினியைத் தவிர பிறரை மரணக் கொட்டிலில் தள்ளியது ஏன்?  ஈழத்தில்  அறமற்ற பன்முறைத் தாக்குதலால் தமிழர்கள் கொல்லப்பட்டது கண்டு உண்ணா நோன்பு இருந்தவர், அதனை இரண்டு மணி நேரத்திற்குள் முடித்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது ஏன்?

  http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/03/justice-sadasivam01-600x399.jpgஇப்பொழுதும் தலைமை நீதிபதி சதாசிவம்,நல்ல தீர்ப்பு வெளியாகும்  என்று சொன்னது  தமிழகத் தேர்தலுக்கு முன்பாக இருக்கலாம். ஆனால்,  அவர் தெரிவித்த நல்ல செய்தி சொல்ல  வேண்டிய நாள் தமிழகத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு மறுநாள்தான்! அவ்வாறிருக்க  எழுவர் விடுதலையால் தமிழக அரசியல் வாக்கெடுப்பில் மாற்றம் நிகழ வாய்ப்பில்லை. அவ்வாறிருந்தும் – ஈழத்தமிழர்களுக்காகவே ஆட்சியை இழந்தவர் – மனித நேயமற்ற முறையில் அதைப் பற்றிய கருத்து தெரிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன? இரத்தப் பசியாறும் ‘மேகலை’யின் குரலாக ஒலித்ததன் காரணம் என்ன? இவ்வாறு சுருதி தப்பிய ஓசைக்கு மாறாகத் தம் மீது தொடுத்த மிரட்டல்களை வெளிப்படையாகச் சொல்லி இருக்கலாமே! அடுத்தவருக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்றால் அதைவிட நல்ல பெயர் கிடைக்கத்தானே முயல வேண்டும். இருப்பினும் அவப்பெயர் தேடிக் கொண்டது ஏன்?

  எழுவருக்குரிய நல்ல தீர்ப்பு விடுதலையை  ஏற்பதைத் தவிர வேறு என்னவாக இருகக முடியும்? தாம் ஓய்வு பெறும் பொழுது மனித நேயத்துடன் பணி நிறைவுத் தீர்ப்பாக வழங்க இருந்த  தலைமை நீதிபதி அதனை வெளிப்படையாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், தீர்ப்பு என்ற பெயரில் இடி விழச் செய்தாரே! கண்டிப்பாக இதுதான் தீர்ப்பு எனில் அவர்,  அமைதி காத்திருப்பார். அல்லது பணிநிறைவுறுவதால் தீர்ப்பு சொல்லும் வாய்ப்பு தமக்கு இல்லாமல் போவதாகச் சொல்லி இருப்பார்.  எனவே, அவரது செய்தி நமக்குக் கூறியது தமிழக அரசின் முடிவை ஏற்று எழுவரின் விடுதலைக்குப் பச்சைக் கொடி காட்டுவதைத்தானே! ஆனால், அவர் கையில் ஆயத்தமாக வைத்திருந்த பச்சைக் கொடியைப் பிடுங்கிச் சிவப்புக் கொடியைத் திணிக்கும் இரத்தப்பசியாற்றும் மேகலையின் பணியைச் செய்தது ஏன்?

 இத்தீர்ப்பு தனி ஒரு நீதிபதியின் தீர்ப்பு அன்று. தலைமைநீதிபதி சதாசிவம், நீதிபதி இரஞ்சன்  கோகோய், நீதிபதி இரமணா ஆகியோர் அடங்கிய ஆயத்தால் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்படும் தீர்ப்புதான்.

மூவரின் தீர்ப்பும் மாறுபட்ட நிலையில் இருந்திருக்குமெனில் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள், நல்ல தீர்ப்பு என்று கூறியிருக்க மாட்டார். மேலும், அரசியல் அமைப்பு ஆயத்தின் கேட்பிற்குரிய வழக்கு இல்லை என்று முன்பே மறுத்துள்ள பொழுது,   இப்பொழுது அவ்வாறு அனுப்பியது ஏன்?  மத்திய அரசின் செல்வாக்கால் விளைந்த முடிவாகத்தானே இருக்க முடியும்!

  உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு  வழங்கும் எழுவரின் விடுதலை ஆணை சரி எனச் சொல்ல வேண்டியவர்கள் அரசியல் யாப்பு ஆயத்திற்கு அனுப்பியது ஏன்?  அரசியல் யாப்பு ஆயம்தான் முடிவெடுக்க வேண்டும் எனில், அதனை முன்பே சொல்லியிருக்க மாட்டார்களா? வழக்கினைத் தள்ளிப் போட்டிருக்க வேண்டிய தேவை யில்லையே! அல்லது இதுதான் அவர்கள் முடிவெனில், அதனைத் தீர்ப்பு சொல்லும் இறுதி நாளில் எடுத்திருக்க வாய்ப்பில்லையே! எனவே, தமிழக அரசின் ஆணை செல்லும் எனச் சொல்ல வந்தவர்கள்,  மாறான கருத்தினை வெளிப்படுத்தியமைக்கு – அடாத தீர்ப்பை வழங்கியதற்கு – அறமற்ற பின்சூழல் ஏதோ உள்ளது! அதைத்தான் நயவஞ்சகக் காங். தன் ஊதுகுழல் மூலம் வெளிப்படுத்தி உள்ளது என்பதே உண்மை!

  புதிய தலைமை நீதிபதி இராசேந்திரா மால் லோதா  அவர்களின் பதவிக்காலம் 5 மாதங்களே!. புதிய அரசு, புதியதாக அரசு வழக்குரைஞர்களையும் வாதுரைஞர்களையும் அமர்த்தச் சற்றுக் காலம் பிடிக்கும். எனவே, ஐந்து திங்களுக்குள் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் யாப்பு ஆயம் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தாலும்  காலம் மேலும்மேலும் நீளும். எனவே, அப்பாவிகள் சிறையிலேயே தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டும் என்பதுதானே இரத்தப்பசியாறுவோரின் உள்ளக் கிடக்கை. அதற்கு இனமானம் பேசுவோர் துணை நிற்கலாமா?

  மு.க.தாலின் முயற்சியால் எடுக்கப்பட்ட காங். கின் புறக்கணிப்பு முடிவு, தி.மு.க.வின்இழந்த செல்வாக்கைSonia_Karunanidhi01 மீட்டு வரும் வேளையில், மீண்டும் இரத்தப்பசியாற்றும் மேகலையின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்தது ஏன்? காங்.கின் தமிழினப் படுகொலைச் செயல்களுக்கு இதுவரை  கண்டுங்காணாமல் துணை நின்றது போதும், இனியேனும் தமிழர் நலம் காப்போம் என எண்ணாமல் மீண்டும்  காங்கிரசுக் காரனாகவே மாறியது ஏன்? இரண்டகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அதே பாதையில் நடைபோட்டது ஏன்?

  நெஞ்சுக்கு நீதியில் ‘திமுகவிற்கு இறுதிப் பயணம்’ என அத்தியாயம் எழுதத் தொடங்கி விட்டாரா?  இன  உணர்வை இதற்கு முன்பு ஊட்டி வந்தவர், இன இரண்டகராக மாறுவது ஏன்?

  நாம் என்ன சொன்னாலும் நம்பும் – என்ன செய்தாலும் ஏற்கும் – அப்பாவிகள் தமிழர்கள் என்பதாலா?

  இனியேனும் மனந் திருந்தி, தம்மை அவ்வாறு சொல்லச் செய்த சூழல் என்ன என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். அல்லது  தமிழினம், ஈழத்தமிழர் உரிமை, என்பன பற்றி எதுவும் பேசாமல், தமிழினத்தலைவர் என்று சொல்லிக் கொள்ளாமல் அமைதி காக்க வேண்டும்!

எதைச் செய்யப் போகிறார் முதுபெரும் தலைவர்?

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயின். (குறள்116)

கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர்

வடுவல்ல செய்தலே வேண்டும் நெடுவரை

முற்றுநீர் ஆழி வரையகத்து ஈண்டிய

கல்தேயும் தேயாது சொல். (பழமொழி 39.)

இதழுரை http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png

21.04.2045  04.05.2014