ஏழுதமிழர் விடுதலை – நூல் வெளியீடு – கருத்தரங்கம்!
“ஏழுதமிழர் விடுதலை – உச்சநீதிமன்ற மறுப்பு – தமிழ்நாடு அரசு அதிகாரம்” –
நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம்!
தமிழீழத்திற்கு இந்திய அமைதிப்படையை அனுப்பி, ஆயிரக்கணக்கானத் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான முன்னாள் இந்தியத் தலைமையமைச்சர் இராசீவு காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி முதலான ஏழு தமிழர்களின் விடுதலை குறித்தும், அதற்கு மறுப்புத் தெரிவித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும், தமிழ்நாடு அரசின் அதிகாரங்கள் குறித்தும் சட்ட விளக்கங்களோடு பேசுகின்ற, “ஏழு தமிழர் விடுதலை – உச்ச நீதிமன்ற மறுப்பு – தமிழ்நாடு அரசு அதிகாரம்” – நூலின் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம், மாசி 16, 2047 – பிப்ரவரி 28 2016, சென்னையில் நடைபெறுகின்றது.
மாசி 16, 2047 – 28.02.2016 மாலை 5.30 மணியளவில், சென்னை கே.கே. நகர் அண்ணா சாலையிலுள்ள சாலை ‘மகா மகால்’ அரங்கத்தில் இந்நிகழ்வு நடைபெறும்; தமிழ்த் தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி தலைமை ஏற்கிறார்; திரு. செ. அருட்செல்வன் அண்ணல் தங்கோ, வடசென்னை த.தே.பே. செயலாளர் தோழர் பா.க. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கச் சென்னைச் செயலாளர் தோழர் வி. கோவேந்தன் வரவேற்புரையாற்றுகிறார். பாவலர்கள் முழுநிலவன், பிரகாசு பாரதி ஆகியோர், “தூக்கைத் தூக்கிலிடுவோம்” என்ற தலைப்பில் பாவீச்சு நிகழ்த்துகின்றனர்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கப் பொதுச் செயலாளர் இயக்குநர் திரு. ஆர்.கே. செல்வமணி, நூலை வெளியிட இயக்குநர் வெற்றிமாறன் முதற்படி பெற்றுக் கொள்கிறார்.
மரணத் தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. செல்வராசு, இயக்குநர் வெற்றிவெல் சந்திரசேகர், தொழில் முனைவோர் திரு. தாரை. மு. திருஞானசம்பந்தம், தமிழின உணர்வாளர் புலவர் இரத்தினவேலவர், தொழிலாளர் சனநாயகப் பேரியக்கச் செயலாளர் திரு. நெடுமாறன், ஊடகவியலாளர் திரு. கருத்தோவியர் பாலா ஆகியோர் சிறப்புப் படி பெறுகின்றனர்.
தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் கருத்துரையாற்றுகிறார். சென்னை உயர் நீதிமன்ற வழங்கறிஞர் திரு. அசய் கோசு, பேரறிவாளன் தாயார் திருவாட்டி அற்புதம் அம்மையார் ஆகியோர் நூல் திறனாய்வுரையாற்றுகின்றனர்.
நிறைவில், நூல் ஆசிரியரும் தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளருமான தோழர் கி. வெங்கட்ராமன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் கவிபாசுகர், நிகழ்வை நெறிப்படுத்துகிறார். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன் நன்றி நவில்கிறார்.
இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9047162164
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhdesiyam.com
Leave a Reply