kalaignar 05

  கலைஞர் அவர்களே! நாடகத்தை நிறுத்துங்கள்! நல்ல முடிவெடுங்கள்! என அன்புடன் வேண்டுகின்றோம்! உங்கள்  கடந்த கால அருவினைகளையும் படைப்புத்திறனையும் குறைத்து மதிப்பிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவற்றால் ஈர்க்கப்பட்டதால் உங்களைப்பற்றிய மதிப்பான  படிமம் உள்ளத்தில் ஏற்பட்டதால்தான் இப்பொழுது  இவ்வாறு கூற நேர்கிறது!

  உங்கள் மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளீர்கள்! ஒருவேளை அவர்களுக்கிடையே உள்ள மோதலால் ஒருவருக்கு ஒருவர் தீங்கு நேரிடும் என அஞ்சி நீங்கள் கேட்டுள்ளீர்களோ என்றும்   தொண்டர்களை எண்ண வைத்தது இது. தமிழக அரிசடம் கேட்காமல மத்திய அரசிடம் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டதுகூடப் பெரிதாக எண்ணப்படவில்லை. ஆனால், அதற்கான காரணங்களுள் ஒன்றாக, விடுதலைப்புலிகளைச் சார்ந்தவர்களால் பேரிடர்/ஆபத்து வரும் எனக் கூறியுள்ளீர்களே! எழுதியது நீங்கள்தானா? நீங்களே அவ்வாறு உணர்ந்து எழுதியுள்ளீர்களா? அல்லது விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்காமல் நீட்டிப்பதற்கான மத்திய அரசின் ஆணைக்கு உதவும் பொருட்டு  எழுதப்பட்டதா?  விடுதலைப்புலிகளால் இன்னும்  பேரிடர் உள்ளதாகக் கூறி மக்கள் மீதான கொடுமையைக் கட்டவிழ்த்து ஏவி வரும் சிங்களத் தலைமைக்கு உதவுவதற்காக எழுதப்பட்டதா? “பாருங்கள்! பாருங்கள்! தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரே தம் பிள்ளைகளுக்கு  விடுதலைப்புலிகளால் பேரிடர் வரும் எனக் கூறுகிறார். அப்படியானால் எங்களுக்கும் அதே  நிலைதானே! விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கையை எப்படி நிறுத்த முடியும்!” என்று ஓலமிட்டு ஈழத்தமிழர்களின் மீதான இனவெறித்தாக்குதலைத் தொடருவதற்கு உதவியாகத்தானே உங்கள் மடல் வரிகள் அமையும்! இவற்றையெல்லாம் அறியாத சின்னப்பாப்பா அல்ல நீங்கள்! மிகச்சிறந்த அரசியல் வித்தகரான  நீங்கள், உட் பொருளையும் விளைவுகளையும் உணர்ந்துதான் எழுதியிருப்பீர்கள் என்பது புரிகின்றது.

  உங்களை நீங்களே இந்தப் படுகுழியில் தள்ளிக்கொண்டது ஏன்? பாசம்! பிள்ளைப்பாசம்! நாட்டு மக்களைவிட வீட்டுமக்கள்மீது ஏற்பட்ட அளப்பரிய அன்பும் பிடிப்பும்! இதனால் தமிழ்நாடு இழந்தன மிகுதி!  ஈழத்தமிழர்கள் உயிரிழப்பும் மிகுதி! இவை நீங்கள் அறியாதன அல்ல! இருப்பினும் பிறர் சொன்னால்தானே உண்மை சுடும்! அதனால்தான் கூறுகின்றேன். உங்கள் வரிகளைப் பேசிப்பேசித் திரையுலகில் புகுந்தவர்கள் மிகுதி! உங்கள் பொழிவைக்கேட்டுக் கேட்டு மேடையேறியவர்கள் மிகுதி! உங்கள் படைப்பைப் படித்துப்படித்துப் படையப்பாளியானவர்கள் மிகுதி! இன்றைக்குப் பிற இயக்கங்களிலும் கட்சிகளிலும் உள்ள தமிழ் உணர்வாளர்களில் பெரும்பகுதியினர் உங்கள் நாவசையில் மயங்கிக் கிடந்தவர்கள்தாம்!

  உங்களால் உணர்வு பெற்றவர்கள் உங்கள் அறிவுரைகளைச் செவ்வனே கடைப்பிடிக்கிறார்கள்! ஆனால், நீங்கள்தாம் திசைமாறிய பறவையாக மாறிவிட்டீர்கள்! உங்கள் பழம் பெருமை எடுபடாமல் போவது இயற்கை!  காலையில் பால் சுவையாக இருந்தது எனக்கூறி மாலையில் அதே பால் திரிந்தபின்பும் யாரும் குடிக்க மாட்டார்கள்! நேற்றைய விருந்து சுவையாக இருந்தது எனக்கூறி அது கெட்டுப்போனபின்பும் யாரும் உண்ணமாட்டார்கள்! அன்றைய  மருந்து நற்பயன் விளைவித்தாயிற்றே எனக் கருதி இன்று, அது கெடுமுடிந்து போனபின்பும் யாரும் பயன்படுத்த மாட்டார்கள்!

  அவ்வாறிருக்க நீங்கள் திரும்பத் திரும்ப அன்றைக்கு ஈழத்தி்ற்காக அப்படிப்போராடினேன்!… இப்படிப்போராடினேன் என்று சொல்லி என்ன பயன்? இன்றைய நிலைப்பாடு என்ன? அதுதானே கேள்வி! தாயக  விடுதலைக்காகப் போராடியவர்கள், தாயகமக்களின் அழிவைக் குறைப்பதற்காக ஆயுதங்களை அமைதியாகச் செயலிழக்கச் செய்துவிட்டார்கள்; அதற்குப்பின்பும் அயலகத்தில்  இடர் தரும் நிலையில் அவர்கள் உள்ளார்கள் என நீங்கள் கூறும் – இனப்படுகொலைகாரர்கள், இனப்படுகொலைக் கூட்டாளிகள் மீதான- ஒத்துழைப்பு உணர்வுதானே உங்களை யார் என்று படம் பிடித்துக் காட்டுகின்றது. எனவே, இனியேனும்  ஈழம், ஈழத்தமிழர் என்றெல்லாம் சொல்லி உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்!

  இல்லையில்லை! தமிழுணர்வும் ஈழத்தமிழ் உணர்வும் நீறுபூத்த  நெருப்பாக உள்ளத்தில் இன்னும் குடிகொண்டிருக்கின்றது என்கின்றீர்களா? அத்தகைய எண்ணம் உள்ளவர்களையும் ஏமாற்றமடையச் செய்யாமல் இருக்க நீங்கள் துணிந்து ஒரு முடிவெடுக்க வேண்டும்! ஒரு முறை நீங்கள், “வென்றால் அண்ணா  வழி(கட்சி அரசியல்)! தோற்றால் பெரியார் வழி (இயக்க அரசியல்)!” என்றீர்கள்.  உங்கள் பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும் ஐந்தாண்டுக்காலம் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலக்கி  வைத்து, இயக்கப் பரப்புரையாற்றச் செய்யுங்கள்! கட்சியும் மீளும்!  தமிழும் வாழும்! ஈழத்தமிழரும் வாகைசூடுவர்! தமிழ்மாநாட்டில் மட்டுமல் உலகெங்கும் மரபு வழி அரசியல் என்பது பெருகி விட்டது! அவ்வாறிருக்க  உங்களை மட்டும் குற்றம் சுமத்துவதாக எண்ண வேண்டா! உங்களின் ஆழ்மன உணர்விற்கு எதிராக மரபுஅரசியல் உங்களைத்  திருப்பி விடுவதால்தான் இதைக் கூறுகின்றோம்! உங்கள் குடும்பத்தினர் மீதான பரிவு நிலையில் நீங்கள் துறவிபோல் நடந்து கொண்டீர்கள் என்றால் நாட்டைப்பற்றிச் சிந்தீப்பீர்கள்! தமிழ் ஈழத்தைப் பற்றி எண்ணுவீர்கள்! தமிழுலகை ஆளுவீர்கள்! எனவேதான் கூறுகின்றோம்!

எனவே,

திறமையும் உழைப்பும் மிகுந்த உங்கள் குடும்பத்தாரைக் கட்சிப் பொறுப்பில் இருந்து விலக்கி இயக்கப் பணிகள் ஆற்ற வழிவகுங்கள்!

அல்லது

இனிமேல்,

தமிழ், தமிழினம், தமிழ் ஈழம் என்றெல்லாம் பேசுவதற்கு முற்றுப்புள்ளி இடுங்கள்!

என அன்புடன் வேண்டுகின்றோம்!

  இரண்டாம் செயல் உங்கள்  மீது  ஏற்பட்டு வரும் வெறுப்பைக் குறைக்கும்!

 

  முதல் செயல் இழந்துவரும் பெருமையை மீட்டு உங்களைப் புகழேணியின் உச்சியில்  ஏற்றும்!

இதழுரை      20.01.2045 / 02.02.2014                                                          feat-default