veeravanakkam03

கொன்றவனும் வாழ்கின்றான்!

துணை நின்றவனும் ஆள்கின்றான்!

வீழ்ந்தவர்கள் தாழலாமா?

  காலமும் மறதியும் துயரத்தை மறக்கும் மருந்துகளாகும். தனி மனிதர் என்ற முறையில் நமக்கிழைத்த இன்னல்களை மறக்கலாம்! மன்னிக்கலாம்! ஆனால், கூட்டம் கூட்டமாகப் பேரினப் படுகொலை நடத்தியவர்களை நாம் எப்படி மறப்பது? மறந்தோமென்றால் இருப்பவர்களும் அழிவதைத் தவிர வேறு வழியில்லையே!   பொள்ளென நாம் சினந்து எழாவிட்டாலும் காலம் பார்த்து உள் வேர்க்கும் (குறுள் 487)   மன உரமாவது வேண்டுமல்லவா?

“வீழ்ச்சியுறு ஈழத்தில் எழுச்சி வேண்டும்!” எனில்

“சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்

தொகையாக எதிர்நிறுத்தித் தூள்தூ ளாக்கும்

காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!” (பாரதிதாசன்)

அல்லவா?

  தமிழ் ஈழத்தில் வஞ்சகத்தால், கூட்டுக் கொலைகளால், கொத்துக் குண்டுகளால், மடிந்தவர்களும் துயருற்றவர்களும் பன்னூறாயிரவர்(பல இலட்சக்கணக்கினர்). அங்கே நடந்தது உள்நாட்டுப் போருமல்ல! போர்க்குற்றமுமல்ல! பேரினப் படுகொலை!

  2009 ஆம் ஆண்டு 3ஆவது வாரம் என்பது தமிழ்த்தேசியக் கொடுந்துயர் வாரமாக உருவாக்கப்பட்டது. துயரத்திற்குக் காரணமானவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லையே!

  பன்னூறாயிரவர் வஞ்சகத்தால் கொல்லப்பட்டதை மூடிமறைக்கும் வகையில் பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைத்த வெற்றி விழாவாகக் கொண்டாடுகிறான் சிங்களன்! தமிழீழத்தலைவர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் சிலரும் அதற்குத் தாளம் போடுகின்றனர்! உலகநாடுகளோ மனச்சான்றின்றிப் போர்க்குற்றம் எனச் சுருக்குகின்றன. இரு தரப்பிலும் போர்விதி மீறல்கள் நடந்ததாகவும் சிங்களக் காடையரின் விதிமீறல்களைவிட விடுதலைப்புலிகளின் விதி மீறல்கள்தாம் மிகுதி என்றும் ஒரு கூட்டம் பிதற்றிக் கொண்டுள்ளது. இராசபக்சே அரசியல் தலைமையிலிருந்து தேர்தல் மூலம் அகற்றப்பட்டது ஈழத்தமிழர்களின் மகிழ்ச்சிக்கான வெற்றி. அதே நேரம், இதை வெற்றியின் தொடக்கமாகக் கருதலாமே தவிர, முழு வெற்றியல்ல. அடுத்து இப்பொழுது வந்த சிரீசேனா அரசியல் காரணங்களால் சிங்களர்களிடம் முதன்மை பெறுவதற்காக இராசபக்சேவை எதிர்த்து வரலாமே தவிர, தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல! தமிழர்களுக்குத் தன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல! ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என்பதை ஒப்புக் கொள்ளவோ, அதற்குக் காரணமான கொலைக் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கோ அல்ல!

  ஈழத்தமிழர் தலைவர்களில் பலர், பதவி நலனுக்காகவோ, தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவோ, அரசியல் தந்திரம் என்றோ, வேறுவழியில்லை என்றோ ஒரே நாடு எனக்கூறிக்கொண்டு சிங்களத்தலைமையுடன் இணைந்து செயல்படுகின்றனர். புலம் பெயர் தமிழர்களிடமும் தாங்கள் நம்பிக்கை வைக்கும் தலைவைர்களுக்கிணங்கக் கருத்து மாறுபாடுகள் உள்ளன. எனினும், புலம் பெயர்ந்த தமிழர்களில் பெரும்பான்மையர், இனப்படுகொலை என்பதை உலகம் ஒத்துக் கொள்ள வேணடும் என்பதிலும் கொலைக்குற்றவாளிகளும் கொலைகளை வழிநடத்திய தலைவர்களும் அதிகாரிகளும் மனிதநேயமின்றி இனப்படுகொலைக்குத் துணை நின்ற உலக நாடுகளின் தலைமைகளும் தண்டிக்கப்படவேண்டும்! அரசியலிலிருந்து அகற்றப்படவேண்டும்! ஈழத்தமிழர்கள மறுவாழ்வு பெற வேண்டும்! தமிழீழக்கொடி விரைவில் தரணியெங்கும் பறக்க வேண்டும்! தமிழ்ஈழ நாடு உலகில் தலைசிறந்து விளங்க வேண்டும் என்பதிலும் ஒத்துள்ளனர். தமிழ்நாட்டிலும் கட்சித்தலைமையின் முரண்பட்ட கருத்துகளுக்கும் செயல்களுக்கும் எதிராகக் கட்சித் தொண்டர்கள் பலரும் தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் இதேபோல் எண்ணி அதற்காகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

  ஆனால், ஈழத்தில் தமிழர் நிலம் சுருங்கிக்கொண்டே உள்ளது. தமிழர் பகுதிகளின் சுற்றிலும் இடையிடையேயும் சிங்களப் படையோ மக்களோ குடியமர்த்தப்டுகிறார்கள். கட்டாயக் கருக்கலைப்பு போன்றவற்றால் ஈழப் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டு இனஅழிப்பு வேலை இன்னும் நடந்து கொண்டுள்ளது. காணாமல் போன ஈழத்தமிழர்களின் இருப்பிடம் இன்னும் தெரியவில்லை! அவ்வப்பொழுது திடீர், திடீரென்று தமிழிளைஞர்கள் கடத்தப்பட்டுத் துன்புறுத்தப்படுகிறார்கள்! நாளும் இழைக்கப்படும் கொடுமைகளால் வாழும் வகையின்றி வாடும் ஈழத்தமிழர்கள் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வரவேண்டாவா? மாண்ட தமிழர்களின் ஈகங்களுக்கு உரிய பயன் வரவேண்டாவா? தாய்மண்காக்கப் போரிட்ட விடுதலைப்புலி வீரர்களின் கனவுகள் நனவாக வேண்டாவா? நம் கனவு நனவாக நாம் என்ன செய்ய வேண்டும்?

  வீழ்ந்தவர்கள் எழுவதற்கும் தாழ்ந்தவர்கள் வாழ்வதற்கும் பிற இனத்தவரிடமும் நாம், கருத்தாதரவு தேட வேண்டும்! தமிழர்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் வழங்கும் மொழிகளில் தமிழினப் படுகொலை பேரளவில் நடைபெற்றமை குறித்தும் தமிழர்களின் தாயகம் தமிழீழம் என்பது குறித்தும் ஈழநாடு விடுதலை குறித்தும் மேற்கோள்கள், கட்டுரைகள், செய்திகள், பிற படைப்புகள் முதலானவற்றை மொழி பெயர்த்து இனப்படுகொலை குறித்தும் உணர்த்தி உலக நாடுகள் இனப்படுகொலையாளிகளும் உடந்தையாளர்களும் தண்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு செயல்படவேண்டும்.

 தொடர்ந்த இனப்படுகொலைகளிலும் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற பேரவலப் படுகொலைகளிலும் இறந்தவர்களுக்கு நாம் செலுத்தும் வீர வணக்கம் என்பது

ஒன்றுபட்டுச் செயல்பட்டு உலகநாடுகளின் கருத்தாதரவு பெற்று இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்படுவதே!

கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் தண்டிக்கப்படுவதே!

தமிழ்ஈழநாடு தன்னுரிமையுடன் பன்னாட்டவைகளில் இடம் பெற்றுத் தனி இறையாண்மையுடன் திகழ்வதே!

 

நம் வீரவணக்கம் பொருள்பொதிந்ததாக மாறும் வகையில்

ஈழவிடுதலை நாள் விரைவில் வருவதாக!

தமிழ் ஈழ மக்கள் வாழ்வு மலர்வதாக!

உலக அரங்குகளில் தமிழர் தலைமை பெறுவார்களாக!

என்றென்றும் தமிழ் முதன்மை இடத்தில் நிலைப்பதாக!

 

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

 இதழுரை

feat-default

அகரமுதல 79 வைகாசி 3, 2046, மே 17, 2015

 

may1802