(தோழர் தியாகு எழுதுகிறார் 243 : தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 2/2 தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

போகாத ஊருக்கு வழிகாட்டும் பொல்லாத பதின்மூன்று

13ஆம் திருத்தச் சட்டம் ஈழத் தமிழர்களின் தேசியச் சிக்கலுக்கு அரசியல் தீர்வாக முடியுமா? இலங்கை அரசவையில் 13ஆம் திருத்தச் சட்டம் இயற்றப்பட்டு36ஆண்டுக் காலமாயிற்று. இந்த 36 ஆண்டுகளில் அதனால் விளைந்த பயன் என்ன? அது தீர்வாகவில்லை என்பது மட்டுமன்று, தீர்வை நோக்கிய பயணத்தில் ஓரங்குலம் கூட முன்னேறவில்லை என்னும் போது 13ஆம் திருத்தச் சட்டம் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய் விட்டது என்று பொருள்.

36 ஆண்டுகளுக்கு முன் இராசீவ்-செயவர்த்தனா உடன்படிக்கையின் தொடர்ச்சியாக 13ஆம் திருத்தச் சட்டம் முன்மொழியப்பட்ட நேரத்தில் அன்றைய இந்தியத் தலைமையமைச்சர் இராசீவு காந்திக்கு ஈழத் தேசிய அரசியல் கட்சிகள் எழுதிய கடிதத்தில் 13ஆம் திருத்தச் சட்டத்தை கேலிக் கூத்து என்று சாடின.

13ஆம் திருத்தச் சட்டம் குறித்து ஏமாற்றம் தெரிவிக்கும் வகையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் சிவசிதம்பரம், செயலாளர் அமிர்தலிங்கம், துணைத் தலைவர் சம்பந்தன் ஆகிய மூவரும் இந்தியத் தலைமையமைச்சர் இராசீவு காந்திக்கு 1987 அட்டோபர் 28ஆம் நாள் எழுதிய கடிதம் ஒரு வரலாற்று ஆவணம். இந்தக் கடிதத்தில் அவர்கள் தெளிவாகக் கூறினார்கள்:

“இந்த முன்மொழிவுகள் தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவு செய்யவில்லை. தமிழ் மக்கள் சந்தித்துள்ள உயிரிழப்பு, இன்னல்கள், துயரங்களுக்கு எவ்விதத்தும் ஈடாகவும் இல்லை.”

சுருங்கச் சொல்லின் 13ஆம் திருத்தச் சட்டம் ஒரு கேலிக்கூத்து! ஒரு மோசடி! இந்தக் கேலிக் கூத்தைத்தான், இந்த மோசடியைத்தான் இப்போது முழுமையாகச் செயலாக்கச் சொல்லித் தமிழ் அரசியல் தலைவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு சிங்கள அரசிடம் பேரம் பேசுகின்றது இந்திய வல்லரசு.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் படி வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணம் அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் கூட இந்திய அரசிடமிருந்து வரவில்லையே, ஏன்? ஒரு பன்னாட்டு ஒப்பந்தத்தின் படி வலியுறுத்த வேண்டிய கோரிக்கையை வாய்மொழியாகக் கூட பேசாமல் மோசடியான 13ஆம் திருத்தச் சட்டத்தை ஈழத் தமிழர்கள் தலையில் கட்ட முயலும் இந்திய அரசின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த 13ஆம் திருத்தச் சட்டம் எவ்வகையிலும் தமிழர்களின் தேசிய இனச் சிக்கலுக்குத் தீர்வாகாது என்பது மட்டுமல்ல, சிங்களத்தின் கட்டமைப்பியல் இனவழிப்புக்குத் துணை செய்வதாகவும் அமையும் என்பது ஆய்ந்து தெளிந்த முடிவாகும்.

ஈழத் தமிழர் தொடர்பான இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு 13ஆவது திருத்தச் சட்டம்தான் என்பதால் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று சொல்லக்கூடிய தமிழ்த் தலைவர்களும் உள்ளனர், ஆய்வு அறிஞர்களும் உள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் உச்சம் தொட்ட ஈழத் தமிழர் இனவழிப்பு குறித்து இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு என்ன? இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி கோரும் தமிழர் போராட்டம் குறித்து இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு என்ன? உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் போர்க் குற்றங்களும் மானிட விரோதக் குற்றங்களும் நிகழ்ந்துள்ளன என்ற நம்பகமான குற்றச்சாட்டுகளை எடுத்துரைக்கும் மூன்று ஐநா அறிக்கைகள் (தாருஸ்மன், சார்லஸ் பெற்றி,மனிதவுரிமை ஆணையர் அலுவலகத்தின் அறிக்கை)குறித்து இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு என்ன? இந்தக் குற்றச்சாட்டுகள் மீது புலனாய்வு செய்ய உள்நாட்டுப் பொறிமுறையா? பன்னாட்டுப் பொறிமுறையா? கலப்புப் பொறிமுறையா? என்ற வினாவில் இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு என்ன?

ஐநா மாந்தவுரிமைப் பேரவையில் 2015ஆம் ஆண்டு இலங்கையும் இந்தியாவும் உள்ளிட்ட கூட்டு முன்மொழிவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் குறித்தும், அதிலிருந்து சிறிலங்கா ஓடிப்போனது குறித்தும் இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு என்ன? ஐநா மனிதவுரிமைப் பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானங்களில் இந்தியா தொடர்ச்சியாகவும் முன்பின்முரணின்றியும் கடைப்பிடித்துள்ள கொள்கை நிலைப்பாடு என்ன?
ஈழத் தமிழினம் கோருவது இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி, குற்றவியல் நீதியும் அரசியல் நீதியும்! இந்தியா ஏனோதானோ என்று முன்வைப்பது தமிழர்களால் மறுதலிக்கப்பட்ட 13ஆம் திருத்தம்! இது மோசடியான கேலிக்கூத்து என்று கருநிலையிலேயே தலைவர்கள் சிவசிதம்பரமும் அமிர்தலிங்கமும் சம்பந்தர் ஐயாவும் தோலுரித்துக் காட்டிய பின், அதையே வரலாற்றின் குப்பைத் தொட்டியிலிருந்து தூக்கி வந்து சீவி சிங்காரித்து அம்பலத்தில் ஆடவைக்க இந்தியா செய்யும் சூழ்ச்சிக்குப் பலியாகலாமா தமிழர்கள்?
பரமபத விளையாட்டு போல் இஃது இந்தியாவின் 13பத விளையாட்டு!
தமிழினம் போரிலே தோற்றபின் வெற்றியாளனின் நீதிக்குத்தான் பணிந்து போக வேண்டும் என்று சிங்களப் பேரினவாத அரசுக்கு அடங்கிப் போகச் சொல்லும் இரண்டகக் கும்பல் ஒரு பக்கம்! இந்தியாவின் விரிவாதிக்க அரசியலுக்குத் துணைநின்று அது ஈவதை இரந்து பெற்றுக்கொள்ள ஓடேந்தி நிற்கும் இரவலர் கும்பல் மறுபக்கம்! இந்த இரண்டகர்களையும் இரவலர்களையும் எதிர்த்துப் போராடி வெல்வதுதான் விடுமை வாழ்வுக்கு வழி!
இந்தியாவுக்கு என்ன வந்தது? அது ஏன் 13ஆம் திருத்தத்தைப் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும்? இந்திய வல்லரசின் புவிசார் அரசியல் அப்படி! சீனக் கொள்ளையருக்கும் இந்தியக் கொள்ளையருக்கும் இலங்கை என்னும் கொள்ளைப் பொருளைப் பங்கிட்டுக் கொள்வதில் போட்டி! இலங்கை என்னும் சதுரங்கப் பலகையில் தமிழர்களைப் பகடைகளாக உருட்டுவது இந்தியாவின் உத்தி! அதற்காகத் தமிழீழ விடுதலையையும் ஏற்றுக் கொண்டு விடக் கூடாது! தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு! பன்னாட்டு நீதிப் பொறிமுறை! குற்றவாளிகளைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் கூண்டிலேற்றுவது! பொதுவாக்கெடுப்பு வழியிலான அரசியல் தீர்வு! இவற்றில் எதுவும் சிங்கள அரசை மிரட்டிக் கைக்கடக்கமாக வைத்துக் கொண்டே சீனச் செல்வாக்கைக் கட்டுப்படுத்த உதவாது. மாறாகத் தமிழர்களின் விடுமைப் பயிருக்கு இவையெல்லாம் நீர் பாய்ச்சுவதாகி விடும்.
3ஆம் திருத்தம் வெறும் புழு! யாரையும் கடிக்காது. 13ஆம் திருத்தம் தமிழ் மக்களின் எந்த உரிமையையும் மீட்டுக் கொடுக்காது. தமிழர் தாயகத்தின் மீதான வன்பறிப்பை (ஆக்கிரமிப்பை) முடிவுக்குக் கொண்டுவராது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துக் கொடுக்காது. சிறையில் அடைபட்டுள்ள போர்க் கைதிகளை விடுவிக்காது. தமிழ் நிலத்தின் சிங்கள பௌத்த மயமாக்கத்தைத் தடுக்காது. சிங்கள வன் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தாது.
13ஆம் திருத்தத்துக்காக இந்தியக் குடுமி ஆடுவதேன்? இந்தக் கேள்விக்குத் தெளிவான விடை: முள்ளிவாய்க்காலுக்கு முன் நேர் இனவழிப்புக்குத் துணைபோன இந்திய வல்லரசு இப்போது தொடரும் கட்டமைப்பியல் இனவழிப்புக்கும் துணைபோய்க் கொண்டிருக்கிறது என்பதே!
எச்சரிக்கை தமிழா!


(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 272