அறிஞர் அண்ணாவின் ஏ, தாழ்ந்த தமிழகமே! 6/8
(ஏ, தாழ்ந்ததமிழகமே! 5/8 தொடர்ச்சி)
[1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.]
இருந்தால் என்ன? இறந்தால் என்ன?
அதனால்தான் நமது கவி பாரதிதாசன் இந்த உலகத்தைப் பற்றிப் பாடுகிறார். இந்த உலகத்தில் நீ பிறந்தது வாழ; வாழ என்றால் நிம்மதியுடன் வாழ; பிறரைச் சுரண்டாமல் வாழ; பிறரை வஞ்சித்தால்தான் வாழலாம் என்ற எண்ணமில்லாமல் வாழ; சுதந்திரமாய் வாழ என்கிறார். உருதிலே சிறந்த கவியான இக்குபால் என்பவர் வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடும்போது, அச்சமற்ற வாழ்க்கை தேவை என்றார். அச்சமற்ற வாழ்க்கை என்றால் அந்நியருக்கு அச்சமற்ற வாழ்க்கை; அறியாமைக்கு அச்சமற்ற வாழ்க்கை; சமுதாயக் கட்டுப்பாடுகளுக்கு அச்சமற்ற வாழ்க்கை, அந்த அச்சமற்ற வாழ்க்கையைத்தான் தமிழன் நடத்தவேண்டும். அதற்கு இடையூறாக எந்தக் கட்டுப்பாடுகள் வந்தபோதிலும், தூள்தூளாக்க வேண்டும் இதைத் ‘தாயின் மேலாணை, தமிழக மேலாணை, தூய என் தமிழ் மேல் ஆணையிட்டே நான் தோழரே உரைக்கிறேன்‘ என்று அவர் பாட்டில் கூறுகிறார். அவர் கவிதைகளிலே இந்த உலகத்தைப் பற்றி, இந்த வாழ்வைப் பற்றி; வாழ்கின்ற முறையைப் பற்றிதான் இருக்கும். இதுதான் தேவை.
அவன் ஏன் ஏழை? பூர்வசென்மத்தில் செய்த பாவம். அவன் ஏன் பணக்காரனா-யிருக்கிறான்? அவன் செய்த புண்ணியம்.
அவன் ஏன் தூங்காமலும் வேலை செய்து கொண்டேயிருக்கிறான்; இவன் ஏன் கவலையில்லாமல் தூங்குகிறான்? அவாளவாள் பூர்வ சென்ம பலன், தாழ்ந்த சாதி என்ற ஒன்று ஏன் இருக்க வேண்டும்? உயர்ந்த சாதி இருக்கிறபொழுது தாழ்ந்த சாதி இருந்து தானே ஆகும் என்ற வேதாந்தங்களையும்-பிறந்தோம்; பரமன் இட்ட கட்டளையை அனுபவித்துத்தானே தீர வேண்டும் என்ற கோழை உள்ளங்களையுமே வளர்ப்பவை எந்த உருவத்தில் இருந்தால் என்ன? அந்தாதியாயிருந்தாலென்ன? அகவலா யிருந்தால் என்ன? இவை இருந்தால் என்ன? இறந்தால் என்ன? பிற்காலத்திற்குத் தேவையில்லை. தேவையில்லை என்று சொல்லுபவர்களைக் கலையின் விரோதிகள், கலை நிலை உணரா மக்கள் என்றும், தங்களையும்ஆதரிக்க ஒரு பத்து பேர் இருக்கிறார்கள் என்ற துணிச்சலால் சிலர் சிந்தனையின்றி நிந்திக்கலாம். ஆனால், அவர்களெல்லாரும் வருங்கால மக்களின் கண்டனத்துக்குரியவர்கள்.
ஏன் சொல்லுகிறேன்?
மீனாட்சி சுந்தரனார்களும், சிதம்பரநாதர்களும், புத்தம் புதுக் கவிதைகளை, காவியங்களை இயற்றித்தரத்தானே இருக்கிறார்கள்? சேரன் செங்குட்டுவனின் வீரத்தைப் பற்றி ஒரு பாட்டுப் பாடுங்கள் என்று மீனாட்சி சுந்தரனைக் கேளுங்கள்; ‘ஏன் வீரம் சேரன் செங்குட்டுவனில்தான் இருக்கிறதா? கம்பராமாயணத்திலே வீரம் செறிந்திருக்கிறதே? என்பார்கள், நான் மீனாட்சி சுந்தரனாரைப் பற்றி ஏதோ தவறாகக் கூறுகின்றேன் என்று நினைக்க வேண்டா. இராமனுடைய வீரம் தமிழனுடைய வீரத்திற்க்கு நல்ல எடுத்துக்காட்டல்ல. தமிழனுடைய வீரத்திற்குத் தக்க சான்று உள்ளதைப் பாடுங்கள் என்கிறோம். புதிய கவிதைகளைப் பாடுங்கள் என்கிறோம். எங்கள் ஊனக் கண்ணுக்கு தெரியும் பொருளைப்-பற்றிப் பாடுங்கள் என்கிறோம்.
சாதாரண மக்களின் சதையையும், பிய்க்கும்படியான கவிதைகளையும் பாடுங்கள் என்கிறோம். தாயின் தன்மை ததும்பும்படிப் பாடுங்கள் என்கிறோம். தேயிலைத் தோட்டத்திலே நமது இளம் பெண்கள் படுகிற துன்பத்தைப் பற்றிப் பாடுங்கள் என்கிறோம். பாட்டாளி கொடிய பணக்காரனுக்கு அடிமை; பணக்காரன் பூசாரிக்கு அடிமை; பூசாரி ஏட்டுக் கடிமை; ஏடு கலைக்கு அடிமை; கலை கலா ரசிகர்களுக்கு அடிமை; கலாரசிகர்கள் பழமைக்கடிமை என்ற அடிமைத்தனம் அறுபடும் மார்க்கத்தைப் பற்றிப் பாடுங்கள் என்கிறோம்.
குட்டிப் பாரதிதாசன்
நாமக்கல் கவிஞரின் மகனார், “தியாகி”யில் தீட்டிய ஒரு கவிதையைப் பார்த்தேன். நாமக்கல் கவிஞர் வீட்டிலே ஒரு குட்டிப் பாரதிதாசன் வளர்கிறார், மணியடிக்கிறதாம், பள்ளிக்கூடம் விட்டு வீடு வருகிறார். வழியிலே சாலைக்குப் பக்கத்தில் எச்சிலை வீழ்கிறது. சில நாய்கள் பாய்கின்றன. அந்த நாய்களுடன் இவர் கண்களும் பாய்கின்றன. ஆனால் ஆச்சரியப்படவில்லை. அடுத்தவிநாடி ஒரு வற்றிய மனித உருவம் வருகிறது. எச்சிலைகளின்மேல் பாய்கிறது. பாய்ந்து நாயைக் கல்லால்கூட அடிக்க வலுவில்லாமல் கையால் பிடித்துத் தள்ளுகிறது. தள்ளிவிட்டு, அந்த எச்சிலை உண்கிறது. நாய் சும்மா போக வில்லை. ஒரு கடி கடித்துவிட்டுப் போகிறது. இதைக் காணத் தம்பிக்கு ஆச்சரியம் மட்டுமல்ல, வேதனையும் பிறக்கிறது. தம்பி இந்தக் காட்சியை இன்னும் காணும்படியான இந்த நிலையிலே உள்ள, ‘ஏ! பாரத நாடே’ என்கிறார். கவிதை முடிகிறது. முடிக்கிறார் என்றால், எல்லோரையும் போல, “ஈசனே சிவகாமி நேசனே” என்று முடிக்கவில்லை ‘என் நாடே‘ என்று கவிதையை முடிக்கிறார். இன்று கவிதைகள் அப்படிப்பட்ட முறையிலே வெளிவர வேண்டும் என்கிறோம்.
முத்திரை மோதிரம்
பாரதிதாசன் பாக்கள் அத்தகையன; அதனால்தான் அவர் பாக்களை மாணவர்கள் போற்றுகின்றனர். அவரைச் சிலருக்குப் பிடிக்காமலிருக்கலாம். அவர் காரசாரமாகச் சாதியைச் சமயத்தைக் கண்டிக்கிறார் என்பதற்காக. பாரதிதாசன் வர்ணாசிரமத்தைக் கண்டிக்கிறார். கண்டிக்கலாமா? சனாதனத்தைச் சாடலாமா? வகுப்பு வாதத்தை வளர்க்கலாமா என்று கேட்கின்றனர். வகுப்பு வாதத்தை அவர் வளர்க்கிறார் என்றால், வகுப்பு வாதம் இந்த நாட்டை விட்டுப் போகத்தான் – விட்டு விலகத்தான் பாரதிதாசன் பாடுகிறார். கவிதைகளைக் கவண்கற்களாக உபயோகப்படுத்துகிறார். அந்தக் கற்கள் வருணாசிரமத்தைக் தாக்குகின்றன. அது யாருக்குச் சொந்தமான கோட்டையா-யிருந்தால் என்ன? அது யாருக்குச் சொந்தமான கொத்தளமாயிருந்தால் என்ன? தாக்கட்டும், தகர்க்கட்டும் என்கிறார். அந்தக் கோட்டைக்குச் சொந்தக்காரர் யார் என்று பார்க்கிறார்; அவர்களைத் தாக்குகிறார்.
கன்னையா கம்பெனி நாடகம் நடக்கிறது. இராசபார்ட்டு வேடத்தில் உள்ளவனின் இராகம் இரசிக்கவில்லை, தொண்டை கட்டிய காரணத்தால். உடனே நாடகத்தைப் பார்ப்பவர்கள் ‘உள்ளே போ‘ என்று கூச்சல் போடுகிறார்கள்; போய்விடுகிறான். நாடகம் முடிந்து வெளியே போகிறவர்கள் என்ன பேசிக் கொள்வார்கள்? ‘கன்னையா கம்பெனி மோசம்‘ என்பார்கள். இராசமாணிக்கம் பிள்ளை நாடகம் நடக்கிறது. நடிகர்களின் திறமையாலோ விளக்குகளின் மினுமினுப்பாலோ உட்கார்ந்திருப்பவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது, நாடகம் முடிந்து வெளியே போகிறவர்கள் என்ன பேசிக்கொள்வார்கள்? இராசமாணிக்கம் கம்பெனி நன்றாயிருக்கிறது என்பார்கள்.
எப்படித் தொண்டை கட்டிய நடிகன், கம்பெனிக்குச் சொந்தமானதால் கன்னையா கம்பெனி பழிப்புக்கிடமாகிறதோ, அதுபோல, வருணாசிரமக் கொடுமைக்குச் சாதீயக் கொடுமைக்குச் சொந்தக்காரர்களாய் இருப்பவர்கள் பழிப்புக்கு இடமாகிறார்கள்.
சாதீயக் கொடுமையின் மேல் எந்தச் சிலாசாசனம் பொறிக் கப்பட்டிருக்கிறது? யாருடைய முத்திரை மோதிரம் போடப் பட்டிருக்கிறது? யாருடைய முத்திரை மோதிரம் போடப் பட்டிருக்கிறது என்று பார்த்த நேரத்தில் ஒரு வகுப்பாரின் முத்திரை மோதிரம் தெரிந்தது. தெரிந்ததால் தான், நாமும் நமது கவியும் ஆரியத்தைத் தாக்குகிறோம், காரணத்தோடு.
பார்ப்பனர்கள் எனது ஆருயிர் நண்பர்கள்; எப்படியிருந்தால்? பார்ப்பனர்கள் மாத்திரம் தங்களுடைய குறையை நீக்கிக் கொள்வார்களானால், இந்தப் பாரில் பார்ப்பன தோழர்களைப்போலப் பரம திருப்தியாளர்கள் யாரும் எனக்கு இருக்க முடியாது. தள்ளவேண்டிய சுயநலம் தன்னை நீக்கிக் கொள்ளக் கொஞ்சம் தன்னலமற்ற தன்மை வேண்டும்; புதுமைக் கருத்து வேண்டும்; துணிவு வேண்டும்; அஞ்சா நெஞ்சம் வேண்டும்.
புதுச்சேரியிலே வைதிகர்களைக் திட்டுகிறார்களென்றால், பயப்படாமல் போய், ஏன் என்று பார்க்க வேண்டும். காக்கை குருவி எங்கள் குலம் என்று பாரதி பாடிய இந்த நாட்டிலே, சூத்திரர்கள், மனிதர்கள் எங்கள் குலம் என்று சொல்வதற்கு இன்று அஞ்சுகிறார்கள் என்றால், நாங்கள் வீசுகிற குண்டு எந்தக் கோட்டை மீது வீழ்ந்தாலென்ன? அதிலிருந்து வெளிவரும் விசவாயுக்கள் – நச்சு வாடைகள் – முடக்கு வாதங்கள் ஒழிய வேண்டும். பார்ப்பனத் தோழர்கள் மாத்திரம் நம்முடன் கைகோர்த்துக் தோளுடன் தோள் இணைந்து, நாம் “சாதியை ஒழிப்போம்” என்று எழுதியும், பேசியும் செயலிலே காட்டியும் வருவதுபோல் வரட்டும். வராவிட்டால் சும்மா இருக்கட்டும். எதிர்க்காமலாவது இருக்கட்டும். எதிர்க்காமல் இருக்க முடியவில்லையென்றால் ஏளனம் செய்யாமலாவது இருக்கட்டும்; ஏன் என்று கேட்காமல் எதையாவது செய்யட்டும் என்று கூறட்டும். பாருங்கள்! பத்து வருடத்தில் சாதி ஒழிகிறதா, இல்லையா என்று! கவி கண்ட கனவு நனவாகிறதா, இல்லையா என்று.
(தொடரும்)
ஏ, தாழ்ந்த தமிழகமே!
பேரறிஞர் அண்ணா
Leave a Reply