தந்தை பெரியார் சிந்தனைகள் 7 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 6 இன் தொடர்ச்சி)
தந்தை பெரியார் சிந்தனைகள் 7
இன்னும் முருகனது மூவித சக்திவடிவம், வள்ளி – தெய்வயானை தத்துவம், தேவசேனாபதி, நான்முகனைச் சிறையில் வைத்தல், சூரசம்காரம், குகன், ஞானபண்டிதன் என்பவைபற்றியெல்லாம் தத்துவங்கள் உள்ளன. இங்ஙனம் முருகனடியார்கள் சிந்தித்து எழுதியுள்ளனர். இவற்றையெல்லாம் பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் ஏற்பட்டன என்று சொல்வதற்கில்லை. என்ன காரணத்தாலோ பார்ப்பனர்களைத் திட்டித் தீர்க்கின்றார்கள் தந்தையவர்கள். வெள்ளைக்காரர் ஆட்சியில் பார்ப்பனர்கள் படித்து அரசு அலுவல்களில் சேர்ந்து விட்டனர். பல மட்டங்களில் அவர்கள் அக்காலத்தில் செய்த அட்டகாசங்கள் சொல்லிமுடியா. இதனால் தான் அக்காலத்தில் நீதிக்கட்சி தோன்றி அரசையும் பார்ப்பனர்களையும் எதிர்த்தது. இதனை நினைந்துதான் அதிகமாக அவர்களைக் கடிகின்றார். 1940-முதல் ஓரளவு எனக்குத் தெரியும். துறையூரில் நான் தலைமையாசிரியனாக இருந்த காலத்தில் (1941-1950) எவ்வளவோ விளம்பரம் செய்தும் பார்ப்பனர்களைத் தவிர வேறு சாதி ஆசிரியர்கள் கிடைக்கவில்லை; பயிற்சி பெறாத பட்டதாரிகள் கூட கிடைக்கவில்லை. ஓய்வு பெற்ற பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள், இவர்களை நேரில் தேடிப்பிடித்து நியமனம் செய்து பள்ளியை நடத்தும் நிலை ஏற்பட்டது.
இன்றைய நிலை வேறு. பார்ப்பனர்கள் நம்முடன் கலந்து பழகுகின்றனர். கலப்புத்திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு முன்வந்து விட்டனர். இந்நிலையில் அவர்களை வெறுக்க வேண்டிய இன்றியமையாமை இல்லை. நம்மோடு அவர்களை இணைத்துக்கொண்டு வாழ்வதே சிறப்பு. சாதிக்கொள்கையைக் கைவிட்டு சாதியற்ற பெரியார் கொள்கையைக் கடைப் பிடித்தவர்களை வெறுப்பது நியாயம் இல்லை.
(2) வைணவம்: வைணவம் இறைவனை ‘ஈசுவரன்’ என்று பேசும். இங்கும் உருவ வழிபாடு சிறப்பாக அமைகின்றது. இறைவனுடைய திருமேனியைப்பற்றி வைணவதத்துவம் ஐந்து வகையாகப் பேசும்.
(அ) பரத்துவம்: இது காலம் நடையடாததும், ஆனந்தம் அளவிறந்து ஒப்பற்றதாயுமுள்ள பரமபதத்தில் இறைவன் பெரிய பிராட்டியார், பூமிப்பிராட்டியார், நீளாதேவியார் சகிதம் அனந்தாழ்வானை அரியாசனமாகவும், பெரியதிருவடியை வாகனமாகவும் கொண்டிருக்கும் இருப்பு.
(ஆ) வியூகம்: இந்த உலகில் (இலீலா விபூதியில்) முத்தொழில்கள் நடைபெறச்செய்யவும், சம்சாரிகளைக் காப்பதற்காகவும், வாசுதேவன், சங்கர்சணன், பிரத்தியும்னன், அநிருத்தன் என்ற பெயருடன் இருக்கும் நிலையாகும்.
(இ) விபவம்: அவதாரங்களைப் பற்றிக் கூறுவது. இவை ஆவேச அவதாரம், முக்கிய அவதாரம் என்று இருவகையாகப் பகுத்துப் பேசப்பெறும். ஆவேச அவதாரத்தில் கபிலர், தத்தாத்திரேயர், பரசுராமர் போன்ற அவதாரங்கள் அடங்கும். முக்கிய அவதாரத்தில் இராமர், கிருட்டிணர், வாமன-திரிவிக்கிரமர் முதலிய மனிதாவதாரங்களும்; மச்சம், கூர்மம், வராகம் போன்ற திரியக்கு (பிராணிவகை) அவதாரங்களும், நரசிம்மம் என்ற பிராணி – மனித அவதாரமும், குப்சாமரம் (குட்டை மாமரம்) முதலான தாவரவடிவங்களும் அடங்கும்.
(ஈ) அந்தர்யாமித்துவம்: சேதநர்களின் இதயக் கமலத்தில் அழகே வடிவெடுத்தாற் போன்ற மங்களகரமான திருமேனியுடன் எல்லாவித ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பெற்றவனாய் பெரிய பிராட்டியோடு கட்டைவிரலளவாய் (அங்குட்ட பிரமாணமாய்) எழுந்தருளியிருக்கும் இருப்பு.
(உ) அர்ச்சாவதாரம்: அடியார்கள் எதைத் தனக்குத் திருமேனியாகக் கொள்ளுகின்றனரோ அதையே தனக்கு வடிவமாகவும், அவர்கள் உகந்து வைத்த திருநாமத்தையே தனக்குப் பெயராகவும் கொண்டுள்ள நிலை.
இந்த நிலையில் எல்லா நிலை எம்பெருமான்களும் அருச்சையாக – விக்கிரகமாக – எழுந்தருளியிருப்பர். இந்நிலையில் அனைத்து எம்பெருமான்களும் தம்மைத் துதிப்பவர்களுடைய கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இனிதாம்படி அநுபவித்தற்கு இடமாக இருத்தல். அதாவது திருப்பாணாழ்வார்,
அண்டர்கோன் அணிஅரங்கன் என் அமுதினைக்
கண்டகண்கள் மற்றொன்றினைக் காணாவே.1
என்று அநுபவித்தவாறு அநுபவிக்கும் நிலை இது.
திருமால் வடிவம்: எம்பெருமானின் திருமேனியைப் பற்றி வேதாந்த தேசிகளின் விளக்கம்: வேதத்தின் பொருளாக உள்ளவன் எம்பெருமான். சித்தும் (உயிர்கள்), அசித்தும் (சடஉலகம்) அவன் திருமேனியில் அடங்கி உள்ளது. இதனை வைணவதத்துவம் சரீர–சரீரிபாவனை (உடல்-உயிர் உறவு) என்று பேசும். திருமங்கையாழ்வாரும்,
திடவிசும்பு எரிநீர் திங்களும் சுடரும்
செழுநிலத்து உயிர்களும் மற்றும்
படர்பொருள் களுமாய் நின்றவன் 2
என்று கூறுவர்; இத்தொகுதி ‘உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்’ என்று மேலும் இதனைத் தெளிவாக்குவர். சீவன்-இரத்தினங்களுள் சிறந்த கெளத்துவாக உள்ளான்; மூலப்பிரகிருதி (உலகம்) சிரீவத்சம் என்ற மறுவாக உள்ளான்; மகாந் என்னும் தத்துவம் கெளமோதகி என்னும் கதையாக உள்ளது. ஞானம் நந்தகம் என்னும் வாளாகவும், அஞ்ஞானம் அவ்வாளின் உறையாகவும் உள்ளன. தாமசாகங்காரம் சாரங்கம் என்னும் வில்லாகவும், சாத்துவித அகங்காரம் பாஞ்சசன்னியம் என்னும் சங்காகவும், மனம் என்னும் தத்துவம் சுதர்சனம் என்னும் சக்கரமாகவும், ஞானேந்திதரியங்கள் ஐந்தும், கன்மேந்தாரியங்கள் ஐந்தும் அம்புகளாகவும், தந்மாத்திரைகள் ஐந்தும், பூதங்கள் ஐந்தும் ஆகியவற்றின் வரிசை வைசயந்தி என்னும் வந மாலையாகவும் அமைந்துள்ளன 3. எம்பெருமானின் நான்கு திருக்கரங்கள் அவனுடைய தெய்வப் பெற்றியை விளக்குகின்றன. மனிதனது ஆற்றலுக்கு அறிகுறி இரண்டு கரங்கள். அவற்றில் ஒன்றில்லா விட்டாலும் அவன் பல செயல்கட்கும் உதவாதவன் ஆகின்றான். இருகைகளையுடையவன் எதையும் செய்யவல்லவனாகின்றான். ஆயினும் மானுட ஆற்றல் அளவைக்கு உட்பட்டது. தெய்வத்தின் ஆற்றல் அளப்பரியது என்பதை நான்கு கைகள் விளக்குகின்றன. ஒரு கையில் திருச்சங்கும், மற்றொரு கையில் திருவாழியும் (சக்கரம்) உள்ளன.
திருச்சங்கு: இதன் தத்துவம்: சங்கு ஊதுமிடத்து உண்டாகும் ஒலி ஓங்காரம். ‘ஓம்‘ என்னும் ஓசைக்கு நாதபிரம்மம் என்று பெயர். இஃது ஒரு மொழியிலும் ஒரு சமயத்திலும் கட்டுப்படாதது. இயற்கை முழுதும் இயங்குவதால் உண்டாகும் ஒலியே ஓங்காரம். அது பிரணவம் என்றும் பகரப்படும். தன்கையில் சங்கை வைத்திருப்பதன் மூலம் தான் பிரணவப்பொருள் என்பதை அவன் அறிவுறுத்துகிறான். அகரம் உகரம் மகரம் அடங்கப்பெற்றது ஓங்காரம், பிரபஞ்சத்திலுள்ள ஓசை ஒலியாகவுள்ள இதன் வெவ்வேறு தோற்றங்கள், ஓசைதான் உலகிலுள்ள அனைத்துக்கும் வித்து ஆகின்றது. ஒசை உருப்பட்டே ஒவ்வொரு பொருளும் ஆகிறது. ஒரு பொருளைப் பதார்த்தம் (வடமொழி) என்கின்றோம். பதமும் அதன் அர்த்தமும் சேர்ந்தது அப்பொருள். வித்து அகப்பட்டால் அதிலிருந்து மரத்தை உண்டு பண்ணலாம். சொல் என்னும் வித்திலிருந்து பொருள் உண்டாகின்றது. ‘மந்திரம்’ என்பது சொல். அதனை ஓயாது உச்சரித்தால் அதன் வடிவம் வந்து விடும்.
நலம்தரு சொல்லை நான்கண்டு
கொண்டேன் நாராயணா என்னும் நாமம் 4
என்பது திருமங்கையாழ்வார் திருமொழி, ‘ஓம்’ என்பதும் ‘நாராயணன்’ என்பதும் மந்திரம். அதனை உருப்போடுகிறவர்களின் மனம் அந்தப் பொருளின் வடிவெடுக்கின்றது. பிறகு நாராயணனைக் காணவும், அவனை அடையவும் முடியும். இப்பொழுது அவன் யாரென்று நமக்குத் தெரியாது; ஆனால் அச்சொல் நமக்குத் தெரியும். தெரிந்ததை உறுதியாகப் பிடித்துக் கொண்டால் தெரியாததை அடையலாம். இக்கோட்பாட்டை அனைவர்க்கும் விளக்குதற்கென்றே அவன் கையில் சங்கை ஏந்திக்கொண்டுள்ளான். பிரணவம் அல்லது அவனுடைய நாம உச்சாரணத்தால் அவனை உறுதியாகப் பெற்றுவிடலாம்.
(தொடரும்)
சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. அ.பெருமாள், அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 26.2.2001 முற்பகல்,‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’ பேராசிரியர் முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்),தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், சென்னைப் பல்கலைக் கழகம்
குறிப்புகள்
- அமலனாதிபிரான்-10
- பெரி.திரு., 4.3:3
- தேசிகப் பிரபந்தம்-80
- பெரி. திரு. 1.1
Leave a Reply