11ஆவது உலகத்தமிழ் மாநாடு முடிந்தது. மலேசியா தமிழ் மாநாட்டின் நிலை என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்
11ஆவது உலகத்தமிழ்மாநாடு முடிந்தது. மலேசியா தமிழ் மாநாட்டின் நிலை என்ன?
கடந்த வெள்ளி, சனி , ஞாயிறு (07,08,09.07.2023) சென்னையில் 11ஆவது உலகத்தமிழ்மாநாடு உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. ஆனால் மலேசியாவிவ் இதே மன்றத்தின் பெயரைப் பயன்படுத்திச் சூலை 21-23இல் 11 ஆவது உலகத்தமிழ்மாநாடு நடைபெறுவதாக அறிவித்து அதற்கான் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
11 ஆவது மாநாடு நடந்து முடிந்த பின் 12 ஆவது மாநாடுதானே நடைபெற வேண்டும். அப்புறம் ஏன் மீண்டும் 11 ஆவது மாநாடு ?
முன்பே குறிப்பிட்டுள்ளதைப் போலத் தமிழ்மாநாடுகளை ஆர்வமுள்ள யாரும் நடத்தலாம். ஆனால், ஒரே மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி வெவ்வேறு ஆட்கள் நடத்துவது எப்படிச் சட்டப்படி முறையாகும்?
உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம்(பு) [IATR-N] என்றாவது பன்னாட்டுத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் என்றாவது பெயரை மாற்றிக் கொண்டு அதன் சார்பில் நடத்தலாம். அப்படி நடத்தும் பொழுது இது முதல் மாநாடுதான். அப்படித்தான் குறிப்பிட வேண்டும்.
10 ஆவது உலகத்தமிழ் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினர் இம்மாநாட்டை நடத்துகையில் முந்தைய தலைவர் இதை நடத்துவதாகக் கூறுவது எப்படி ஏற்புடைத்தாகும்? குறைந்தது இக்குழுவைக் கூட்டச்செய்து முனைவர் பொன்னவைக்கோ தலைமையிலான இம்மன்ற ஆட்சிக் குழுவை அகற்றிப் புதிய பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடத்தி, அதில் வெற்றி பெற்று நடத்தினால் நன்றாக இருந்திருக்கும். அப்படி நடத்தியிருந்தால் பொன்னவைக்கோ அமைப்பினர் விலகியிருப்பர். சென்னையில் 11ஆவது மாநாடு நடந்திருக்காது. அப்படியில்லாமல் முறைப்படியான அமைப்பின் பெயரைப் பிறர் பயன்படுத்துவது எங்ஙனம் முறையாகும்?
உ.த.ஆ.மன்றத்தின் புதிய பொறுப்பாளர்களாகப் பொறி.அரசர் அருளாளர் தலைவராகவும், முனைவர் ப.மருதநாயகம் செயலராகவும்(இந்தியா) தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களது ஒப்புதல் இன்றி இதே மன்றத்தின் பெயரை எவ்வாறு பிறர் பயன்படுத்த முடியும்?
புதிய பொறுப்பாளர்கள் உடன் நீதிமன்றத்தை நாடி, மாநாடு நடத்தத் தடையில்லை என்றும் ஆனால், உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றப்பெயரைப் பயன்படுத்தி மாநாடு நடத்துவது தவறு என்றும் முறையிட்டு வெற்றி காண வேண்டும். அப்பொழுதுதான் பெயர்க் குழப்பம் ஏற்படாது. நாளை இதே போல், மற்றொருவர் இதே பெயரில் செயற்படும் நிலையும் வராது.
தமிழின் பெயரால் ஒற்றுமை மேலோங்க வேண்டுமே தவிரப் பிளவுகள் ஏற்படக் கூடாது.
“பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும்” (குறள் 735) கூடாது எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வலியுறுத்துவதை ஏற்றுச் செயற்பட வேண்டும்.
தமிழ், தமிழ்நாட்டிலும் தன் அரசியமைப்புக் கட்டுப்பாட்டிலான இந்தியாவிலும் தனக்குரிய இடத்தைப் பெறவில்லை. உலகில் பல இடங்களில் தமிழர்கள் வாழ்ந்தாலும் பெரும்பாலான இடங்களில் மதிப்பிழந்தே வாழ்கின்றனர். ஒரு புறம் தமிழின் சிறப்பு உலகில் பரவிக் கொண்டிருந்தாலும் மறுபுறம் தமிழ் வழங்கும் பகுதிகள் தேய்ந்து கொண்டே உள்ளன. இவற்றில் கருத்து செலுத்தித் தமிழையும் தமிழர்களையும் வாழ வைக்க வேண்டிய தமிழ் அமைப்பினர் ஏட்டிக்குப் போட்டியாக நடந்துகொண்டு தமிழுக்கு இழிவு தேடித் தரலாமா? எனவே, ஒன்றுபடுங்கள்! உயர்வு காணுங்கள்!
ஆதலின் புதிய பொறுப்பாளர்கள் விரைந்து செயற்பட வேண்டும். மலேசிய மாநாட்டினரும் தவற்றினை உணர்ந்து புதிய அமைப்பின் பெயரில் முதல் உலகத்தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும். அத்தகைய மாநாட்டிற்கு நம் பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல – இதழுரை
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் அடிப்படை யாப்பு விதிகளை மீறியே மாரிமுத்துவும், பொன்னவைக்கோவும் பின்கதவால் வந்தவர்கள், இதில் ஒருவர் நல்லவர் மற்றவர் நல்லவரல்லர் என்பது மிகமிகப் பிழையான நிலைப்பாடு.
அவர்கள் இருவருக்குமே தாங்கள் பின்கதவால் வந்துசேர்ந்தவர்கள் என்பது தெளிவாகவே தெரியும். ஏனெனில் இருவர்கள் எவருமே தாங்கள்தாம் உண்மையான (legitimate iatr) எனில் அவர்கள் முதலில் செய்திருக்கவேண்டிய வேலை நீதிமன்றத்தினை அணுகி, மற்றவர் அப்பெயரில் இயங்குவதற்குத் தடை பெற்றிருக்கவேண்டும். அதனைப் பொன்னவைக்கோவும் செய்யவில்லை, மாரிமுத்துவும் செய்யவில்லை. காரணம் இருவருமே உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் யாப்பிலிருந்து மிகவும் விலகியுள்ளவர்கள்.
அமெரிக்கைத் தமிழர்களுக்கு அண்ணா பல்கலை என்ற கோதாவில் பொன்னவைக்கோ அணியை ஆதரிக்கிறீர்கள். இதனால் மட்டும் அவரது அணிதான் உண்மையானதென்றாகிவிடாது.
ஓ! இதுதான் செய்தியா?