( ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 32 தொடர்ச்சி)

               சான்றோரும் ஊர்ப்பெயரும்

      தெய்வ மணங் கமழும் தமிழகத்தில் ஆன்றோர் பலர் தோன்றினர்; ஆண்டவனை அடைதற்குரிய நெறி காட்டினர்; அருட்பாடல்களால் அன்பை வளர்த்தனர். இத்தகைய தெய்வப் பணி செய்த பெரியாரை நாயனார் என்றும், ஆழ்வார் என்றும் தமிழகம் போற்றி வருகின்றது. அவர்கள் பிறந்த ஊர்களும், பாடிய பதிகளும் தனிப் பெருமையுற்று விளங்குகின்றன.

நாவீறுடையார்

      நெல்லை நாட்டில் நாவீறுடையபுரம் என்ற சிற்றூர் ஒன்று உள்ளது. நாவீறு என்பது சொல்லின் செல்வம். அச்செல்வத்தைச் சிறப்பாகப் பெற்ற நம்மாழ்வாரை நாவீறுடையார் என்று வைணவ உலகம் போற்றுகின்றது. அவர் பெயர் கொண்டு விளங்குவது நாவீறுடைய புரம்.

சிறுத்தொண்டர்

      திருத்தொண்டர் புராணத்தில் பாராட்டப்பெறுகின்ற சிவனடியாருள் ஒருவர் சிறுத்தொண்டர் என்னும் பெயருடையார். அவர் பல்லவ மன்னரிடம் படைத் தலைவராய்ப் பணி செய்தவர். பகைவரை முருக்கி வெல்லும் வீரம் வாய்ந்த அப் பெரியார் பரமனடியாரைக் கண்ட பொழுது பணிந்து தாழ்ந்து துவண்டு நின்ற  காரணத்தால் சிறுத்தொண்டர் என்று சைவ உலகம் அவரைப் போற்றுவதாயிற்று. நெல்லை நாட்டிலுள்ள சிறுத்தொண்ட நல்லூர் என்னும் சிற்றூர் அவர் பெருமையை நினைவூட்டுகின்றது.

சண்டேச்சுரர்

    சண்டேச்சுர நாயனார், சிவாலயத்திற் சிறப்பாகப் போற்றப்படும் சிவனடியார்களுள் ஒருவர். சிவ வழிபாட்டிற்கு இடையூறு செய்த தந்தையை மழுவால் எறிந்து, “அரனார் மகனார்” ஆகிய அப்பெருமானைச் சண்டேச்சுரர் என்றும், தண்டேச்சுரர் என்றும் சைவ உலகம் வணங்குகின்றது.127 அவர் பெயரால் அமைந்த ஊர் தண்டேச்சுர நல்லூர், அது சிதம்பர வட்டத்திலுள்ளது.

சோமாசி மாறன்

    இன்னும், திருத்தொண்டர் புராணத்தில் பேசப்படுகின்ற சிவனடியார்களில் ஒருவர் சோமாசிமாற நாயனார். அவர் திரு அம்பர் நகரத்து மறையவர் குலத்தைச் சேர்ந்தவர் என்பது சேக்கிழார் வாக்கால் தெரிகின்றது.128 அன்னார் பெயரைக் கொண்ட சோமாசி என்ற ஊர் இராமநாதபுரத்துப் பரமக்குடி வட்டத்தில் உள்ளது.

    தமிழ் நாட்டில் ஆன்றோர் பிறந்த ஊர்கள் சிறந்த தலங்களாக மதிக்கப் பெற்றன. பாடல் பெற்ற தலங்களைப் போலவே அவ்வூர்ப் பெயர்களில் திரு என்னும் அடை விளங்கக் காணலாம்.

திருவாதவூரர்

    சைவர்கள் தலைக்கொண்டு போற்றும் பெருமை சான்றது திருவாசகம். அதனை அருளிச் செய்தவர்  மாணிக்கவாசகர். மணி மொழிகளால் அமைந்த திருவாசகத்தைப் பாடிய பின்னரே மாணிக்கவாசகர் என்னும் பெயர் அமைவதாயிற்று. அதற்கு முன் திருவாதவூர் என்றே அவர் குறிக்கப் பெற்றார். அவர் பிறந்தமையால் பாண்டி நாட்டிலுள்ள வாதவூர், திருவாதவூர் ஆயிற்று. அவ்வாறே திருநாவுக்கரசர் பிறந்தமையால் பெருமையுற்ற ஊர் ஆமூர் ஆகும். “தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர்” என்று திருத்தொண்டர் புராணத்திற் சிறப்பிக்கப்பட்ட ஊர் இப்பொழுது தென் ஆர்க்காட்டுக் கூடலூர் வட்டத்தில் உள்ளது. ஆமூர் என்னும் மூதூர் திருநாவுக்கரசர் பிறந்த ஊராதலால் திருவாமூர் ஆயிற்று.

திருமழிசையாழ்வார்

   சென்னைக்கு மேற்கேயுள்ள பூந்தமல்லி என்னும் பூவிருந்த வல்லிக்கு அண்மையில் அமைந்தது திருமழிசை. இவ்வூரிற் பிறந்து இளமையிலேயே பரஞானம் பெற்று, திருவல்லிக்கேணியில் நெடுங்காலம் யோகத்தில் எழுந்தருளியிருந்து, கும்பகோணம் எனப்படும் திருக்குடந்தையில் பரமபதம் அடைந்தார் ஓர் ஆழ்வார். அவர் பிறந்தமையால் மழிசை திருமழிசை ஆயிற்று. அவ்வாழ்வாரும் திருமழிசை ஆழ்வார் என்றே வழங்கப் பெறுகின்றார். செயின்ட்டு தாமசு    கிருத்தவ சமய சீலராகிய செயின்ட்டு தாமசு என்பவர், கி.பி. முதல் நூற்றாண்டில் தமிழ் நாட்டிற் போந்து, மயிலாப்பூரில் சில காலம் தங்கியிருந்து சமய போதகம் செய்தார் என்றும், அதனால் விளைந்த குரோதத்தால் கொலையுண்டு இறந்தார் என்றும் கர்ண பரம்பரைக்கதையொன்று உண்டு. அவர் வசித்த இடம் மயிலாப்பூரை அடுத்த சாந்தோம் என்பர். அவர் கொலையுண்ட இடம் சென்னைக்கு ஆறு கல் தூரத்தில் அவர் பெயரால் வழங்கும் செயின்ட்டு தாமசு மலையென்றும் கூறுவர்.

பதினாறாம் நூற்றாண்டில் பரங்கியர் என்று தமிழ் நாட்டில் அழைக்கப்பட்ட  போர்ச்சுகீசியர் அம் மலையில் வசித்தமையால் பரங்கிமலை யென்னும் பெயரும் அதற்கு அமைவதாயிற்று. நானூறு ஆண்டுகளுக்கு முன்னே அன்னார் கட்டிய தேவமாதாவின் கோவில் இன்றும் பரங்கிமலையின் உச்சியிற் காணப்படுகின்றது என்பர்.129

++

127. சண்டேசுர நாயனார் புராணம், 59.
128. சோமாசி மாறநாயனார் புராணம், 1.

129. செ.மா.ப.கையேடு, தொகுதி 3, ப.778(M.M.Vol.III,p.778.)

++