(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 31. தொடர்ச்சி)

                   ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 32

மகமதியரும் கிருத்துவரும்

வாலாசா

    தமிழ் நாட்டிலுள்ள வட ஆர்க்காட்டு வட்டத்தில் மகமதியத் தலைவர்கள் பெயரால் அமைந்த ஊர்கள் சில உண்டு. கருநாடக நவாபுகளில் ஒருவன் முகம்மது அலி என்பவன். அவனுக்கு வாலாசா என்னும் பெயரும் உண்டு. அப் பெயர் ஆர்க்காட்டிலுள்ள வாலாசா பேட்டைக்கு அமைந்துள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாலாசாவின் அமைச்சனால் அந்நகரம் உண்டாக்கப்பட்டதென்று சரித்திரம் கூறும். பதினெட்டுப் பேட்டைகளை உடையதாக அமைந்த அந் நகரம் சில காலம் சிறந்து விளங்குவதாயிற்று.

    இன்னும், உடையார் பாளையத்திலுள்ள வாலாசா நகரமும், பாலாற்றங்கரையிலுள்ள வாலாசாபாத்து  என்னும் ஊரும் முகம்மது அலியின் பெயரைத் தாங்கி நிற்கின்றன.

     வாலாசா பேட்டைக்கு அருகேயுள்ள இராணிப்பேட்டையின் வரலாறு அறியத் தக்கதாகும். செஞ்சிக் கோட்டையில் தேசிங்குராசன் என்னும் வீரன் சிறந்து விளங்கினான். மகமதிய நவாபாகிய சாதுல்லாகான் என்பவன் அக் கோட்டையின்மீது படை யெடுத்தான். இருவருக்கும் கடும் போர் மூண்டது.

தேசிங்குராசன் மாற்றார் வியப்புற வீரப்போர் புரிந்து மாண்டான். அந் நிலையில் அவன் தேவியாகிய இராணி, கணவன் உயிரோடு தன் உயிரை இசைவிக்கக் கருதி, உடன்கட்டை ஏறி உயிர் துறந்தாள். அப்பெண்மணியின் பெருமை என்றும் விளங்கும் வண்ணம், இராணிப் பேட்டை என்னும் பெயரால் புதியதோர் ஊரை உண்டாக்கினான். அது நெடுங்காலமாக ஒரு சிறந்த படைவீடாக விளங்கிற்று.

கான்சாகிபு

    பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலப் படைக்குத் துணைபுரிந்த மகமது யூசப்கான் என்பவன் தமிழ்நாட்டில் கான்சாகிபு என்று வழங்கப்பெற்றான். அவன் செய்த உதவிக்குக் கைம்மாறாகப் பாண்டி நாட்டின் ஆளுநராக ஆங்கிலேயர் அவனை நியமித்தனர். மதுரையைச் சேர்ந்த கான்சாபுரமும், இராமநாதபுரத்தைச் சேர்ந்த கான்சாகிபு புரமும் அவன் பெயரால் அமைந்துள்ளன.

    இன்னும் பல ஊர்கள் மகமதியப் பெயர்களைக்கொண்டு வழங்கக் காணலாம். அவை பெரும்பாலும் பேட்டைமுதலியவற்றோடு இணைந்துள்ளன. சென்னையின் அருகே அமைந்துள்ள

சைதாப்பேட்டையும், வட ஆர்க்காட்டிலுள்ள சாவ்வர் பேட்டை, மூர்தானா பட்டடை முதலிய ஊர்களும் மகமதிய சம்பந்தமுடையன என்பது வெளிப்படை.

அபாத்து

     இன்னும் மகமதியரோடு தொடர்புடைய ஊர்கள், அபாத்து என்பது முடிவுடைய பெயர் கொண்டு வழங்கக் காணலாம். பாரசீக மொழியில் அபாத் என்பது நகரத்தைக் குறிக்கும். ஆர்க்காட்டு வட்டத்தில் மன்சரபாத்து. அனவரபாத்து, முரார்பாத்து முதலிய ஊர்கள் காணப்படுகின்றன.

    தமிழ் நாட்டில் மகமதிய வகுப்பாரைக் குறிக்கும் இராவுத்தர், மரக்காயர் முதலிய பொருள்களும் ஊர்ப் பெயர்களில் புகுந்துள்ளன. தென் ஆர்காட்டிலுள்ள இராவுத்த நல்லூரும், இராமநாத புரத்திலுள்ள மரக்காயர் பட்டினமும் இவ்வுண்மைக்குச் சான்றாகும்.

உசேன்

    வட ஆர்க்காட்டு வேலூருக்கு அருகே ஊசூர் என்னும் ஊர் உள்ளது. அஃது உசேன் என்ற மகமதியர் பெயரால் அமைந்த ஊராகும். உசேனூர் என்பது ஊசூர் என மருவிற்று. உசேன்பாத்து என்னும் பெயரும் அதற்குண்டு. இன்னும் வட ஆர்க்காட்டுப் போளூர் வட்டத்தில் அலியாபாத்து என்னும் ஊரும், மன்சராபாத்து என்னும் துருக்கமும் உள்ளன. அவை முறையே அலி, மன்சூர் என்ற இரு மகமதியர் பெயரைக் கொண்டுள்ளன. திருச்சி நாட்டிலுள்ள லால்குடி என்னும் ஊருக்கு அப் பெயரிட்டவர் மகமதியரே, முன்னாளில் தவத்துறை என்பது அதன் பெயர். அங்குள்ள திருக்கோயிலின் செங்கோபுரத்தைக் கண்டு இலால்குடி என்று அவ்வூரை மகமதியர் குறித்தார்கள். பாரசீக மொழியில் இலால்குடி என்பதற்குச் செம்பதுமை என்பது பொருளாம்.

      சென்ற சில நூற்றாண்டுகளாகத் தமிழ் நாட்டில் பரவி வரும் கிருத்துவ சமயத்தின் சார்பாக எழுந்த ஊர்களும் உண்டு. நெல்லை நாட்டில் கிருத்தவர்கள் மிகுதியாக வசிக்கும் பாகங்களில் நாசரேத்து, சுவிசேசபுரம், மெய்ஞ்ஞானபுரம் முதலிய ஊர்கள் காணப்படுகின்றன. இன்னும் ஆரோக்கியபுரம், சாந்தபுரம், சௌக்கியபுரம், சந்தோசபுரம், நீதிபுரம் முதலிய புத்தூர்களும் சென்ற நூற்றாண்டில் எழுந்துள்ளன. இருநூறாண்டுகளுக்கு முன்னே தமிழ்நாட்டில் கிருத்துவப் பெருந்தொண்டராக விளங்கிய வீரமாமுனிவர் கொள்ளிட நதியின் வடகரையில் உள்ள ஏலாக்குறிச்சி என்னும் பழைய ஊரின் ஒரு பாகத்தில் அடைக்கல மாதா ஆகிய தேவமாதாவுக்கு ஒரு கோவில் கட்டினார்; அம்மாதாவின் அருட்காவலில் அமைந்த ஊருக்குத் திருக்காவலூர் என்று பெயரிட்டார்; அவ்வூரில் கோவில் கொண்ட மாதாவின்மீது ஒரு கலம்பகம் பாடினார். அதன் பெயர் திருக்காவலூர்க் கலம்பகம் என்பது.

     வீர மாமுனிவர் கால முதல், வேதியர் என்னும் சொல் கிருத்தவ சமுதாயத்தில் உபதேசியார்களைக் குறிப்பதாயிற்று. அன்னார்க்குரிய ஒழுக்க முறைகளையெல்லாம் தொகுத்து, ‘வேதியர் ஒழுக்கம்’ என்னும் பெயரால் ஓர்  உரைநடை நூலும் எழுதினார் முனிவர். வேதியர்புரம் என்ற ஊர் தஞ்சாவூருக்குத் தென்கிழக்கே எட்டு கல் தூரத்தில் உள்ளது. கிருத்தவர்கள் வாழும் ஊராகவே அஃது இன்றும் விளங்குகின்றது.

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்

அடிக்குறிப்பு