(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 7 தொடர்ச்சி)

ஊரும் பேரும் – 8

மருத நிலம்‌ தொடர்ச்சி

 சமுத்திரம்

    சில ஊர்ப் பெயர்களில் சமுத்திரம் என்ற வடசொல் இடம் பெற்றிருக்கின்றது. தமிழ்நாட்டு மன்னரும் செல்வரும் உண்டாக்கிய பெரிய ஏரிகள், கடல் என்றும், சமுத்திரம் என்றும், வாரிதி என்றும் புனைந்துரைக்கப் பெற்றன.77 இராசராச சோழன் வெட்டிய பெருங்குளம் ஒன்று சோழ சமுத்திரம் என்று சாசனத்திற் குறிக்கப்
படுகின்றது.78 எனவே, தமிழ் நாட்டு ஊர்ப் பெயர்களில் உள்ள சமுத்திரம் என்னும் சொல், பெரும்பாலும் ஏரியின் பெயரென்று கொள்ளலாகும். நெல்லை நாட்டில் அம்பா சமுத்திரம் முதலிய பல ஊர்கள் உள்ளன. அம்பாசமுத்திரத்தின்  ஆதிப்பெயர் இளங்கோக்குடி என்பது.79 அவ்வூரின் அருகே எழுந்த குளம் அம்பாள் சமுத்திரம் என்று பெயர் பெற்றது. அப்பெயர் சிதைந்து அம்பாசமுத்திரம் ஆயிற்று.

     முன்னாளில் ஏரியென்று பெயர் பெற்றிருந்த சில நீர்நிலைகள் இக் காலத்தில் சமுத்திரம் என வழங்குவதற்குச் சான்று சாசனங்களிற் காணப்படும். தொண்டை நாட்டுத் தென்னேரி என்னும் ஊரில் உள்ள பழமையான ஏரியின் கரை ஒருகால் பெருமழையால் உடைந்து போயிற்று. அதனைக் கட்டிக் கொடுத்துப் புகழ்பெற்ற தாதாச்சாரி என்பவர், திரையனேரிக்குத் தாதா சமுத்திரம் என்று பெயரிட்டார் எனச் சாசனம் கூறுகிறது.80

ஏந்தல் தாங்கல்

     இன்னும் சிற்றேரியைக் குறிக்கும் ஏந்தல், தாங்கல் என்னும் இரு சொற்களும் ஊர்ப்பெயர்களில் வழங்குகின்றன. இளவரசன் ஏந்தல், செம்பியன் ஏந்தல் முதலிய ஊர்கள் ஏரியினடியாகப் பிறந்தனவாகும். தாங்கல் என்ற பெயருக்குச் சான்றாக ஆலந்தாங்கல் வடஆர்க்காட்டிலும், வளவன் தாங்கல் செங்கற்பட்டிலும் உள்ளன.
 

ஆவி, வாவி
 

            ஆவியும், வாவியும் குளத்தின் பெயர்களாகும். அவை சிறுபான்மையாக
ஊர்ப்பெயர்களில் இடம் பெற்றிருக்கின்றன. இராமநாதபுரத்து நீராவி யென்ற ஊரிலும், சேலம் நாட்டுக் கல்லாவியிலும் ஆவியைக் காணலாம். மதுரையைச் சேர்ந்த கோடல் வாவி முதலிய ஊர்கள் வாவியின் அருகே எழுந்தனவாகத் தோற்றுகின்றன.


மடு 

     ஆழமான நீர் நிலை மடு வெனப்படும். அச்சொல்லைக் கொண்ட ஊர்ப் பெயர்களும் உண்டு. நெல்லை நாட்டுக் கல் மடுவும், தஞ்சை நாட்டு முதலை மடுவும், தென் ஆர்க்காட்டு ஆனை மடுவும், சேலம் நாட்டுச் செம் மடுவும் இத்தகையனவாகும்.

இலஞ்சி

     இலஞ்சி என்னும் சொல்லும் ஏரியைக் குறிக்கும்.81 நெல்லை நாட்டில் தென்காசிக்கு அருகே இலஞ்சி என்ற ஊர் சிறந்து விளங்குகின்றது. செல்வச் செழுமையால் பொன்னிலஞ்சியென்று புகழ்ந்துரைக்கப்பட்ட அவ்வூர், பயிர்த் தொழிலுக்கு பயன்படுகின்ற குளத்தின் பெயரையே கொண்டுள்ளது.82
 

பொய்கை


     இயற்கையில் அமைந்த நீர்நிலை பொய்கை எனப்படும். பொய்கையார் என்பது ஒரு பழந்தமிழ்ப் புலவரின் பெயர். அவர் பொய்கை என்ற ஊரில் பிறந்தவர் என்பர். இன்னும் முதலாழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்ற மூவரில் ஒருவர் பொய்கை ஆழ்வார். காஞ்சிபுரத்திலுள்ள திருவெஃகா என்னும் திருமால் கோயிலை அடுத்துள்ள தாமரைப் பொய்கையிற் பிறந்தவராதலால் அவர் பொய்கை ஆழ்வார் என்னும் பெயர் பெற்றார் என்று குரு பரம்பரை கூறும்.83 இன்னும், பொய்கை என்ற பெயருடைய ஊர் ஒன்று வட ஆர்க்காட்டில் உள்ளது. எனவே, குளத்தைக் குறிக்கும் பொய்கை என்னும் சொல்லும் ஊர்ப் பெயராக வழங்குதல் உண்டென்பது விளங்கும்.

 ஊருணி
 

    உண்பதற் குரிய தண்ணீர் நிறைந்த குளம் ஊருணி எனப்படும். ஊரார் உண்ணும் நீரையுடையதாதலால் ஊருணி என்னும் பெயர் அதற்கு அமைந்ததென்பர்.84  ஊருணியின் பெயரால் வழங்கப்பெறும் ஊர்கள் தமிழ் நாட்டில் உண்டு. பேரூரணி என்ற ஊர் நெல்லை நாட்டிலுள்ளது. மயிலூரணி இராமநாதபுரத்திலும், புரசூரணி தஞ்சை நாட்டிலும் காணப்படும்.

செறு

    செறு என்பது குளத்தைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல். சித்தூர்நாட்டில் இராயலு செறுவு என்ற சிற்றூர் உள்ளது. விசய நகரப் பெருமன்னராய் விளங்கிய கிருட்டிண தேவராயர் அங்குப் பெரியதோர் ஏரி கட்டி,வேளாண்மையைப் பேணிய காரணத்தால் இராயர் செறு  என்னும் பெயர் அதற்கு அமைந்ததென்று சொல்லப் படுகின்றது.85 முன்னாளில் அவ்வூர் காஞ்சியிலிருந்து திருப்பதிக்குச் செல்லும் பெருஞ்சாலையை அடுத்திருந்தமையால் சாலச் சிறப்புற்றிருந்தது. அங்கு விசய நகர மன்னர் கட்டிய ஏரி இன்றும் காணப்படுகின்றது. அரைக்கல் நீளமுள்ள அகன்ற கரையால் இரு பெருங்குன்றுகளை இணைத்து அக் குளம் ஆக்கப்பட்டுள்ளது.86

 ஊற்று

    ஆற்று நீராலும் வானமாரியாலும் நிறைந்து பயிர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர் நிலைகளே பெரும்பாலும் தமிழகத்தில் உள்ளன.87 எனினும், ஊற்று நீரால் நிறைந்த கேணி, கிணறு முதலிய பல்வகைப்பட்ட நீர் நிலைகளும் உண்டு. அவற்றின் அடியாக எழுந்த ஊர்கள் நெல்லை நாட்டில் உள்ள தாழை யூற்றும், இராமநாதபுரத்தில் உள்ள அத்தியூற்றும், திருச்சி நாட்டிலுள்ள கண்ணூற்றும், சேலம் நாட்டில் உள்ள மாவூற்றும் ஆகும்.

அடிக்‌ குறிப்பு

77. வட ஆர்க்காட்டில்‌ சோழிங்கர்‌ என்ற ஊரிலுள்ள ஏரியின்‌ பெயர்‌ சோழ வாரிதி என்று சாசனம்‌ கூறும்‌. 9 / 1896.

78. இன்றும்‌ மைசூர்‌ தேசத்தில்‌ சிவ சமுத்திரம்‌ என்பது ஓர்‌ ஏரியின்‌ பெயராக வழங்குகின்றது. திருக்குற்றாலத்தில்‌ வட அருவி விழுந்து பொங்கி எழுகின்ற வட்டச்சுனை’ ‘பொங்குமா கடல்‌” என்று அழைக்கப்படுகின்றது. சோழசமுத்திரம்‌ சாசனத்திற்‌ குறிக்கப்பட்டுள்ளது. 238 / 1931. 

79. வரகுண பாண்டியனது வட்டெழுத்துச்‌ சாசனத்தில்‌ இவ்வூர்‌ முள்ளி நாட்டைச்‌ சேர்ந்த இளங்‌ கோக்குடி என்று குறிக்கப்படுகின்றது. 105 / 1905.

60. எம்.இ.ஆர்.1922, 221.

81. “கோமுகியென்னும்‌ கொழுநீர்‌ இலஞ்சி” – மணிமேகலை.

82. குற்றாலக்‌ குறவஞ்சி, 85. 

83. கச்சியைச் சூழ்ந்த நாட்டுக்குப்‌ பொய்கை நாடு என்ற பெயர்‌ இருத்தலால்‌, பொய்கையார்‌ என்று அவர்‌ சொல்லப்பட்டார்‌ என்பாரும்‌ உண்டு. அவர்‌ வரலாற்றை “ஆழ்வார்கள்‌ கால நிலை” என்ற நூலின்‌ இரண்டாம்‌ அதிகாரத்திலும்‌, தமிழ்‌

வரலாறு 176-ஆம்‌ பக்கத்தும்‌ காண்க.

84. ஊரணி யென்பது ஊருணியின்‌ திரிபாகும்‌. “ஊருணி நீர்நிறைந்‌ தற்றே” என்னும்‌ திருக்குறளால்‌ அச்சொல்லின்‌ பழமை விளங்கும்‌. ஊருக்கு அணித்தாக உள்ள நீர்நிலை ஊரணி யெனப்படும்‌ என்றும்‌ கூறுவர்‌.

85. வட ஆற்காடு கையேடு, தொகு.2,பக்.384.

86. எழுபதடி உயரமும்‌, நூற்றிருபதடி அகலமும்‌ உடையது அக்குளத்தின்‌ கரை.

87; வான மாரியால்‌ நிறையும்‌  குளத்தை வானமாரிக்குளம் என்பர்‌. அப்‌ பெயர்‌ மானா மாரிக்‌ குளம் என மருவி வழங்கும்‌.