(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 6 தொடர்ச்சி)

ஊரும் பேரும் – 7

மருத நிலம்‌ தொடர்ச்சி

ஓடை

    இயற்கையான நீரோட்டத்திற்கு ஓடை என்பது பெயர். மயிலோடை
என்னும் அழகிய பெயருடைய ஊர் நெல்லை நாட்டிலும், பாலோடை
இராமநாதபுரத்திலும், செம்போடை தஞ்சை நாட்டிலும் விளங்கக் காணலாம்.
 

மடை


    கால்வாய்களிலும், குளங்களிலும் கட்டப்பட்ட மதகுகள் மடையென்று பெயர் பெறும். மடையின் வழியாகவே, தண்ணீர் வயல்களிற் சென்று பாயும். இத் தகைய மடைகள் அருகே சில ஊர்கள் எழுந்தன. நெல்லை நாட்டிலுள்ள பத்தமடை என்னும் பத்தல் மடையும்,68 பாலாமடையும், மதுரையிலுள்ள மேலமடை முதலிய ஊர்களும் இதற்குச் சான்றாகும்.

ஏரி

    ஏர்த் தொழிலாகிய பயிர்த் தொழிலுக்குப் பயன்படும் தண்ணீரைத் தேக்கி வைக்கும் நிலையம் ஏரி எனப்படும். இத் தகைய ஏரியின் மருங்கே எழுந்த ஊர்கள் தமிழ் நாட்டிலே பலவாகும். சில ஏரிகள் பண்டையரசர் பெயரால் இன்றும் அழைக்கப்படுகின்றன. சித்தூர் நாட்டில் பல்லவனேரி என்பது ஓர் ஊரின் பெயர்.69 அது பல்லவ மன்னனால் ஆக்கப்பட்டதாகும்.

பாண்டி நாட்டில் மாறனேரி என்று பெயர் பெற்ற ஊர்கள் பல உண்டு.
மாறன் என்னும் சொல் பாண்டியனைக் குறிக்கும். தொண்டை நாட்டிலுள்ள தென்னேரி என்னும் ஊரும் ஏரியின் அருகே எழுந்ததாகும். அது திரையன் என்னும் குறுநில மன்னனால் உண்டாக்கப்பட்டது. திரையனேரி என்பது
சிதைந்து தென்னேரி
ஆயிற்று.70 கொங்கு நாட்டில் வீரபாண்டியன் என்னும் அரசனால் ஓர் ஏரி உண்டாக்கப்பட்டது. அதனருகே எழுந்த ஊர்வீரபாண்டியப் பேர் ஏரி என்று பெயர் பெற்று, இப்பொழுது ஏரி என்றே வழங்குகின்றது.71
 

     தெய்வப் பெயர் தாங்கிய ஏரிகளும் தமிழ் நாட்டிலே பல உண்டு.
திருச்செந்தூரிலுள்ள ஆறுமுகச் செவ்வேளின் பெயரால் அமைந்தது

ஆறுமுகனேரி. நாங்குனேரி வட்டத்தில் மலையாள மன்னனால்

வெட்டப்பட்ட ஏரியொன்று பத்மனாபன் ஏரி என்று பெயர் பெற்று, இப்பொழுது பதுமனேரி என வழங்குகின்றது.72

பேரேரி

      இன்னும், பேரி என்னும் சொல்லை இறுதியாகவுடைய ஊர்ப்
பெயர்கள் சில உள்ளன. நெல்லை நாட்டில் சீவலப் பேரி, கண்டியப்பேரி, அலங்காரப்பேரி, விசுவநாதப்பேரி முதலிய பேரிகள் உண்டு. பேரி என்பது பேரேரி என்பதன் சிதைவாகும். பெரிய ஏரிகள் பேரேரி என்று பெயர் பெற்றன. இதற்குச் சான்று சாசனங்களிற் காணலாம். மதுராந்தகன் என்னும் மன்னன் ஆக்கிய பேரேரி மதுராந்தகப் பேரேரி என்றும், ஆர்க்காட்டில்
சுந்தரசோழன் கட்டிய ஏரி சுந்தர சோழப் பேரேரி என்றும்
கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன.73 திருநெல்வேலியிலுள்ள
சீவலப்பேரியின் பழம் பெயர் முக்கூடல் என்பதாகும். அஃது அவ்வூருக்கு இயற்கையாக அமைந்த பெயர். பிற்காலத்தில் சிரீ வல்லபன் என்னும் பாண்டியன் அவ்வூரில் பேரேரி ஒன்று உண்டாக்கி, சீவல்லபப் பேரேரி என்று அதற்குப் பெயரிட்டான். அப்பெயர் சிதைந்து சீவலப்பேரியாயிற்று.74
கன்னட நாட்டுச் செல்வன் ஒருவன் நெல்லை நாட்டிற்போந்து தாமிரபருணி ஆற்றில் ஓர் அணைக்கட்டி அதன் நீரைக் கால்வாய்களின் வழியாகக் கொண்டு சென்று பயிர்த் தொழிலைப் பேணினான் என்று பழங்கதையொன்று வழங்குகின்றது. அவ்வாற்றில் மூன்றாம் அணைக்கட்டு, கன்னடியன் அணை என்று இன்றும் வழங்குவது அதற்குச் சான்றாகும். அக் கன்னடியன் நெல்லை நகரத்தின் அருகே பெரியதோர் ஏரியும் கட்டி,
அதற்குக் கன்னடியப் பேரேரி என்று பெயரிட்டான். நாளடைவில் அவ் வேரியும், அதைச் சார்ந்த ஊரும் கண்டியப் பேரி என்று மருவி வழங்கலாயின. அலங்காரப்பேரி என்பது மற்றோர் ஊரின் பெயர். தண்ணீர் பெருகி நிறைந்து, தெள்ளிய அலைகள் எழுந்து, அலைந்து வரும் அழகு அலங்காரப் பேரி என்னும் பெயரிலே விளங்குகின்றது.

கோட்டகம்

    கோட்டகம் என்பதும் பெரிய ஏரியின் பெயர்.75 காவிரி நாட்டில் பல
கோட்டகங்கள் உண்டு. தஞ்சை  நாட்டில் உள்ள புதுக்கோட்டகம்,
மானங்காத்தான் கோட்டகம்
முதலிய ஊர்கள் இதற்குச் சான்றாகும்.

குளம்
 
    ஏரிக்கு அடுத்தபடியாக வேளாண்மைக்கு உதவுவது குளம். குளம்
என்னும் முடிவுடைய ஊர்ப்பெயர்கள் தமிழ்நாடு முழுவதும் காணப்படும்.
குளங்கள் நிறம் பற்றியும், அளவு பற்றியும், பல பெயர்களைப் பெற்று வழங்கும். நெல்லை நாட்டிலுள்ள கருங்குளமும், திருச்சி நாட்டிலுள்ள செங்குளமும் அவற்றிலுள்ள  நீரின் நிறத்தைக் காட்டுகின்றன. மதுரையிலுள்ள பெருங்குளம் என்னும் ஊர் பெரியதொரு குளத்தின் அருகே எழுந்ததாகும். தஞ்சை நாட்டுப் பூங்குளமும், தென்னார்க்காட்டுப் புதுக்குளமும் அக் குளங்களின் தன்மையைப் புலப்படுத்துகின்றன.76

அடிக்‌ குறிப்பு

68. பத்தல்மடை என்ற பெயர்‌ சாசனத்திற்‌ காணப்படுகின்றது. எம்.இ.ஆர். 1916-17.

69. பல்லவ னேரி என்பது சிதைந்து பல்மனேர்‌ என வழங்குகின்றது. சித்தூர்‌ நாட்டில்‌ உள்ளது. அங்குக்‌ குன்று சூழ்ந்த ஒரு தடாகம்‌ உண்டு. வட ஆற்காடு தொகுப்பேடு, ப.2.391.

70. 199 /1901: 224 /1922.

71. 569 / 1905 records that the king renamed a ruined tank (at Vagaiputtur) Virapandiyappereri and granted all lands irrigated by it to the Villagers – 1.M.P.542.

72. எம்.இ.ஆர் 1929-30.

73. 192 / 1919.

74. சிரீவல்லபனால்‌ முன்னேற்றமடைந்த  ஊராதலின்‌ சிரீவல்லபமங்கலம்‌ என்னும்‌ பெயரும்‌ அதற்குண்டு, 160 /1895. அப்பெயர்‌ சீவலனாடு எனவும்‌, சீவல மங்கையெனவும்‌ முக்கூடற்‌பள்ளு நாடகத்தில்‌ வழங்கும்‌ – முக்கூடற்பள்ளு, 5.18.

75. “குட்டம்‌ தாங்கல்‌ கோட்டகம்‌ ஏரி” – பிங்கல நிகண்டு,

76. பாண்டி நாட்டின்‌ சில பாகங்களில்‌ கம்மாய்‌ என்பது குளத்தின்‌ பெயராக வழங்குகின்றது. கம்வாய்‌ என்ற சொல்‌ சிதைந்து கம்மாய்‌ ஆயிற்‌ றென்பர்‌. கம்மாய்‌ என்னும்‌ சொல்லும்‌ ஊர்ப்‌ பெயர்களில்‌ அமைந்திருக்கிறது. பாண்டுக்‌ கம்மாய்‌, மூவர்‌ கம்மாய்‌ முதலிய ஊர்கள்‌ பாண்டி நாட்டில்‌ உண்டு.

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்