(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 10 தொடர்ச்சி)

ஊரும் பேரும் – 11

நெய்தல்‌ நிலம்‌ தொடர்ச்சி

பாக்கம்

கடற்கரைச்‌ சிற்றூர்கள்‌ பாக்கம்‌ என்று பெயர்‌ பெறும்‌. சென்னை மாநகரின்‌ அருகே சில பாக்கங்கள்‌ உண்டு. கோடம்‌ பாக்கம்‌, மீனம்‌ பாக்கம்‌, “வில்லி பாக்கம்‌ முதலிய ஊர்கள்‌ நெய்தல்‌ நிலத்தில்‌ எழுந்த பாக்கம்‌ குடியிருப்பேயாகும்‌. சில காலத்திற்கு முன்‌ தனித்‌ தனிப்‌ பாக்கங்களாய்ச சென்னையின்‌ அண்மையிலிருந்த சிற்றூர்கள்‌ இப்போது அந்நகரின்‌ அங்கங்க ளாய்விட்டன. புதுப்‌ பாக்கம்‌, புரசை பாக்கம்‌, சேப்பாக்கம்‌, நுங்கம்‌ பாக்கம்‌ முதலிய ஊர்கள்‌ சென்னை மாநகரோடு சேர்ந்திருக்கின்றன.

களம் – அளம்

நெய்தல்‌ நிலம்‌ பெரும்பாலும்‌ உப்புத் தரையாகும்‌. உப்பு நிலத்தைக்‌ களர்‌ நிலம்‌ என்றும்‌ கூறுவர்‌.108 களர்‌  என்னும்‌ சொல்‌ ஒரு சில ஊர்ப்‌பெயர்களிற் காணப்படுகின்றது.

“திருக்களர்‌ – என்பது தேனாரப் பாடல்‌ பெற்ற தலம்‌. உப்பு விளையும் இடம்‌ அளம்‌ எனப்படும்‌. தஞ்சை நாட்டில்‌ நன்னிலத்துக்கு அண்மையில்‌

பேரளம்‌ என்னும்‌ உப்பளம்‌ உண்டு. அப்‌ பெயரே. அந்‌நிலத்தின்‌ தன்மையை உணர்த்துகின்றது.

நெய்தல்‌ நிலத்தில்‌ வாழ்பவர்‌ வலையர்‌ என்றும்‌, செம்படவர்‌ என்றும்‌, . பரதவர்‌ என்றும்‌ வழங்கப்‌ பெறுவர்‌. அன்னார்‌ வசிக்கும்‌ இடம்‌ குப்பம்‌ என்னும் பெயரால்‌ ‌ குறிக்கப்படும்‌. சென்னையைச்‌ சேர்ந்த  கடற்கரையில்‌ பல குப்பங்கள்‌ உண்டு. காட்டுக்‌ குப்பம்‌,  கருங்குடிக்‌ குப்பம்‌, நொச்சிக்‌ குப்பம்‌, சோலைக்‌ குப்பம்‌ முதலிய குப்பங்கள் பரதவர்‌ வாழும்‌ இடங்களே யாகும்‌.

பாலை நிலம்‌

பழங்‌ காலத்தில்‌ பாலை ஒரு  தனி நிலமாகக் கருதப்பட வில்லை. கடு வேனிற்‌ காலத்தில்‌. முல்லையும்‌ குறிஞ்சியும்‌ வறண்டு கருகிப்‌ பாலை: என்னும்‌ படிவம்‌ கொள்ளுமென்று சிலப்பதிகாரம்‌ கூறுமாற்றால்‌ இவ்வுண்மை விளங்கும்‌.109 ஆயினும்‌, கால கதியில்‌ . பாலையும்‌ ஒரு தனி

நிலமாகக்‌ கொள்ளப்பட்டது. நீரும்‌ நிழலு மற்ற பாலை நிலத்தில்‌ கொடுந்‌ தொழில்‌ புரியும்‌ கள்வர்கள்‌ குடியிருப்பார்கள்‌ என்றும்‌, அன்னார்‌ வணங்கும்‌  தெய்வம்‌ கொற்றவை என்றும்‌ தமிழ்‌ இலக்கியம்‌ கூறும்‌. பாலை என்னும்‌ பெயருடைய சில ஊர்கள்‌ தமிழ்நாட்டில்‌ உண்டு,

கொங்கு நாட்டின்‌ வட வெல்லையாகப்‌ பெரும்‌ பாலை என்னும்‌ இடம்‌ குறிக்கப்படுகிறது. சேலம்‌ நாட்டில்‌ பெரும்‌ “பாலை என்பது“ இன்றும்‌ ஓர்‌ ஊரின்‌ பெயராக வழங்குகின்றது. சிதம்பரத்திற்கு அருகே திருக்கழிப்‌ பாலை என்னும்‌ சிவத்‌தலம்‌ இருந்தது. அதனைத்‌ தேவாரம்‌ பாடிய மூவரும்‌ போற்றியுள்ளார்கள்‌. இடைக்‌ காலத்தில்‌ கொள்ளிட நதியிலே  பெருகி வந்த வெள்ளம். அக்கோவிலை அழித்துவிட்டது. பாண்டி நாட்டில்‌ பாலவனத்தம். என்ற ஊர்‌ உண்டு. அதன்‌ பழம்‌ பெயர்‌ பாலைவன நத்தம்‌ என்பது. ஆதியில்‌ ‘ பாலை வனமாயிருந்த இடம்‌, குடியிருப்புக்கேற்ற நத்தமாகிப்‌ பின்பு ஊராகி, வளர்ந்தோங்கிய வரலாறு அவ்வூர்ப்‌ பெயரால்‌ அறியப்படுகின்றது.110 தொண்டை

“நாட்டு ஊற்றுக்‌ காட்டுக்‌ கோட்டத்தில்‌ பண்டை நாளில்‌ பாலையூர்‌ என்று பெயர்‌ பெற்றிருந்த ஊர்‌ இக்‌ காலத்தில்‌ செங்கற்பட்டு வட்டத்தில்‌ பாலூராக விளங்குகின்றது.111

திருப்‌ பாலை வனம்‌ என்னும்‌ பதியும்‌ அந்‌ நாட்டில்‌ உண்டு.112

நெல்லை நாட்டில்‌ செக்கச்‌ சிவந்த மணற்‌ பாங்கான:

சில இடங்கள்‌ தேரி என்று பெயர்‌ பெற்றுள்ளன. கோடைக்‌

காற்றால்‌ தேரியின்‌ தோற்றம்‌ மாற்ற மடையும்‌. இடையன்‌

குடித்‌ தேரியும்‌, குதிரை மொழித்‌ தேரியும்‌, சாத்தான்‌ குளத்‌

தேரியும்‌ நூறடிக்கு மேல்‌ இருநூறடி வரை உயர்ந்து அகன்ற

மணல்‌ மேடுகளாகும்‌.113

அடிக்குறிப்புகள்

108. “களர் நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர் விளை நிலத்து

நெல்லின் வழுமிதாக் கொள்வர்” – நாலடியார், 133.

109. சிலப்பதிகாரம், காடு காண் காதை, 60-67.

110. மதுரையில் இப்பொழுது தமிழ் வளர்க்கும் சங்கத்தை நிறுவிய

பாண்டித்துரைத் தேவர் பாலைவன நத்தத்தின் ஜமீன்தார்.

111. சென்னைக் கல்வெட்டு அறிக்கை (எம்.இ.ஆர். /M. E. R. )1928-29.

112. செங்கற்பட்டுப் பொன்னேரி வட்டத்தில் உள்ளது.

113. Journal of the Madras Geographical Association, Vol. 15, pp. 322-24.

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்