(சட்டச் சொற்கள் விளக்கம் 251-255 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் 256-260

256. abstract of judgmentதீர்ப்பாணைச் சுருக்கம்  

தீர்ப்பின் சுருக்கம் அல்லது தீர்ப்பாணையின் சுருக்கம் என்பது, ஒரு தீர்ப்பின் எழுதப்பட்ட சுருக்கமாகும்.  

வழக்கில் வென்றவருக்கு(தீர்ப்புக் கடனாளி) இழப்பீட்டு எதிர்வாதி எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது.  
தீர்ப்புத் தொகை, நீதிமன்றச்செலவுகள், இழப்பீட்டு எதிர்வாதி கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய உத்தரவுகள், செலுத்தப்பட வேண்டிய வட்டி விகிதம், ஆகியவை குறிக்கப்பெற்ற சுருக்கம்  ஒப்புக்கொள்ளப்பட்டு, முத்திரையிடப்பட்டு, பதிவு செய்யப்பட்டு, அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ஆவணமாக்கப்படும்.
257. abstract of recordஆவணச் சுருக்கம்  

ஆவணச் சுருக்கம் அல்லது பதிவுச் சுருக்கம் என்பது, உசாவல் நீதிமன்றச்செயற்பாடுகளை மேல்முறையீட்டு மன்றத்தில் மறுஆய்வு செய்வதற்காக வைக்கப்படும் வழக்கு விவரமாகும். கீழ் நீதிமன்றத்தில் இவை முறையாகப் பேணப்படுகிறதா எனப் பார்ப்பதற்கும் உதவுகிறது.  

வழக்கில் நாளது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வழக்கில் உசாவல்(விசாரணை) மன்றத்தின் முடிவு, முடிவெடுக்கப்படவேண்டிய சட்டச்சிக்கல்கள் என வழக்கின் உள்ளபடியான விவரங்களின் உட்கூறுகளை மேலமைமன்றத்திற்குத் தெரிவிக்கும் ஆவணமாகும்.  

மேல்முறையீட்டு மன்றம் கருதிப்பார்க்க வேண்டிய முதன்மை விவரங்களைச் சுருக்கமாகத் தெரிவிக்கும் பதிவுரு.
258. abstract of the instrument  உரிமை யாவணச் சுருக்கம்.  

Instrument என்பது இந்த இடத்தில் கருவி என்னும் பொருளில் வரவில்லை. செயற்படுத்துவதற்கு அல்லது நிறைவேற்றுவதற்கு உரிய உரிமை கூறும் ஆவணம்.
259. abstract of title    தொகுப்பு உரித்து  

உரிமைமூலச் சுருக்கம்  

விற்பனையாளரால் வரையப்படும் ஓர் ஆவணம்.

சொத்துக்கான உரிமைப் பத்திரங்களைச் சுருக்கமாகக் கூறுகிறது.   நிலத்தை அடையாளம் காணும் சுருக்க வரலாறாகக் கருதலாம்.

சொத்தின் உரிமையாளர் தன் உரிமையை மெய்ப்பிக்க உதவுகிறது.  
காண்க 117:absolute conveyance-முழுமை உரித்து மாற்றம்
260. abstract statementசுருக்க அறிக்கை  

தேர்தல் செலவினச் சுருக்க அறிக்கை, நிதிநிலைச் சுருக்க அறிக்கை போன்று ஓர் அறிக்கையின் சுருக்க வடிவம்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்