சட்டச் சொற்கள் விளக்கம் 321-330 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 311-320 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 321-330
321. acceptance of final bill | இறுதிப் பட்டி ஏற்பு இறுதிப் பட்டியை ஏற்றல் கணக்கை முடித்து வைக்கும் பட்டி அல்லது நிதிப்பட்டியல் ஏற்றல். |
322. acceptance of less sum | குறை தொகை ஏற்பு குறைந்த தொகை ஏற்றல் ஒப்பந்தத்தில் அல்லது உடன்படிக்கையில் குறித்த தொகையைவிடக் குறைவான தொகையை ஏற்றல். |
323. acceptance of offer | தருகை ஏற்பு offer- முனைவு எனக் குறிப்பிடுகின்றனர். முனைவு என்றால், 1. வெறுப்பு (தொல்.சொல்.386), 2. அவாவின்மை (சூடா.), 3. வெறுப்போடு கூடிய சினம் எனப் பொருள்கள். எனவே பொருந்தாது. காண்க: Acceptance – ஏற்பு |
324. acceptance of office | பதவி ஏற்பிசைவு தரப்படும் பதவிப் பொறுப்பை ஒப்புக்கொள்வதற்கான இசைவைத் தெரிவித்தல். office என்பது பதவி அல்லது அலுவலையும் குறிக்கும், அலுவலகத்தையும் குறிக்கும். இங்கே பதவிப்பொறுப்பைக் குறிக்கிறது. ஏற்பு என்றால் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுதல் என்றும் கருதலாம். எனவே ஏற்பதற்கான இசைவைக் குறித்துள்ளோம். |
325. Acceptance of promise | வாக்குறுதியேற்பு வாக்குறுதி ஏற்பு தருகை வரையறைகளுக்கிணங்கச் (conditions of the offer) செலுத்துவது குறித்த உறுதியுரையை ஏற்றல். இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872 பிரிவு 2 (அ): மொழிவுரை அல்லது தருகை (Proposal or Offer). ஒரு செயலைச் செய்வதாகவோ செய்யாமலிருப்பதாகவோ ஒருவர் வேறொருவரிடம் கூறி அவரின் இசைவைப் பெற விரும்பினால் அது மொழிவுரை(Proposal) ஆகும். பிரிவு 2. (ஆ) ஏற்பு (Acceptance): அவ்வாறு மொழிவுரை செய்யப்பட்ட பின் வேறொருவர் அதனை ஏற்றுக்கொள்ளும் செயல் தான் ஏற்பு எனப்படும். |
326. Acceptance of proposal | கருத்துரு ஏற்பு முன்மொழிவேற்பு, முன்மொழிவு ஏற்பு, செயற்குறிப்பேற்பு, செயற்குறிப்பு ஏற்பு Proposal என்பதைத் தமிழில் கருத்துரு, செயற்குறிப்பு, முன்மொழிவு, புரிவுரை, முன்வரைவு, எடுத்துரை, மணவேட்டல், புதுக்கருத்துரைத்தல், புதிது கொணர்தல், தருமொழி, திருமணக்கோரிக்கை, புதுக்கருத்து, புத்தாய்வுத்திட்டம், புதுச்செயல்முறை எனப் பலவாறாகக் குறிப்பிடுகின்றனர். இவற்றுள் புரிவுரை என்பதைப் புரிவு + உரை என்னும் பொருளில் கையாண்டுள்ளனர். புரிவு என்பதற்கு அன்பு, விருப்பம், தொழில் எனப் பொருள்கள். திருமணத்திற்கோ காதலுக்கோ ஒருவர் முன் மொழிவதை அன்பு, விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையிலானது எனக் கருதலாம். பிறவற்றிற்குப் பொருந்தாது. இதனைப் புதுச்சொல்லாகக் கருதிச் சட்டத்துறையில் கையாள்கிறார்களா எனத் தெரியவில்லை. தொழில் சாரா திட்டத்தையும் எடுத்துரைத்து முன்மொழியலாம். எனவே, புரிவுரை என்பது சட்டநோக்கில் பொருந்தாது. மணவேட்டல், திருமணக்கோரிக்கை ஆகிய சொற்களும் காதல் அல்லது திருமண விழைவுகளுக்குப் பொருந்தும். பிற யாவும் ஒத்த பொருளுடையனவே. நிறைவேற்ற வேண்டிய செயலுக்கு அளிக்கப்படும் குறிக்கப்படும் என்ற வகையில் திட்டம் சார்ந்தவற்றில் செயற்குறிப்பு என்பதைக் கையாளலாம். எனினும் பொதுவாக எல்லாவற்றிற்கும் ஒரு முடிவை எடுப்பதற்குரிய கருத்திற்கு உரு கொடுக்கும் வகையில் அமைவதைக் கருத்துரு என்பது ஏற்றதாக இருக்கும். எனவே, அவரவர் பொருள் பயன்படும் இடத்திற்கேற்ப உரிய சொல்லைப் பயன்படுததலாம். இங்கே பொதுவாகக் கருத்துரு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய ஒப்பந்தச்சட்டம், பிரிவு 3. |
327. acceptance of tender | ஒப்பந்தப்புள்ளி ஏற்பு விற்பனையாளருக்கு அவர் தரும் ஒப்பந்தப்புள்ளியை ஏற்பதாக மடல்/தொலையச்சு/தொலைவரி/தொலைநிகரி அல்லது வேறு வகையில் தெரிவிப்பது. தொலை நகலி வாயிலாகத் தெரிவித்தல் என்பர். சிரிப்பு என்னும் பொருளிலான நகல் என்பது தமிழ்ச்சொல். துளுவிலும் கன்னடத்திலும் இச்சொல் நகலி என மாறியுள்ளது. ஆனால் படி(copy) என்னும் பொருளிலான நகல் என்பது உருதுச்சொல்லான நகல்(naql ) என்பதிலிருந்து வந்தது. |
328. acceptance of the fees | கட்டண ஏற்பு பதிவுக்கட்டணம், சேர்க்க்கைக் கட்டணம், படிப்புக் கட்டணம், முத்திரைக் கட்டணம், நுழைவுக்கட்டணம் எனப் பலவகைக் கட்டணங்கள் உள்ளன. சூழலுக்கேற்ப நமக்குத் தேவையானதற்கான கட்டணத்திற்கு உடன்பட்டு ஏற்றல் |
329. acceptance with condition subsequent | பின்வரைக்கட்டுடன்(நிபந்தனையுடன்) ஏற்றல் பின்னர் வரக்கூடிய உறுதியற்ற தன்மை அல்லது நிகழ்வு காரணமாக ஒப்பந்தக்கூறு ஒன்று உருவாக்கப்படலாம் அல்லது முடிக்கப்படலாம். இதனைப் பொறுத்துக் கொண்டு ஒப்பந்தத் தரப்பு நிறைவேற்றக்கூடிய அல்லது மன நிறைவடையக்கூடிய நிலைப்பாட்டை ஏற்றல். அஃதாவது பின்னர் எழக்கூடிய வரைக்கட்டினை(நிபந்தனையை) எதுவாக இருந்தாலும் முன்னரே ஏற்பதாக உறுதி கூறல். |
330. Accepted | ஏற்கப்பட்டது. ஒருவர் தர முன்வரும் ஒன்றை ஏற்றுக்கொ ண்டமை; ஒன்றை ஒப்புக்கொ ண்டமை; ஒன்றனுக்கு இசைவு தெரிவிக்கப்பட்டமை. ஒரு முடிவிற்கு அல்லது ஒப்பந்தத்திற்குச் சார்வாய் இருந்து ஏற்றுக் கொள்ளல். தீர்ப்புரையை அல்லது அரசாணையை ஒப்புக் கொண்டு மேல் முறையீடு செய்யாமலிருத்தல். |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply