(சட்டச் சொற்கள் விளக்கம் 321-330 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

Accepted and countersignedஏற்று மேலொப்பமிடப்பட்டது  

ஆவணத்திலுள்ள விதிகள்/வகையங்கள்/கூறுகள், செயன்மை(action) இரு தரப்பாராலும் ஏற்கப்பட்டதன் அடையாளமாக முதல் தரப்பார் கையொப்பமிட்டதும் அதனை ஏற்கும் வகையில் மறு தரப்பாரும் கையொப்பமிடுவது.  

ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், முதன்மையான ஆணைகள்,  என எவையாக இருந்தாலும் ஒப்புதலுக்கான இரண்டாம் கையொப்பமே மேலொப்பமாகும்.
Accepted in principleகொள்கையளவில் ஏற்றல்  

முழு விவரங்கள் அறியாச் சூழலில், சாத்தியமா இல்லையா என அறியா நிலையில் பொதுவாக ஒப்புக் கொள்ளல்.
Accepted under the provisionsவகைமுறைகளின்படி ஏற்கப்பெற்றது  

விதிகளின் கீழ் ஏற்கப்பட்டது.  

பணியாளரால் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது என்பது, அதிலுள்ள அனைத்து விதிமுறைகளையும் ஏற்றுக் கொள்வதும் உடன்படுவதும் ஆகும்.
Acceptor     ஏற்குநர்  
ஏற்பாளர்
ஏற்பி  

ஒப்பந்தப்புள்ளியை ஏற்றல்  

தரப்படும் ஒன்றை ஏற்கும் ஒருவர் அல்லது அறிவியலில் ஏற்கும் ஒரு பொருள்.  

மாற்று உண்டியலை ஏற்றுப் பணம் பெறுபவர்.

வரைவோலை அல்லது காசோலையை ஏற்றுக் கொண்டு அதில் குறிக்கப்பட்டவருக்குக் குறித்த தொகையை வழங்குவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளல்.
Acceptor for honourநற்பெயருக்காக ஏற்குநர்  /ஏற்பவர்  

ஒருவருக்குரிய தொகையை நாணயத்திற்காகத் தருவதாக ஏற்பவர், பின்வரும் அவரின் அனைத்துத் தரப்பாருடனும் பின்னர் இழப்பு அல்லது சேதம் வரின் அனைத்தையும் தருவதற்குப்பொறுப்பேற்கும் வகையில் தன்னைப் பிணைத்துக் கொள்கிறார்.
செலாவணி முறிச் சட்டம், 1881, பி. 7 (The Negotiable Instruments Act, 1881, s.7.)
acceptor of bill of exchangeமாற்றுச்சீட்டை ஏற்பவர்  

மாற்றுச்சீட்டு என்பது பணமாற்றுச் சீட்டு.

பெயர் எழுதப்பெற்றவர்,  தன் ஆணை பெற்றவருக்கு அல்லது இதனைக் கொணர்பவருக்கு மட்டுமே குறிப்பிட்ட ஒரு தொகையைக் கொடுக்கும் படி எழுதுநரால் ஆணையிடப்பட்டுக் கையொப்பமிடப்பட்ட முறையாவணம். (செலாவணி முறிச் சட்டம், 1881, பி.51)
Access        அணுகல்;

அணுகுவழி;

அணுகும்‌ வாய்ப்பு;

அணுகுதல்   சந்திக்கும் அல்லது தொடர்பு கொள்ளும் வாய்ப்பு;

பாலுறவு கொள்ளக்கூடிய வாய்ப்பு  

குடும்பச்  சட்ட வழக்குகளில் தொடர்ச்சியாகக் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதற்கான அவர்களது நலவாழ்வு, கல்வி, நலம் குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை.  

அணுகுதல் என்னும் பொருள் கொண்ட accessus என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவானது.
Access to informationதகவலணுகல்  

தகவலணுகல் என்பது பொது அமைப்புகளிடம் உள்ள தகவல்களைத் தேட, பெற, வழங்குவதற்கான உரிமை என வரையறுக்கப்படுகிறது.
Access to recordபதிவேடு அணுகல்  

ஆவண அணுகல்  

பதிவேடுகளை அணுகும்வழி.

ஆவணங்களை அணுகுதல்.  

மறுகாப்பீட்டு நிறுவனம், எந்த ஒரு நேரிய நேரத்திலும்(reasonable time),  உரிய வணிகச் செயற்பாட்டின் கீழ் வரும்  ஆவணங்கள், புத்தகங்கள், கணக்குகள், பிற பதிவுகள் முதலியவற்றை நேரிடையாகவோ நிறுவனம் சார்பில்  முகவர்  மூலமோ தன் செலவில் பார்வையிடவோ ஆவணங்கள், கணக்குகள், பதிவேடுகள், புத்தகங்கள் முதலியவற்றைப் படிஎடுக்கவோ உரிமை உண்டு.
Access to shopsகடைகளை அணுகல்  

கடைகளுக்குச்  சென்று வருதல்‌    

கடைகளை அணுகுவதில் யாருக்கும் தடையின்றிச் சமநிலை அணுகல் வேண்டும்.  

இந்திய அரசியல் யாப்புச் சட்டம், உறுப்பு 15(2): கடை, பொது ஒய்வு விடுதிகள், உணவு விடுதிகள், பொது பொழுது போக்கு இடங்களைக் குடிமக்கள் அணுகும் பொழுது மதம் சாதி, பால், பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் தடைவிதிப்பதோ, வரைக்கட்டு(நிபந்தனை) விதிப்பதோ கூடாது. அது போலவே அரசு நிதியால் ஏற்படுத்தப்பட்ட பொதுப் பயன்பாடுகள் கிணறுகள் சாலைகள் போன்றவற்றின் பயன்பாட்டிலும் சாதி, மதம், பால், பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் எவ்விதமானப் பாகுபாடும் காட்டக் கூடாது.

(தொடரும்)