(சட்டச் சொற்கள் விளக்கம் 341-350 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

351. Accession registerஅணுகல் பதிவேடு   இதனை அருங்காட்சியக அணுகல் பதிவேடு, நூலக அணுகல் பதிவேடு என இரண்டாகக் குறிக்கலாம்   அருங்காட்சியகத்திலுள்ள நிலையான காட்சியகப் பொருள்களின் பதிவுகளை மேற்கொள்வதற்குரிய பதிவேடு.   நூலகத்தில் உள்ள புத்தகங்கள், ஒலிஇழை, ஒளிஇழை முதலான பல்வேடு வடிவங்களில் உள்ள நூற்பதிவுகள் ஆகியவற்றைப் பதியும் பதிவேடு.
352. accession to officeபதவியிலிருத்துகை   ஒருவரைப் பதவியில் அமர்த்தி இருக்க வைத்தல். அலுவலகப் பதவி ஏற்றல்  
353. Accession, instrument ofஇறைமை முறைமை யாவணம்   இறைமை முறைமை ஆவணம் என்பது இந்திய அரசுச்சட்டம் 1935 இனால் அறிமுகப்படுத்தப்பட்ட  சட்ட ஆவணம். இறைமை என்பது இங்கே இறைமாட்சியைக் குறிப்பிடுகிறது.   பிரித்தானியப் பேரரசின்  ஆளுகையில் இருந்த தன்னுரிமை யரசுகள்புதியதாக உருவாக்கப்படும் இந்தியா அல்லது பாக்கித்தானில் சேருமாறு வற்புறுத்த 1947 இல் பயன்பட்டது.
354. Accessoriesதுணைப் பொருள்கள்   உதிரிப் பொருள்கள்   மக்கள் அணியக்கூடிய மேற்சட்டை, புடவை, தாவணி, வளையல், நகை, காலுறை, கையுறை முதலியன யாவுமே துணைப்பொருள்களாகும்.   காண்க: accessory  
355. accessoryதுணைக்கருவி   துணைபோனவர்;   துணைப்பொருள் ;   குற்றத்துணையர்;   குற்றம் செய்யத் துணையாயிருப்பவர் ;   குற்றம் செய்ய உதவுகிற துணை,  மிகை(உபரி), உதவியாளர், இணைப்பொருள், இணைக்கருவி, துணைக்கூறு, துணை உறுப்பு   ஒரு நாட்டின் நிலப்பகுதியுடன் வென்றெடுத்த நிலப்பகுதியைச் சேர்த்தல், துணைப் பொருள், உதிரிபாகம் எனப் பல பொருள்கள் உள்ளன.   சட்டத்தில் குற்றச் செயலில் ஈடுபடுநருக்கு உதவியாளராக இருக்கக் கூடிய குற்றத் துணையரைக் குறிக்கிறது.   குற்றம் புரிய உதவியோ ஒப்புதலோ அளிக்கும், குற்றம் நிகழும்போது உடனில்லை என்றாலும் அக்குற்றம் செய்யப்படுவதற்கு முன்னரோ பின்னரோ தொடர்புடைய மற்றொருவர்.   இச்சட்டத்தின்படியான எக்குற்றத்திற்கும் பணம், இடம், மூலப்பொருள்கள் முதலியவற்றை அளிப்பவரோ அவற்றிற்காக வேண்டுநரோஎந்த வகையிலும் வாங்குதல், அறிவுரை வழங்கல், உதவுதல், உடந்தையாக இருத்தல், அல்லது துணைநிற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுநர், குற்றத்திற்கு வழங்கப்படவேண்டிய தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும். வெடிபொருள்கள் சட்டம், பிரிவு 6 /explosives act, sec.6
356. accessory after the fact  நிகழ்வின்பின் துணைபோனவர் ;   குற்றம் புரியப்பட்ட பின் துணைநிற்பவர்   குற்றமிழைத்தலுக்குப் பிந்தைய குற்றத்துணைவர்   குற்றம் நிகழ்ந்த பின் குற்றவாளிக்குத் துணை நிற்பவர் அவரது கூட்டாளியாகக் கருதப்படுவதில்லை. மாறாகத் தனிக் குற்றாளியாகவே கருதப்படுகிறார்.   குற்றவாளிக்கு அடைக்கலம் தருபவர், அவரைப் பாதுகாப்பவர், அவருக்கு உதவுபவர், குற்றத்திற்குப் பிந்தைய உடந்தையராகக் கருதப்படுவார்.
357. accessory before the factநிகழ்வின்முன் துணைபோனவர்;   குற்றம் புரியப்பட முன் துணைநிற்பவர்.   குற்றமிழைத்தலுக்கு முந்தைய குற்றத்துணைவர்.   ஒருவர் குற்றம் புரிய  உதவுவது, துணை நிற்பது, ஊக்குவிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். இவர் குற்ற நிகழ்விடத்தில் இருக் கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. குற்றம் நிகழ ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்தால் போதுமானது. அதுபோல் குற்றம் புரிய முன் கூட்டியே திட்டமிட்டுத் தர வேண்டுமென்று  தேவையில்லை.   பல நீதிமன்றங்கள் இத்தகையவரை உடன் குற்றவாளியாகவே கருதுகின்றன.  
358. accessory easements  துணை வாய்ப்பு நலன்கள்   வசதியுரிமைகள் எனப் பொதுவாகப் பலர் குறிப்பிட்டாலும் வாய்ப்பு நலன்கள் எனக் குறிப்பதே சரியாகும்.   இந்திய வாய்ப்பு நலன்கள் சட்டம் , பிரிவு 24. வாய்ப்பு நலன்களை முழுமையாகத் துய்ப்பதற்கான உரிமையைக் கூறுகிறது.
359. accessory licenceதுணை உரிமம்   சட்டத்தால் இணைக்கப்படட துணை உரிமம்.   நலன் துய்த்தல் அல்லது உரிமையைச் செயற்படுத்தல் ஆகியவற்றிற்கான அனைத்து உரிமங்களும்  அரசியல் யாப்பால் உட்பொருளாகச் சொல்லப்பட்டுள்ளன. இவையே துணை உரிமங்கள் எனப்படுகின்றன.   இந்திய வாய்ப்பு நலன்கள் சட்டம் 1882, பிரிவு 55.
360. accessory rights    துணை உரிமைகள்   துணை உரிமைகள் என்பன பிற உரிமைகளுக்கு இணக்கமாக அமைவன. அவை முதன்மை உரிமைகளில் நலன் பயக்கும் இயல்பின.   நிலம் யாருடைய நலனுக்காக இருக்கிறதோ அந்த நிலத்தின் உரிமைக்குக் கீழ்ப்படிமை துணை புரிகிறது.   Servitude என்றால் அடிமைத்தனம் என்றுதான் பொருள். Servitude is accessory  என்னும் பொழுது அடிமைத்தனம் என்பதை விடக் கீழ்ப்படிமை என்பது ஏற்றதாக இருக்கும்.     துணை உரிமைகள் குறித்து இந்தியச் சான்றுச்சட்டம் குறிப்பிடுகிறது.( IEA,1882)

(தொடரும்)