சட்டச் சொற்கள் விளக்கம் – இலக்குவனார் திருவள்ளுவன் : 1-10
சட்டச் சொற்கள் விளக்கம் 1- 10
1. A bill further to amend | மேலும் திருத்துவதற்குரிய வரைவம். வரைவத்தில் மேலும் திருத்தங்கள் தேவை என்பதை இது குறிக்கிறது. Bill-சட்டமாக இயற்றப்படுவதற்காக அளிக்கப்படும் சட்ட முன்வடிவு. சட்ட வடிவு பெறுவதற்கு ஏற்பிற்காக அளிக்கப்படும், சேர்க்கை, திருத்தம், மாற்றம் முதலிய திருத்தங்களை மேற்கொள்வதற்குரிய சட்ட வரைவு. சட்ட வரைவு என்றால் draft என்பதற்கும் bill என்பதற்கும் குழப்பம் வரலாம். எனவே, சட்ட வரைவம் > வரைவம் எனலாம். இந்திய அரசியல் யாப்பில் 104 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு நடைமுறையில் சட்டமாக ஏற்கப்பெற்றவற்றிற்கும் திருத்தங்கள் மேற்கொள்ளச் சட்ட மன்றத்தில் அல்லது நாடாளு மன்றத்தில் திருத்தம் மேற்கொள்ள கொண்டுவரப்படும் சட்ட முன்வடிவையும் இது குறிக்கும். |
2. A certain | உறுதியான தவறாத ஏதோ ஓர் அறியப்பெற்ற ஆனால், விவரிக்க இடரான நிலைப்பாடு. அறியப்பெற்ற ஆனால் முழுமையாக எடுத்துக் கூற இயலாத தீர்ப்பையோ வழக்கையோ சுட்டிக்காட்டும் நிலை. |
3. A certain description | ஏதோ ஒரு விவரிப்பு உறுதியான ஒரு விவரிப்பு விவரிப்பு என்பது, பத்திரம் அல்லது பரிமாற்றத்திற்கான விளக்கங்கள் கூறுவது. இஃது எழுத்து மூலமாகவோ வாய்மொழி மூலமாகவோ இருக்கலாம். |
4. A Civilian | குடிமையாளர், குடிமையாளி குடியாளர் அல்லது குடியாளி எனப் பொதுவாகக் குறிக்கின்றனர். இது குடிகாரர்களைக் குறிப்பதாக அமையும். முப்படைகளிலும் இல்லாத ஆயுதம் தாங்காதவர்கள். சில நேர்வுகளில் ஆயுதந் தாங்கிய காவல் துறையினரும் தீயணைப்புக் காவலர்களும் குடிமையாளர்களாகக் கருதப்படுவது இல்லை.* |
5. A Colourable limitation there of | அதனுடைய ஒரு புனைவுத் தோற்ற வரம்பீடு. Colourable – புனைவுத்தோற்றம் சின்னங்கள் பெயர்கள் (தவறான பயன்பாட்டுத் தடுப்புச்) சட்டம், 1950 [முழுமையான சட்டம்] பிரிவு 4/ The Emblems and Names (Prevention of Improper Use) Act, 1950 , Sec. 4 அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சின்னம் அல்லது போலித் தோற்றம் குறித்த வினவலைத் தக்க அதிகாரத்தவர், ஒன்றியத்திற்கு (மைய அரசிற்கு) அனுப்பலாம் [limitation-காலவரம்பீடு சட்டம் குறிப்பிடும் கால வரம்பிற்குள் உரிமை கோரும் வழக்கைத் தொடுக்கவேண்டும் எனவும், காலம் கடந்தபின்பு வழக்கை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் குறிப்பிடும் சட்டமுறைக் கோட்பாடு] |
6. A Court competent | தக்க நீதி மன்றம் (ஒன்று) தகுதிற நீதி மன்றம் (ஒன்று) வழக்குப் பொருண்மைக்குரிய ஒருவர் அல்லது ஒரு பொருள் மீது அதிகார வரம்பைச் செலுத்துவதற்கான நீதி மன்றத்தின் சட்டபூர்வத் திறனைக் குறிக்கிறது. குற்ற வழக்கு, உரிமை வழக்கு நடைமுறைகள் இரண்டிலும், தகுதிவாய்ந்த அதிகார வரம்புடைய நீதிமன்றம் என்பது அதன் முன் உள்ள வழக்கை தீர்ப்பதற்கான அதிகாரம் கொண்ட நீதிமன்றமாகும். நீதி மன்றம் என்பதை முறை மன்றம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். எனினும் நடைமுறை சொல்லாட்சியான நீதி மன்றம் என்பதே இங்குக் குறிக்கப்பட்டுள்ளது. |
7. A Court immediately below | அடுத்துள்ள கீழ்நிலை நீதி மன்றம் உயர்நீதிமன்றத்தின் சார்பில் வெவ்வேறு நிலைகளில் நீதி மன்றங்கள் இயங்குகின்றன. ஆனால், உயர்நீதி மன்றத்திற்கு அடுத்து அமையும் நீதிமன்றத்தை மட்டுமே இது குறிக்கிறது. [ஏ.(அ)ரங்கசாமி ஐயங்கார் எதிர் பட்டம்மாள் (எ) இராசலட்சுமி அம்மாள், (1971)1 SCC 274:AIR 1971 SC 658: 1971UJ (SC) 175] |
8. A Court subordinate to the high court | உயர்நீதிமன்றத்தின் சார்பு நீதி மன்றம் உயர்நீதி மன்றத்தின் கீழாக வெவ்வேறு நிலையில் உள்ள நீதிமன்றங்களைக் குறிப்பது. உயர்நீதி மன்றத்திற்கு அடுத்துள்ள நீதிமன்றமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. அடிநிலை நீதி மன்றமாகவும் இடையிலுள்ள வேறு நிலையிலுள்ள நீதிமன்றமாகவும் இருக்கலாம். |
9. A decree or another order having the force of a decree | தீர்ப்பாணை அல்லது இணை ஆணை. நீதித்துறையின் கட்டளையாகச் செயற்படுத்துவதற்கு உரிய தீர்ப்பாணை அல்லது தீர்ப்பாணை ஆற்றலுக்கு இணையான மற்றோர் ஆணையைக் குறிக்கிறது. |
10. A dell credere agent | பிணை முகவர் பிணைப் பொறுப்பு முகவர் முதன்மையருக்கும் முகவருக்கும் உள்ள உறவைக் குறிப்பது. முகவர் விற்பனை யாளராகேவா தரகராகவோ மட்டுமல்லாமல், வாங்குநருக்கு நீட்டிக்கப்பட்ட கடனுக்கான பொறுப்புறுதியராகவும் செயல்படுவதைக் குறிப்பது. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
மிகப் பயனுள்ள தொடர்! நனி நன்றி ஐயா!
மகிழ்ச்சியும் நன்றியும் நண்பரே.