(தமிழ்ச்சொல்லாக்கம்: 472-475 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 476-480

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

476. பிரமாணம் – மேற்கோள்

பிரிந்திருக்க வொண்ணாத இரு பொருள்களில் ஒன்றை உண்மையான நெறியில் ஆராய்ந்தறியப் புகுந்த இடத்தில் மற்றதையும் ஒருவாற்றேனும் அறியாதிருக்க முடியாது. சிறிதேனும் அறியும்படி இயல்பாகவே நேரிடும். சீவனும் சிவனும் பிரிந்திருப்பதில்லை என்பதற்கு மேற்கோள் (பிரமாணங்கள்)

உலகமும் பல்லுயிரும் ஒன்றி நிறைந்தோங்கி

இலகும் சிவன் எம்மிறை

மேற்படி நூல் : பக்கங்கள் -33, 34

477. குமாசுதா – எழுத்தாளர்

இவர், இல்வாழ்க்கையில் திரும்பத் திரும்ப தாரமிழத்தலும், மறு தார மடைதலும் ஆகிய காரியங்களால் பலவாறு துன்பப்பட்டவரெனினும், இன்னொரு வகையில் சிறந்த பாக்கியவானாயிருந்தார். நண்பர் நியாயவாதியாயிருந்த நிலைமைக்கேற்ற உற்ற நற்றுணையாகவும், எழுத்தாளராகவும் (குமாசுதா) அமைந்துள்ள ஒருவரே தொடக்கத்திலிருந்து நண்பரின் வாழ்நாள் முடிவுரை உதவியாக இருந்தார்.

மேற்படி நூல் : பக்கம் – 23

478. சென்றிநெறி ஆல் – நூற்றாண்டு மண்டபம்

479. Treasurer – பொருளாளர்

சுமார் 18 ௵க்குமுன் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் (சென்றி நெறி ஆலில்) மாகாண மகாநாடு கூடியது. அதில் கைத்தொழிற் பொருட் காட்சியும் நடைபெற்றது. திருநெல்வேலி சில்லா, சிக்கனத்திற்குப் பேர்ப்போன தாகையால், பொருட்காட்சி முதலிய காரியங்களுக்குரிய முன் முயற்சியில், நமது நண்பரைப் பொருளாளர் (Treasure) ஆக நியமித்துக் கொண்டால் குறித்த காரியங்கள் எவ்வழியினும் இடர்ப்பாடின்றி இனிது முடியும் என்று சிலர் தூண்டினார்கள்.

மேற்படி நூல் : பக். 61, 52.

480. Manager – பொறுப்பாளர்

கல்விச் சாலைகளில் புதிதாய் வந்த ஆசிரியரை சில மாணவர்கள் ஆழம் பார்க்கத் துணிவது போல், புதிதாகப் பட்டத்துக்கு வந்திருக்கிற சமீன்தாரவர்களையும் உதவியாக வந்திருக்கும் புதிய பொறுப்பாளரை (மானேசர்) யும் குடிகள் பதம் பார்க்க முயன்றார்கள்.

மேற்படி நூல் : பக்கம் – 81

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்