( தமிழ்ச்சொல்லாக்கம் 511 -515 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 516-521

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

516. Passport – வழிச்சீட்டு

சிரீ திலகர் சீர்திருத்த விசயமாகப் பார்லிமெண்டார் சட்டமாக்குவதற்கு முன் இங்கிலாந்தில் பெரிய கிளர்ச்சி செய்து பொது சனங்களை எழுப்பி இந்தியாவுக்குச் சுய ஆட்சி கொடுக்கத் தொழில் கட்சி மெம்பர்களை விட்டு பார்லிமெண்ட் மகாசபையில் கேட்கும்படி செய்ய வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டு சிரீ திலகர், விபின சந்திர பாலருடனும் கேல்காருடனும் இங்கிலாந்துக்குப் புறப்பட்டார். அவர், சென்னைக்கு வந்து, சென்னையிலிருந்து சிலோன் சென்று, அங்கிருந்து நேரே செல்வதற்கு ஆயத்தமாயிருந்தார்.

சென்னையில், சிரீ திலகருக்குப் பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது. பல்லாயிரம் பேர் கூடின ஒரு பெரிய மகா நாட்டில் சிரீ திலகர் இங்கிலாந்துக்குச் செல்லும் நோக்கத்தைப் பற்றிக் கூறினார். சென்னையை விட்டு சிலோன் போய்ச் சேர்ந்து, கப்பல் பிரயாணஞ் செய்ய ஆயத்தமாயிருக்கையில், சிரீ திலகர் முதலானோர், செல்லக்கூடாதென்று வழிச்சீட்டு (passport) (இ)ரத்து செய்யப்பட்டது. இவ்வுத்திரவு இந்தியா கவர்ன்மெண்டார் செய்ததே.

நூல்   :           லோகமான்ய பாலகங்காதர திலகர் (1924 பக்கம் : 247

நூலாசிரியர்         :           கிருட்டிணசுவாமி சர்மா

517. Bank – பணக்கூடம்

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலிச் சில்லாவில், துறைமுகப் பட்டணமாகிய தூத்துக்குடி ஒன்றைத் தவிர, வேறு எவ்விடத்திலேனும் பணக்கூட்டுத் தொழிற் சங்கம் என்பதே கிடையாது. காசுக்கடைக்காரரும், நாட்டுக்கோட்டைச் செட்டிமாரும், சில பெரும் பணக்காரர்களும் தனித்தனியே பணங்கொடுக்கல் வாங்கல் செய்வதுண்டு. ஆனால் பொது சனங்களுக்குப் போதுமான வசதிகள் ஏற்படாதிருந்தது. இது விசயத்தில் சனங்களுக்குள்ள குறைகளை நீக்கும் பொருட்டும், பணமுடையார் பலரும் அப்பயனை நிரந்தரமாயடைய வேண்டியும், முதலில் இவர் (வக்கீல் பண்டாரம் பிள்ளை என்னும் திருவாளர் தி.செ. சுப்பிரமணிய பிள்ளை) செய்த அரும் பெரும் முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கன.

உள்ளூரிலும் வெளியூரிலுமுள்ள பல தனவான்களிடத்திலும் தனித்தனியாகவும் கூட்டங்கூடியும் பேசி, திருநெல்வேலிக்கு பணக்கூடம் (பாங்க்) ஏற்படுத்த வேண்டிய அவசியத்தையும் அதனால் அடையக் கூடிய நற்பயன்களையும் ஒவ்வொருவரும், அறிந்துணரும்படி எடுத்துக் கூறிவந்தார்.

நூல்   :           வக்கீல் பண்டாரம் பிள்ளை என்னும் திருவாளர் தி. செ. சுப்பிரமணிய பிள்ளை யவர்களின் சரித்திரச் சுருக்கம் (1924) பக். 40,41.

518. Bunglow – நல்லகம்

519. Durbar Hall – கொலுவிருக்கை மண்டபம்

அரண்மனையின் பழைய கட்டிடங்கள் பண்டைக் காலத்து நாட்டுப்புறப் பாங்கில் அமைக்கப்பட்டிருந்த படியாலும் இக்காலத்துக்கு அது போதாத தாயிருந்தபடியாலும் நமது நண்பர் சில கட்டிடங்கள் அதிகமாய் வேண்டுமென்று கருதினார். சமீன்தாரவர்கள் உபயோகத்திற்கு ஒரு நல்லகமுமே (பங்களா), கலியாணமாலும், கொலுவிருக்கை மண்டபமும் (தர்பார் ஹால்), சமீன் அரசாட்சிக்குரிய பலதுறைவேலைகளும், தனித்தும் சேர்த்தும் நடைபெறுதற்குப் பொருத்தமான மாளிகையும் ஆகிய முக்கியமான மூன்று கட்டிடங்களையும் மென்மையாகக் கட்டுவித்தார்.

நூல்   :           வக்கீல் பண்டாரம் பிள்ளை என்னும் திருவாளர் தி. செ. சுப்பிரமணிய பிள்ளை யவர்களின் சரித்திரச் சுருக்கம் (1924 ப. 92)

நூலாசிரியர்         :           மு. பொ. ஈசுர மூர்த்தியா பிள்ளை (திருநெல்வேலி இந்து கலாசாலைத் தமிழாசிரியர்)

520. உரையாடல் – சம்பாசணை

இவர் உரையாடலில் (சம்பாசண) ஆழ்ந்த கருத்துகள் அடங்கிக்கிடக்கும்; நுண்பொருள் நயம்பட விளங்கும் சொன்னயம் சிறந்து துலங்கும். சமயத்துக் கேற்ற விநயமும், விகடமும் இயல்பாகவே வரும். புன்சிரிப்பிற் புலவராகவும், பெருங்சிரிப்பிற் பேராசிரியராகவும் இருந்தாலும், மிக விகடமாகப் பேசும்போதும், தான் முதலிற் சிரிப்பதில்லை. அப்பாற் சிரிப்பதும் அடக்கமாகவே யிருக்கும்.

மேற்படி நூல் : பக்கங்கள் – 27, 28

521. பிரசங்கம் – விரிவுரை

ஒருநாள் மாலை 6 மணிக்கு ஒரு பெருங் கழகக் கூட்டத்தில் அரும்பொருள் ஒன்றைப் பற்றி ஓர் விரிவுரை (பிரசங்கம்) செய்ய உடம்பட்ட ஒரு நாவலர் அன்று பகலில் தம்முடம்புக்குரிய வசதிகளைக் கவனியாது அசட்டை செய்திருந்த படியால் அவர் பேசத் தொடங்கி முகவுரை முடியுமுன் அவருக்குத் தொண்டைப் புகைச்சல் வந்து மேற்பேச வொட்டாமல் தடுத்துவிட்டது.

மேற்படி நூல் : பக்கங்கள் : 37, 38

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்