( தமிழ்ச்சொல்லாக்கம் 527-531 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 532-536

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

532. ICE – நீர்கட்டி

சூன்மீ2. சத்தியநேசனில் பிரசுரிக்கப்பட்ட வைத்திய சாத்திரக் குறிப்புக்களைப் படித்துப் பார்த்தேன். அவற்றில் இலங்கையில் பல்வலியைக் குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. இந்த விசனத்துக்குரிய நோய் நம்மூரில் புதிதாக உற்பத்தியாகி விட்டது. இதற்குக் காரணம் (ice) நீர்கட்டி பாவித்தலே. கொழும்பிலும் கண்டியிலும் தெருக்களிலும் வீடுவீடாகவும் ஒரு சதத்துக்கு வாங்கக்கூடிய (ice Cream) வியாபாரிகள் திரிகிறார்கள். இந்தக் குளிர்ந்த தித்திப்பு குழந்தைகளுடைய பற்களை முதலாய் கெடுத்துப் போடுகிறது.

நூல்   :           சத்தியநேசன் (1926-ஜூலை)

தொகுதி – 1 பகுதி – 7, பக்கம் – 280;

சொல்லாக்கம்      :           பிறாஞ்சீசுகு – சூ. அந்தோனி

533. உபந்யாசம் – சொற்பொழிவு

சிவனடியார் திருக்கூட்டம்

இஃது

திருக் கற்குடிச் சிவனடியார் திருக்கூட்டத்தின் 5, 6, 7-வது ஆண்டுகளின் நிறைவு விழாவில் (இருக்தாட்சி ௵ ஆவணி ௴ 9உ) தலைமை வகித்த பஞ்சாட்சரபுரம் உயர்திரு. வாலையானந்த சுவாமிகள் முன்னுரையாகச் செய்த சொற்பொழிவு.

சென்னை திருவல்லிக்கேணி சோல்டன் கம்பெனியாரால் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

நூல் : சிவனடியார் திருக்கூட்டம் (1925) பக்கம் – 1

534. பார்லிமெண்ட் – பாராளுமன்றம்

பாரதமாதாவின் திருத்தொண்டர்களுள் முதன்மையானவரும், தேச பக்தர்களுக்கெல்லாம் பெருங்குருவானவரும், நம் நாட்டுத் தலைவர்களுள் சிரோமணியென விளங்குபவருமாகிய சீரீமான் தாதாபாய் நெளரோசி பாராளுமன்றத்தி (பார்லியமெண்டி)ற்கு ஒர் அபேட்சகராக நின்றார்.

நூல்   :           தேசபந்து விசயம் (1925) பக்கம் – 11

நூலாசிரியர்         :           ம. க. சயராம் நாயுடு

535. Cartoon – விநோதப்படம்

இதழ் :           ஒற்றுமை (1925) தொகுதி TV, சஞ்சிகை 2, பக்கம் : மேலட்டை

இதழாசிரியர்       :           மு.ஏ. வீரபாகு பிள்ளை, பி.ஏ., எல்.டி.,

536. சத்து – உள்பொருள் (1925)

சத்திலிருந்து ஒரு பொருள் தோன்றியதென்றால் அஃது அதனிடத்திருந்தே வந்ததென்றுதானே கொள்ள வேண்டும். இப்படி யொத்துக் கொண்டால் திரிபு என்பது பொய்யென்றுதான் ஏற்படும். அஃதாவது, ஒரு பொருள் மற்றொன்றாய் மாறுவதில்லை. உள்பொருள் (சத்து) எப்போதும் உள்பொருளே. ஆகவே நிலையானதும், ஒன்றின் பற்றுக்கோடற்றதும், திரிபற்றதுமாய பொருளொன்றே மெய்ப்பொருள்.

நூல்   :           ஞானபோதினி அல்லது சிவப்பிரகாசம் (1925) பக். 15, 16

நூலாசிரியர்         :           சோழ. கந்த சச்சிதானந்தனார்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்