( தமிழ்ச்சொல்லாக்கம் 541-545 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 546-550

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

546. Secondary Education – இரண்டாங் கல்வி

547. University – பல்கலைக்கழகம்

நான் இரண்டாங் கல்வி கடந்து பல்கலைக் கழக முதல் வகுப்பைச் சேர்ந்த பின் எனக்கு விவாகம் நடந்தது. வயதிலும், அழகிலும், படிப்பிலும், அந்தசுத்திலும் எனக்கு ஒப்பான ஓர் வாலிபனுக்கே நான் வாழ்க்கைப்பட்டேன்.

நூல்   :           நாகரீகப் போர் (1925) அதிகாரம் : 7 – சக்தி போதம், பக்கம் 65

548. Treaty Ports – உடன்படிக்கைத் துறைமுகங்கள்

கீழ்நாட்டு உடன்படிக்கைத் துறைமுகங்களில் குறைந்தபட்சம் பத்து லட்சம் பெண்மக்கள் இவ்வீனத் தொழிலில் அமர்ந்திருக்கிறார்கள். இவ்வூழியத்தில் இவர்கட்கு ஒருவருடம் முதல் பத்து வருடம் வரையிலுந்தான் பிழைப்பு. இச்சாகமாட்டாப் பிழைப்புக்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கில் பெண்கள் வேண்டப்படுகிறார்கள்.

நூல்   :           நாகரீகப் போர் (ஓர் நவீனம்) (1925)

அதிகாரம் 10 – குகய சந்தேசம், பக்கம் – 130

549. Film – தகடு

நான் முன்னிருந்த விடத்திற்கு இரகசியமாகச் சென்றேன். அவ்விடத்தில் எனக்கு மிகவும் ஆபத்தான நண்பரொருவர் ஒரு விளம்பரச் சீட்டை என் கையில் கொடுத்தார். அதில் இந்தியன் சினிமாவில் ‘துறவி’ என்ற ஒரு காட்சி நடப்பதாகத் தெரிவித்திருந்தது. அது அவ்வூருக்குப் புதிய தகடு என்றும் போடப்பட்டிருந்தது. அதில் ஒரு பெண்ணுருப்படம் அச்சிட்டிருந்தது.

மேற்படி நூல் : அதிகாரம் 13 கூடிப் பேசல், பக்கம் – 182

550. Pocket Book – சட்டைப்பைப் புத்தகம்

சத்யவிரதன் அவனிடம் சில உல்லாச வார்த்தைகளைப் பேசிவிட்டுத் தன் அங்கியிலிருந்து சட்டைப்பைப் புத்தகத்தை (பாக்கெட் புத்தகத்தை) எடுத்து அதிலிருந்து 500 டாலருக்கு ஒரு செக்கைக் கிழித்து அவள் கையில் கொடுத்தான். அவள் முன்போலவே அதை வேண்டாம், வேண்டாம் என்று சொல்லிக் கையில் வாங்கி உடைக்குள் வைத்துக் கொண்டாள். சத்யவிரதன் விடைபெற்று வெளியேறினான். –

மேற்படி நூல் : அதிகாரம் 15 – திண்ணம் விடுதலை திண்ணம், பக்கம் – 201

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்