(தமிழ்ச்சொல்லாக்கம் 566-570 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 570-575

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

571. General Hosptial – பொது மருத்துவச் சாலை

11ஆந்தேதி வெள்ளிக்கிழமை மாலை அவர்தம் திருமேனியை, விழாக்கோலத்துடன், அரசாங்கப் பொலிசுப்படை புடைசூழ்ந்து மரியாதை புரிந்து வரவும், அரசாங்க அதிகாரிகள் எத்திறத்தினரும் ஏனையோரும் பின் றொடர்ந்து செல்லவும், சென்னை நகரின் வட கோடியாகிய இராயபுரத்திலிருந்து, சென்னை நகரின் தென் கோடிப் பகுதியொன்றின் கண்ணுள்ள (அரசாங்கப் பொது மருத்துவச் சாலைக்கருகில் (General Hospital) அர்ச். வியாகுல மாதா கல்லறைத் தோட்டத்துக்கு எடுத்துச் சென்றனர்.

நூல்   :           கனம் திவான் பகதூர் எல்.டி. சுவாமிக்கண்ணு பிள்ளை, சீவிய சரித்திரம் – (1926) பக்கம் 28

நூலாசிரியர்         :           ஆ. சண்முகம் பிள்ளை

572. திருசுட்டி – கண்ணேறு

‘திருசுட்டி விழுந்தது’ என்பதை ‘திசுட்டிவிழுந்தது, கண்திசுட்டி’ என்று வழங்குகின்றனர். திருசுட்டி என்றால் கண், அதனைச் சிதைத்து திசுட்டி என வழங்கினும், கண் திசுட்டி என்பது (Gate) கேட் வாயிற்படி (Lantern) லாந்தர் விளக்கு என்பன போலல்லவா இருக்கின்றது. இது எப்படி பொருந்தும்? இதற்கு ஏற்ற தமிழ்ச்சொல் கண்ணேறு என்பதாம். கண் + ஏறு.

இதழ் :           சத்திய நேசன் (1926 பிப்பிரவரி)

தொகுதி – பகுதி, 2 பக்கம் – 37

573. Tregedy – துக்க முடிவுகொண்ட இலக்கியம்

காவிய லட்சணம், அலங்காரம், முதலியவைகளைக் கொண்டும் திராவிட பாசை சிறப்புற்றதென்றும் ஆரியபாசை அதற்குச் சிறிது குறைந்த நிலைமையிலுள்ளது என்பவர்களு மிருக்கின்றனர். அதற் குதாகரணமாய் வடமொழியில் துக்க முடிவுகொண்ட இலக்கியம் இன்மையைக் கூறித் தமிழில் காணப்படும் சிலப்பதிகாரத்தைச் சிறப்பித்துப் பேசுகின்றனர் திராவிடாபிமானிகள்.

நூல்   :           நமது பரதகண்டம் 203,4 முதற்பதிப்பு (1926) ஆறாவது சுருக்கம் – தமிழகத்தின் நாகரிகம், பக்கம் 121,

நூலாசிரியர்         :           வை. சூரியநாராயண சாத்திரி, எம்.ஏ.எல்.டி.

574. பரோபகாரம் – ஒப்புரவு

ஒப்புரவு (பரோபகார) நினைவும் செயலும் பெறுவதற்கு உயிர்ச்சார்பு இன்றியமையாதது, மனிதன் மற்ற உயிர்களோடு கலந்து வாழ வாழ, அவன்பாலுள்ள தன்னலம் என்னும் பாசம் அறுந்து போகும்.

நூல்   :           மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் (1926) பக்கம் :39

நூலாசிரியர்       :           திரு. வி. கலியாணசுந்தரனார்

575. Melody (Gudson, ) – ஒழுகிசை

தமிழ்நாட்டுச் சங்கீதம் வடநாட்டுச் சங்கீதத்தைப் போல ஒழுகிசையைத் தழுவி நிற்குமல்லாது ஆங்கிலேய சங்கீதத்தைப் போல ஒன்றிசையை தழுவி நிற்பதல்ல. ஒழுங்கிசையை ஆங்கிலத்தில் மெலடி (Melody) என்பார்கள்.

இதழ் :           செந்தமிழ்ச் செல்வி (1926) பக்கம் : 224 திருவனந்தபுரம் தி. இலக்குமண பிள்ளை பி.ஏ.,

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்