( தமிழ்ச்சொல்லாக்கம் 561-565 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 566 -570

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

566. Balcony – உயர்நிலைப்படி

கொட்டகையையடைந்ததும் டிக்கெட்டு விவரங்களை விசாரித்தான். இரண்டு டாலர் – அல்லது சுமார் ஏழு உரூபா – கொடுத்தால் எல்லாவற்றிலும் உயர்ந்ததான பாக்சு (Box) அல்லது பெட்டி என்ற ஆசனம் கிடைக்குமென்று இங்குள்ளவர்கள் சொன்னார்கள். பணப்பையைத்திறந்து பார்த்தான். அதில் ஐந்து டாலர்களிருந்தன. அவன்மனம் சோக்கில் நிலைத்திருந்தபடியால் பெட்டி டிக்கெட்டையே வாங்கிக்கொண்டு உள்ளே சென்று உயர்நிலைப் (Balcony) படியேறி, ஒரு பாக்சில் போய் உட்கார்ந்தான்.

நூல்   :           நாகரீகப் போர் (1925)

அதிகாரம்   :           4- மாயா மித்திரம், பக்கம் – 38

நூலாசிரியர்         :           பாசுகர என். நாராயணய்யா, பி.ஏ., பி.எல்., எல்.டி.,

567. Voters – வாக்காளிகள்

இனி அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுக்கும் விசயத்தைக் கவனிப்போமாக, ஒவ்வொரு கிராமத்தின் பிரிவினைகளிலுள்ள முக்கிய இடத்தில் ஒரு பானை வைக்கப்பட்டிருந்தது. அது உண்டியல் போல் சிறிய துவாரத்தை யுடையதாயிருந்தது. அந்தத் துவாரத்தின் வழியாய், பனை ஓலைச் சீட்டுகள் போட இடமிருந்தது. தேர்ந்தெடுக்கும் மனிதர்கள் (ஓட்டர்கள்-வாக்காளிகள்) பனை ஓலைச்சீட்டில் பேர் எழுதிப் போட்ட பின்னர் அந்தப் பானையிலுள்ள சீட்டுகள் மகாசன சபைகள் கூடுமிடத்தில் வேறொரு காலிப்பானையில் குலுக்கிப் போடப்பட்டன.

நூல்   :           நமது பரதகண்டம் (1926) இரண்டாம் பாகம், அத் – 3. சரு – 6, தமிழகத்தின் நாகரிகம் – பக்கம் – 93

நூலாசிரியர்         :           வை. சூரியநாராயண சாத்திரி, M.A., L.T,

568. Supreme Bliss – அறிவியப்பு

மனமென்பது சார்போத மெனப்படும். ஏனெனில் மனம் எதைப் பார்க்கிறதோ, அதன் சார்பாய் விடுதல். இங்ஙணம் மனமென்பது காற்றென்றும் விவேக மென்பது அனலென்றும் வியாபக அறிவென்பது சுத்த ஆகாயமென்றலுமாம். உன்னுகின்ற தொழிலையுடைய மனம் காற்றுருவாய் நின்று, தீர்க்க சிந்தையில் அனல் வடிவாகி விவேகமெனப் பேர் வகித்து வியாபக வடிவாய் சுத்த சாதக நிலையில் தன் வன்மை குன்றி, உலக நாட்டமிழந்து காற்றுக்குமேல் மிருதுவான தன்மையையடைந்திருக்குந் தருவாயில், சுத்த சாந்த உசுணந் தோன்றி இயற்கை வடிவாகி சுயம்பிரகாசமாகி எக்காலத்தும் அழிவில்லாததாய் விளங்கிக்கொண்டிருக்கின்ற உண்மை நிலையெதுவோ அதுவே அறிவியப்பாம்.

நூல்   :           அருள்சிவம் (1926)

6 அறிவியப்பு, பக்கங்கள் – 31, 32

நூலாசிரியர்         :           திரு. சாம்பசிவம்

569. Self Realization – தனிநிலை இயல்பு

தனி யென்பது மூன்று அவத்தைகளையும் நன்று விசாரித்து வாதனா வசத்தில் வருகிற விருத்தியைக் களைந்து அவ்விருத்திகள் அடக்கத் துருத்திபேல ஊது மூச்சை ஓரிட மமர்த்தி யூன்றி நிற்றலே சிவயோக நிலை.

தனியென்பது சுத்த சித்து நானென்ற திடத் தீர்மானம். நானே நீ, நீயே நான் ஆகையால் ஞானகுரு தன்னறிவைத் தவிர வேறின்மையால் சுத்த சாதகர்கள் ஊன் பிறந்த வுடலைச் சுமப்பது பாரமென்று எண்ணி, ஏன் பிறந்தோம் என்ற ஏக்கமே தங்கள் வாழ்நாள் முழுதும் குடிகொண்டு, பண்டைக் காலத்திற் செய்த புண்ணியத்தின் பலனாக, புதிய நிலையாகிய தான் பிறந்த விடமான வான் பிறந்த வனத்திற் சஞ்சரித்துக் கொண்டு உள்ளக் கோயிலை ஒன்றிப் பார்த்து தம்மிதயத்துட் காணவேண்டிய பொங்கு பேரொளியே தனிநிலை இயல்பாம்.

நூல்   :           அருள்சிவம் (1926)

1. தனிநிலை இயல்பு, பக்கங்கள் – 1, 2

நூலாசிரியர்         :           திரு. சாம்பசிவம்

570. Light House – கலங்கரை விளக்கம்

அந்த நகருக்கு அருகில் அழகிய அரணியம் ஒன்றுண்டு. அங்கு மா பலா முதலிய பழமரங்கள் தளிர்த்துத் தழைத்துப் பூத்துக் காய்த்துக் கனிந்து, சூரிய கிரணங்கள் பூமியிற் பரவாவண்ணம் செறிந்து விளங்கின. அந்தச் சூழலில், பாவமாகிய கடலைக் கடந்து, முத்தியாகிய கரையிற் சேர விரும்புவோர், தவமாகிய கலத்தைத் திகைப்பின்றி நடத்துவதற்கு ஓங்கிநின்ற கலங்கரை விளக்கமே போல, நெடுங்குன்றம் ஒன்று நிலைத்து விளங்கிற்று. அதன் சாரலில், யான் எனது என்னும் அகப்பற்றுப் புறப்பற்றுக்களை அறவே ஒழித்த அருந்தவத்து அந்தணர் சிலர் ஆங்காங்கே பருண சாலைகள் அமைத்துக் கொண்டு தம் மனைவி மக்களோடு வதிந்திருந்தனர்.

நூல்   :           குசேலன் (1926) பக்கம் – 8

நூலாசிரியர்         :           கா. நமச்சிவாய முதலியார்

(மேரி யரசி கலாசாலைத் தலைமைப் பண்டிதர்)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்