(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 611-615 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 616-620

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார்.238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

616. Stock – இருப்பு

சில தினங்களுக்கெல்லாம் ஆத்திரேலியாவிலிருந்து சில வியாபாரிகள் வந்து அவ்விடங்களிலிருந்த சோளங்களை மூட்டை நான்கு சிலிங் முதல் பத்து சிலிங் வரை விலை ஏற்றிக் கொடுத்து வாங்கி விட்டார்கள். பிறகு சில தினங்களுக்கெல்லாம் மூட்டை இருபது சிலிங் வரை ஏற்றமாகி அந்தச் சமயமும் ஆத்திரேலியா வியாபாரிகள் வந்து அவ்விடங்களிலிருந்த சோளம் முழுவதும் வாங்கி விட்டார்கள். நான் மாத்திரம் விற்கவில்லை. பிறகு சில தினங்களுக்கெல்லாம் சோளம் விலையேறி மூட்டை முப்பது சிலிங் விலையாக, என் இருப்பிலிருந்து (ஸ்டாக்கு) 1000 மூட்டைகளை விற்றேன். 

மேற்படி நூல் : பக்கம் – 19

617. Lease – குடிக்கூலி

சுபிங்கோ என்னும் ஊர் எனக்கு ஒருவாறு பிடித்தமாக இருந்ததுமன்றி அந்த இடத்தில் சொற்பமாகப் பலசரக்குக்கடை வைத்திருந்த இராமலிங்கப் பிள்ளை என்பவரும் எனக்குத் தைரியஞ் சொல்லி, கடை வைக்கும்படியாகவும், தன்னால் கூடிய உதவிகள் புரிவதாகவும் சொன்னதின் பேரில், எனக்கும் ஒருவாறு தைரியமேற்பட்டு அவ்விடம் வில்லியம் கசுடர்டு என்பவரிடத்தில் அரை ஏக்கர் நிலம் குடிக்கூலி (லிசுக்கு) வாங்கி அந்த இடத்தில் காட்டிலுள்ள மரங்களை வெட்டி மேற்படி இராமலிங்கப் பிள்ளை உதவியுடன் நான் ஒரு சிறிய கடை (Zinc Shed) கட்டிப் பூர்த்தி செய்து அந்தக் கடையில் என்னுடைய டர்பன் கடையிலிருந்த மிகுதி சரக்குகளைக் கொண்டு போய் வைத்தும், டர்பனில் அப்போது எனக்குச் சினேகிதராக ஏற்பட்ட ஒரு வியாபாரியிடமும், மேற்குறித்த மோரீசு வியாபாரிகள் கடை வைத்திருந்தவர்களிடமும், அப்போதைக்கப்போது கொஞ்சம் கொஞ்சமாகச் சரக்குகளை ரொக்கத்திற்கும் தவணைக்கும் வாங்கிக் கொண்டு போய் வைத்தும் வியாபாரம் செய்யலானேன்.

மேற்படி நூல் : பக்கம் – 7

618. Engineer – மதிவல்லோன்

619. Cinema – நகரும் காட்சிப் படங்கள்

கடிகாரம், மணி – நிமிடம் – விநாடி – தேதி காட்டுவதும், எச்சரிக்கை மணி (Alarm) அடிப்பதும், பலவித வாத்தியங்கள் வாசிப்பதும், இன்னும் அனேக ஆச்சரியங்களைச் செய்வதும்; ரெயில்வே இஞ்சின் வண்டிகள், மாடு குதிரையில்லாமல், நீராவி பலத்தினால் பல்லாயிர மணங்கு பாரத்தை வெயிலென்றும் – மழையென்றும் – இருளென்றும் நோக்காமல் ஒரே நாளில் பல மைல் தூரம் சுலபமாகவே கொண்டு போய்ச் சேர்ப்பதும், இவ்வாறே நீராவி மரக்கலங்கள் செல்வதும் பயாசுகோப் (சினிமா) நகரும் காட்சிப் படங்கள், உலகத்தின் பல பாகத்தில் நிகழ்ந்த சம்பவங்களை பிரத்தியட்சமாகவே செய்து காண்பிப்பதும்; இன்னும் ஆகாய விமான முதலான பல இயந்திரங்கள் ஆச்சரியமடையத்தக்க விதமாக வேலை செய்வதும் இக்காலத்தில் நாம் நிதரிசனமாகக் காண்கிறோம். இவைகளை ஒரு மதிவல்லோன் (Engineer) இருந்து செய்திருப்பான் என்பது நமக்கு விளங்குகின்றது.

நூல்   :  வேதாந்த பாசுகரன் (1928)

கடவுளியல், பக்கங்கள் – 14, 15

நூலாசிரியர் : கருணையானந்த ஞானபூபதிகள்

620. கூடாரம் – நூலாடையாலாகிய வீடு

தாமணி யடித்து எருதுகளின் மேலிருக்கும் பொதிகளையெல்லாங் கீழே தள்ளி யடுக்கிட்டுத் துள்ளுகின்ற எருதுகளுக்குக் கட்டியிருக்கும் பெரிய மணிகளையும் வரிசையாகக் கோத்துக் கழுத்திற் கட்டியிருக்கு மணிகளையும் கொம்புகளிற் கட்டியிருக்கும் சிகை மயிரினையும் நீக்கி வரிசை வரிசையாக நீருட்டிக் கட்டி உண்ணுதற்கு நல்ல புல்லும் போட்டு வாசனை பொருந்திய மாலையணிந்துள்ள அந்த வர்த்தகனும் கூடாரத்திற் சேர்ந்தான். கலைக்குடில் – நூலாடையாலாகிய வீடு, அது கூடாரமென்று சொல்லப்படுகின்றது.

நூல்   : திரிவிரிஞ்சை புராணம் (1928) சைவ. எல்லப்ப நாவலர்

குறிப்புரை : டி.பி. கோதண்டராம ரெட்டியார்

(வேலூர் துரைத்தன உயர்தர பெண்பாடசாலைத் தமிழ்ப்பண்டிதர்)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்