சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 764 -767
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 756 – 763 தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 764 -769
(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
764. உசுணமானி – சூடளந்தான்
சூரிய உசுண ஆராய்ச்சிக் கருவியை உசுணமானி என்பர். இதனை உலக வழக்கின்படி சூடளந்தான் என வழங்கலாம்.
நூல் : சூரியன் (1935). பக்கம் : 64
நூலாசிரியர் : ஈ. த. இராசேசுவரியம்மையார், எம்.ஏ., எல்.டி.,
(சென்னை மேரியரசி கலாசாலை விஞ்ஞான சாத்திர ஆசிரியர்)
★
765. Lavatories – குளிப்புரை
வீட்டிலுள்ள சாக்கடைக் குழிகளையும், சாக்கடைகளையும், குளிப்புரைகளையும், கக்கூசுகளையும் ஒவ்வொரு நாளும் காலையில் தவறாமல் தண்ணீர் நிரம்ப வார்த்துக் கழுவ வேண்டும்.
நூல் : விவேக சந்திரிகை மூன்றாம் புத்தகம் (1935) பக்கம் -91
நூலாசிரியர் : தி. அ. சாமிநாத ஐயர் (ஆரியா பத்திரிகை ஆசிரியர்)
★
766. பிளேக் – மகமாரி
பூபதி செந்தூரம் – இதை உட்கொண்டால் சுரம், சன்னி, வாந்திபேதி, வயிற்றுப்போக்கு, மகமாரி (பிளேக்), பித்தம், கிறுகிறுப்பு, சூலை, சூன்மம், கவாசகாசம், சுபம், வாதம், உடல் வலி, பொருமல், அண்ட வாய்வு, சூதக வாய்வு, பக்கவாதம் முதலிய நோய்கள் தீருவதோடு பிள்ளை பெற்ற பெண்களுக்குண்டாகும் எல்லா நோய்களும், குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தங்கள், தோசங்கள், சுரம், சன்னி, இருமல் முதலிய சகல நோய்களும் குணமாகும்.
நூல் : சித்தன் (ஓர் மாதாந்தரப் பத்திரிகை) 1935 ஜூன்
மாலை – 1. மணி – 6, பக்கம் – 208
கிடைக்குமிடம் : சாமி, விருதை, சிவஞான யோகிகள்,
சிவஞான சித்த பார்மசி, கோவிற்பட்டி
★
767. மந்திரம் – நிறைமொழி
பண்டைத் தமிழர் திருமண நிகழ்ச்சிகட்கும் இக்காலத் தமிழர் திருமண நிகழ்ச்சிகட்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடுகளைக் காணலாம்.
அக்காலத்தே இல்லாத புரோகித வேலை, வடமொழி மந்திரங்கள் (நிறைமொழி) தமிழ் மரபுக்கு மாறான பல செயல்கள் இன்ன பிறவும் இக்காலத் தமிழர் திருமணத்துள் இடம் பெற்றுத் தமிழ் மரபைக் கெடுத்துவிட்டன.
நூல் : தமிழர் திருமண நூல் (1939)
நூலாசிரியர் : வித்வான் மா. இராசமாணிக்கம் பிள்ளை, பி.ஓ.எல்,
பகுதி அறிவிப்பு, பக்கம் 1
★
768. மறுமணம், மணமுறிவு
திருவாளர் வித்வான் இராச மாணிக்கம் அவர்கள் எழுதிய தமிழர் திருமணச் சீர்திருத்தக் குறிப்பினைப் படித்தேன். பண்டைத் தமிழர்களின் மணமுறைகளை எடுத்துக் காட்டுகளாலும், ஏதுக்களாலும் நன்கு விளக்கியிருக்கின்றனர்.
மணமுறையைத் திட்டம் செய்வதுடன், ஆடவர், பெண்டிர்களின் மறுமணம், மணமுறிவு முதலிய பொருள்கள் பற்றியும் மாநாடு முடிவு செய்யுமென நினைக்கின்றேன்.
நூல் : தமிழர் திருமண நூல் (1939) பக்கம் : 29, 30
பகுதி : தமிழ்ப் பெரியார் கருத்துக்கள்
த. வே. உமாமகேசுவரம் பிள்ளை, பி.ஏ., பி.எல்,
★
769. Typewriting machines – எழுத்தடிக்கும் பொறிகள்
எழுத்தடிக்கும் பொறிகளும் Typewriting Machines இந்திய பத்திரிகைத் தொழில் வளர்ச்சிக்கு அவ்வளவாக உதவுவதில்லை.
அக்கருவிகள் ஆங்கிலத்திற்கு இருப்பது போல இந்திய சுதேச மொழிகளுக்கு அவ்வளவு நல்ல அமைப்பிலே இல்லாமையால், நல்ல விளக்கமான அச்சுப் போன்ற எழுத்துக்களிலே செய்திகள் உடனுக்குடன் பதிப்பிக்கப்படுவதிலே அவ்வளவாகப் பயன்படுவதில்லை.
நூல் : இந்திய பத்திரிகைத் தொழிலியல் (1935), பக்கம் – 97
நூலாசிரியர் : வி. நா. மருதாசலம்
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply