சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 814-821
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 808 – 813– தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 814-821
(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
814. Press – எழுத்தகம்
இவ்வெளியீட்டைத் தமது போலெண்ணித் தமது எழுத்தகத்தில் (அச்சுக்கூடம்) பதிப்பிட்டுதவிய தோழர் ந. வி. இராகவன் அவர்கட்கும் என் மனமார்ந் அன்பும் நன்றியும் உரியதாகும்.
நூல் : இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? (1939), பக்கம் -5
நூலாசிரியர் : மறை. திருநாவுக்கரசன்
★
815. உத்தியோகம் – அரசியல் நிலை
வட மொழிக்குள்ள பெருமை பார்ப்பனர்களுக்காகி அதனால் பார்ப்பனருக்கு உறையுள் (வீடு) அமைத்துக் கொடுப்பதும், அரசியல் நிலை (உத்தியோகம்) கொடுப்பதும், சத்திரம் கட்டி உணவு கொடுப்பதும், அவர்களை உயர்ந்தோராய் மதித்துச் சிறப்பிப்பதும், பண்டும், இன்றும் வழங்குவதுபோல நாளை இந்தி மொழிக்குரிய வட நாட்டார்க்கு அவை கொடுக்கப்படுமல்லவா?
நூல் : இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? (1939), பக்கம் -43
நூலாசிரியர் : வித்துவான் மறை. திருநாவுக்கரசன்
★
816. Surgeons – அறுத்தூற்றியாற்றும் மருத்துவர்கள்
எகித்தியர்களே தொன்மையில் நாகரீகத்தில் நனி சிறந்திருந்தனர். கண்ணாடி கண்டு முதன் முதல் அதனால் கலன் அமைத்தவர்களும் அவர்களே. 2300 ஆண்டுகட்கு முற்பட்டதும் இங்கிலாந்து கண்காட்சிச் சாலையில் இருப்பதுமாகிய துளைகருவி போன்ற உறுதியானது இக்காலத்திலுமில்லையாம். குழந்தைகள் குடிக்கும் இரப்பர் (Rubber)பாற்கருவி அக்காலத்தில் சுடு மணலால் இருந்தது. அறுத்தூற்றி யாற்றும் மருத்துவர்கள் (சர்சன்கள்) பல் மருத்துவர் முதலிய பல்வகை மருத்துவர்களும் இருந்தனர். இறந்தோர் வாயெலும்பில் தங்கப் பொய்ப் பற்கள் தங்கியிருந்தன. இறந்தோராயினும் அவர் தம் பல்லைப் பிடுங்குவது எகித்தியர் இயல்புக்கு ஏற்றதல்லவாம்.
நூல் : குடியரசு (1939 ஆகட்டு ௴l32)
கட்டுரையாளர் : தமிழாசிரியர் எ. ஆளவந்தார்
★
817. பாங்க் – பணக்கடை
வட நாட்டவர்பால் நமக்குள்ள பெருமதிப்பை எத்தனை எத்தனை வகைகளிலோ காட்டிக் கொண்டு வருகின்றோம். வட நாட்டாரைக் கண்டால் சுயராச்சியத்தைக் கண்டதுபோல மகிழ்கின்றோம். தங்களிடத்தில் நாம் கொண்டிருக்கும் குருட்டு பக்தியைக் கண்ட வட நாட்டார்க் காந்திக்குல்லாயுடன் சென்னையிலும், தமிழ் நாட்டு நகரங்களிலும், வெற்றிலைப் பாக்குக்கடை, மிட்டாய் கடை, பலசரக்குக்கடை, புடவைக்கடை, பணக்கடை (பாங்க்), வட்டிக்கடை, பஞ்சாலை, மரவாலை, முதலிய கடைகளும், ஆலைகளும், நடத்துகின்றனர்.
நூல் : இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? (1939), பக்கம் : 44
நூலாசிரியர் : வித்துவான் மறை. திருநாவுக்கரசு
★
818. சருவாதிகாரம் (சர்வாதிகாரம்) – தனியாணை
சென்னை மாகாணத் தலைமை அமைச்சர், மாண்புமிக்க இராச கோபாலாச்சாரியார் அவர்கள், வடநாட்டுத் தலைவர் சிலர்க்குத் தாம் ஓர் உறுதிமொழி கொடுத்திருப்பதாகத் தாமே கூறியிருக்கின்றார்.
அவ்வுறுதி மொழியை நிறைவேற்றுதற் பொருட்டுத் தாம் அமைச்சேற்றவுடன் தமிழ்ப் புலவர்களைக் கலந்து கொள்ளாமல், கல்வித் துறையில் வல்லவர்களது கருத்தைக் கேளாமல், தமிழ் மக்களின் வாய்மொழியை வேண்டாமல், சட்ட சபை உறுப்பினர்களோடு சூழாமல், காங்கிரசுக் கழகங்களின் கருத்தைக் கேட்காமல் தனியாணை (சருவாதிகாரம்)யாகக் தமிழ் நாட்டில் இந்தியைக் கட்டாயப் பாடமாகப் புகுத்தினார்கள்.
நூல் : இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? (1939), பக்கம் : 1
நூலாசிரியர் : வித்துவான் மறை. திருநாவுக்கரசு
★
819. நியாயத்தலம் – முறை மன்றம்
820. தலதாபனம் – நாட்டு நிலையம்
821. சமரசம் – பொதுமை
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply