(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 916- 930 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 931- 940

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார்.238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

931- Executive Officer – ஆணையாளர்

தற்காலம் செங்கோட்டை மிட்டாதார், திரு. எம். சுப்பிரமணியக் கரையாளர் ஆட்சித் தரும கருத்தராயும், தென்காசி, வக்கீல், திரு. டி.எசு சங்கரநாராயண பிள்ளை பி.ஏ., பி.எல், அட்வகேட் திரு. ஏ.சி. சண்முக நயினார் பிள்ளை பி.ஏ., பி.எல், தரும கருத்தர்களாயும் நியமிக்கப்பட்டு நிருவாகம் நடத்தி வருகின்றனர். மாதச் சம்பளம் உரூபாய் 200 வரை பெறும் ஓர் ஆணையாளரையும் (Executive Officer) நியமிக்கின்றனர். இப்போதுள்ள ஆணையாளர் திருவாளர் கே.வி. சுப்பையாப் பிள்ளையவர்கள் B.A.,

நூல் : திருக்குற்றாலத் தலவரலாறு (1943), பக்கம் – 60

932. நாராயணசாமி – திருமால் அடிகள் (1943)

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நானும் நெடுஞ்செழியனும் ஒன்றாகப் படித்தோம். அந்தக் காலத்தில் நெடுஞ்செழியனுக்குப் பேசும்போது நாக்கு புரளக் கடினப்படும்.

அந்த நாக்குச் சரியாகக் கூழாங்கற்களை வாயில் அடக்கியபடி 6 மாதம் பயிற்சி பெற்றார். தினமும் பேசிப் பேசிப் பழகுவார். அந்த நாத் தடு மாற்றம் மாறியது. சிறந்த பேச்சாளர் ஆனார்.

நாராயணசாமி என்ற பெயரை முதலில் திருமால் அடிகள் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். அப்படி மூன்று மாதங்கள் இருந்தார். இது என்ன திருமாலுக்கு அடிகள் என்று கேட்டேன். பிறகு அவர் பட்டுக்கோட்டை போய்விட்டுத் திரும்பும்போது நெடுஞ்செழியன் என்ற பெயரோடு வந்தார்.

இதழ் : நவமணி, 13.7.1970

933. முருகு. சுப்பிரமணியன்

ஆசிரியர் முருகுவின் எழுத்துலகம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது என்று சொல்லலாம்.

திருச்சி அர்ச். சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் 1939 ஆம் ஆண்டு ஐந்தாம் படிவத்தில் படித்துக் கொண்டிருந்தபோது திரு. முருகுவின் கட்டுரை ஒன்றைத் தமிழாசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை வகுப்பில் படித்துக் காட்டி கட்டுரை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அழுத்தமாகச் சொன்னார்.

1942ல் படிப்பு, முதல் பல்கலைக்கழக வகுப்போடு முடிந்தது. படிப்பு முடியுமுன்னர் திருச்சியிலேயே இளந்தமிழன் என்னும் திங்களிருமுறை ஏட்டைத் துவக்கினார்.

இளந்தமிழனில் முருகு என்னும் புனைபெயரில் எழுதி வந்ததோடு, இளந்தமிழன் ஆசிரியர் முருகு என்னும் பெயரிலேயே வந்தது. அதுவே பிறகு பெயருக்கு முன்னால் சேர்ந்து முருகு சுப்பிரமணியன் என்றாகிவிட்டது.

நூல்        :               தமிழ்க்காவலர் முருகு சுப்பிரமணியன்

                                ⁠பொன்விழா மலர் (1976), பக்கம் – 36, 37

தொகுப்பு            :               பரிதா மணாளன்

934. பிரயோசனம்              –              பயன்

935. பார்யை         –              மனைவி

936. சுவரம்           –              காய்ச்சல்

937. புருசன்        –              கணவன்

938. இரெங்கசாமி- அரங்கண்ணல் (1943)

25 ஆண்டுகளுக்கு முன்பு! ‘கிளம்பிற்றுக் காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்! கிழித்தெறியத் தேடுதுகாண்பகைக் கூட்டத்தை’ என்று பாரதிதாசனார் பாராட்டிய திருவாரூரில், ஒரு தமிழ்க் குகை, மா. வெண்கோ எனும் புனைபெயருக்குள் தன்னை மறைத்துக் கொண்ட வயலூர் சண்முகம், திருக்குவளை கருணாநிதி, கோமல் இரங்கசாமி, திருவாரூர் சாமா, விசயபுரம் செல்லக் கணபதி, குளக்கரை சீனுவாசன்… அடிக்கடி இந்த மாணவப் பட்டாளம் அந்தக் ‘குகை’க்குள் கூடும். திருக்குவளை கருணாநிதி வேலையிருந்தால்தான் வருவார். அவர் தவிர மற்ற நாங்கள் எல்லாம் ஒரு கூட்டம். தமிழ் மீது எங்களுக்கு ஓர் ஆசை.

எனது மாணவ ஆசான் வ. கோ. சண்முகம் ஓர் அவைக் கோழை! மிராசு வீட்டுப் பிள்ளை எனும் நினைப்பும் வசதியான வாழ்வும் அவருக்கு அப்போது அமையாதிருந்தால் இன்று அவர் கவிஞர்களில் கவிஞராகவோ அல்லது இன்னொரு கருணாநிதியாகவோ இருந்திருக்கலாம். சிறந்த தமிழ்த் தும்பீ! அவருடைய வீடுதான் எங்கள் குகை. கோமல் இரங்கசாமியான என்னை அரங்கண்ணல் ஆக்கியது அவர்தான்.

இராம. அரங்கண்ணல், எம்.எல்.ஏ., சுரதா பொங்கல் மலர் – 1970

939. Bus – நெய்யாவி ஊர்தி

நெய்யாவி ஊர்தியிலே (பொருள் தெரியாவிட்டால் நீச பாசையிலுள்ள பஃச் என்ற திசைச் சொல்லை உபயோகித்துக் கொள்ளவும்) பிரயாணம் செய்து கொண்டிருந்த, ஒரு சகோதரி வேடிக்கையாக ஒன்றைச் சொல்ல, அதைக் கேட்ட மற்றப் பிரயாணிகள் கொல் என்று சிரித்தார்கள்.

நூல்        :               அசோகவனம் (1944), பக்கம் -92

நூலாசிரியர்         :               எ. முத்துசிவன்

940. Bangalow – தங்கிடம்

பொருநையாறு இம்மலைமிசைத் தோன்றிக் கீழ் நோக்கி ஓடி வருகிறது. இது தோன்றும் இடம் சதுப்பு நிலமாக எப்போதும் தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கிறது. இது சிறிது தூரம் வந்தவுடன் கன்னிகட்டி என்ற ஓரிடம் இருக்கிறது. அவ்விடம் மரச் செறிவுள்ளதாய்ப் பேரழகினதாய் விளங்குகின்றது. இங்கே தங்கிடம் ஒன்றிருக்கிறது.

நூல்        :               பாவநாசம் பாவநாச சரி கோவில் வரலாறு (1944), பக். 5

நூலாசிரியர்         :  இ. மு. சுப்பிரமணியபிள்ளை, தலைமைத் தமிழாசிரியர்,

                                நாட்டாண்மை உயர்ப்பள்ளிக்கூடம், சங்கரன் கோவில்.

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்