(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 931- 940 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 941- 948

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. Profiles – பக்கப் பார்வைப் படங்கள்
    இந்த நாகரிகமற்ற காட்டு மனிதர்களுக்குப் படம் வரையத் தெரிந்திருந்தது. ஆனால் காகிதத்தாள்களாவது எழுதுகோலாவது மைதீட்டும் கருவியாவது அக்காலத்தில் இருக்கவில்லை. கல் ஊசிகளும் கூர்மையான கருவிகளுமே அவர்களிடம் இருந்தன. இவற்றைக் கொண்டு குகைகளின் சுவர்களில் அவர்கள் மிருகங்களின் உருவங்களைக் கீறி வரைந்தார்கள். அவர்கள் எழுதியுள்ள சித்திரங்களில் சில மிகவும் நன்றாயிருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் பக்கப் பார்வைப் படங்கள் (Profiles). பக்கப் பார்வைப் படங்களை வரைவது எளிது என்று உனக்குத் தெரியும்.
    நூல் : சவாகர்லால் நேருவின் கடிதங்கள் (1944)
    ⁠பக்கங்கள் -43, 44
    மொழிபெயர்ப்பு : சி. இரா. வேங்கடராமன், பி.ஏ. பி.எல்,
    ⁠(இந்திய ஊழியர் சங்கம்)
  2. வாக்கியம் – சொற்றொடர்
    இராமன் பாடம் படிக்கிறான்
    சீதை கோலம் போடுகிறாள்
    பசு பால் தரும்
    நாய் வீட்டைக் காக்கும்.
    இவ்வாறு பல சொற்கள் தொடராகச் சேர்ந்த சொற்றொடரால் (வாக்கியத்தால்) ஒரு கருத்தினைப் பிறருக்கு அறிவிக்கின்றோம்.
    நூல் : சிறுவர் தமிழிலக்கணம் (1945)
    பக்கம் – 5
    நூலாசிரியர் : வே. வேங்கடராசுலு ரெட்டியார்
  3. கிளாரினெட் – கிளரியம்
    இஃது ஐரோப்பியத் துளைக்கருவிகளுள் ஒன்று. இப்போது இது தஞ்சாவூர்க் கூட்டியத்தில் (பாண்டில்) இடம் பெற்றுள்ளது. இதைச் சதிர்க் கச்சேரிகளில் வாசிக்கப்படும் சின்ன மேளத்தில், குழலுக்கும் முக வீணைக்கும் பதிலாக முதன்முதலாக நுழைத்தவர் மகாதேவ நட்டுவனார் ஆவார்.
    நூல் : தமிழர் இசைக் கருவிகள் (1945), பக்கம் – 50
    நூலாசிரியர் : பி. கோதண்டராமன்
  4. சாயாசரீரம் – நிழலுடல்
    நூல் : பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி (1945) பக்கம் . 8
    குறிப்புரை : வி. சிதம்பர இராமலிங்க பிள்ளை
    ⁠(திருவாவடுதுறை ஆதீன வித்துவான்)
  5. Band – கூட்டியம்
    ஐரோப்பிய இசையின் தொடர்பினால் தமிழ்நாட்டு இசையில் ஏற்பட்ட நவீனங்களில் பாண்டு (கூட்டியம்) என்பதும் ஒன்று. சென்ற நூற்றாண்டில், தஞ்சாவூர் சமத்தானத்தில், மரத்தாலும், பித்தளையாலும் ஆன இசைக் கருவிகளைக் கொண்டு ஒழுங்காக அமைக்கப்பட்ட முதல் பாண்டு, கருநாடக இசை முறையில் வாசிக்கப்பெற்றது.
    நூல் : தமிழர் இசைக் கருவிகள் (1945), பக்கம் – 62
    நூலாசிரியர் : பி. கோதண்டராமன்
  6. Universe – உலகத் தொகுதி
    தருக்கையுடைய மனத்தவர்களே ! நீங்கள் போய் விடுங்கள்; மெய்யடியார்களே! விரைவாக வாருங்கள் அடியார் கூட்டத்தில் சேர்ந்து, இறைவன் சம்பந்தமான பிறருடைய அநுபவங்களைக் கேட்டும் தம்முடைய அநுபவங்களைப் பிறருக்குச் சொல்லியும் பரம்பரையாக ஈசனுக்கு அடிமைப் பணி செய்யுங்கள். உலகத் தொகுதியையும் கடந்த அப்பாற்பட்ட பொருள், அளவுகடந்த ஆனந்த வெள்ளமாயிருக்கும் அல்லது ஆனந்த வெள்ளத்தைத் தரும் பொருள், முன்னும், இப்போதும், எக்காலத்தும் (அழியாது) உள்ள பொருளென்றே சிவபெருமானுக்குப் பல்லாண்டு கூறுகின்றோம்.
    நூல் : சைவ சமய விளக்கம் (1946), பக்கம் – 51
    நூலாசிரியர் : அ. சோமசுந்தர செட்டியார்
    ⁠(சேக்கிழார் திருப்பணிக் கழகத் தலைவர்)
  7. Vacuum – பாழ்
    வாய் திறந்து பகவானைப் பேரிட்டழையாமல் மனத்தால் தியானிப்பவர்களும் அவரைக் (பகவானை) குதா என்னும் நாமத்தால் ஒசைபடாமல் சொல்லி, ஏதாவதொரு வடிவத்தாலேயே தியானிப்பார்கள். அவரை ஏதேனுமொரு பாவனையினாலன்றி தியானித்தல் எளிதன்று. அவரை ஆகாயமாகவாவது தியானித்தே தீர வேண்டும். ஆகாயமும் ஒரு பொருளே அன்றி வெறும் பாழ் அல்ல. முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாம், அப்பாலும் பாழென்றறி என்றபடி பகவானைப் பாழ் என்றாலும் அவர்க்கு நாமம் ஏற்படுகிறது. எப்போது நாமம் ஏற்படுகிறதோ, அப்போது உரூபமும் ஏற்படாமல் இராது.
    நூல் : கபீர்தாசு (1945), பக்கம் : 9, 10
    நூலாசிரியர் : பண்டிதர் ம. மாணிக்க வாசகம் பிள்ளை

  1. எலினேரியோ – காட்சிக் கோப்பு
    ‘லினேரியோ’ என்பது ஒரு ஆங்கிலச் சொல். தமிழில் அதன் பிரதி பதம் ‘காட்சிக் கோப்பு’.
    இப்பதம் திரைப்படத்திற்கும்(சினிமாவுக்கும்) சரி, நாடகத்திற்கும்(டிராமாவுக்கும்) சரி – பொதுவானது.
    இதழ் : குண்டுசி, நவம்பர் 1947, பக்கம் :12, பட்டை – 1, ஊசி – 2
    கட்டுரையாளர் : பாலபாரதி ச. து. சு. யோகியார்

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்