(தமிழ்ச்சொல்லாக்கம்: 309-315 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 316-320

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

316. அபிமானம் – பற்றுள்ளம்

ஆரியம் வேதமுதலியன நிறைந்துள்ள தெய்வமொழி என்று அடிப்படுகின்றமையின், தெலுங்கு முதலியன அதினின்று பிறந்தன எனின் அவ்வம்மொழியார் கனிவு காட்டுதலும், தமிழினின்று அவை பிறந்தனவெனின் முனிவு காட்டுதலும், பற்றுள்ள மேயன்றி முறைமையாகாது. அப்பற்றுள்ளத்தினின்றும் நீங்கி யுண்மை யெதுவென ஆராய்ந்து தெளிதல் வேண்டும். பற்றுள்ளம் – அபிமானம்.

நூல்   :     மொழிநூல் (1913) பாயிரவியல், பக்கம் 34

நூலாசிரியர்    :    மாகறல் கார்த்திகேய முதலியார்

317. கிரகபதி – கோளரசு

செந்தமிழ் நிலம் நடுவிலும், அதனைச் சூழப் பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடும், அக்கொடுந்தமிழ் நாட்டைச் சூழச் சிங்களம் சோனக முதலிய நாடுகளும் வைத்துக் கூறினதை யுய்த்துணரின் செந்தமிழ்க்குப் பன்னிரண்டு கொடுந்தமிழ் மொழியும் அணுக்கவியைபுடையன என்பதும், சிங்களம் சோனக முதலியன சேய்மை யியைபுடையன என்பதும் பெறப்பட்டமை காண்க. ஏனைய கோள்களுக்கும் அக்கோள்களி னடுவிலுள்ள சூரியனுக்கும் இயைபுண்மை போல, ஏனையமொழிகளுக்கும் அம்மொழிகளி னடுவிலுள்ள செந்தமிழ்க்கும் இயைபுண்மை பெற்றாம். சூரியன் கோளரசென்பது போலத் தமிழ் மொழியரசென்பது பெறப்படுகின்றது. கோளரசு – கிரகபதி.

நூல்   :    மொழிநூல் (1913) பாயிரவியல், பக்கம் 38

நூலாசிரியர்    :  மாகறல் கார்த்திகேய முதலியார்

318. Museum – பல பொருள் காட்சி சாலை

மியூசியம் : பல பொருள் காட்சி சாலை, இது எழும்பூரிலிருக்கும் ஓர் நேர்த்தியான கட்டடம். நானாவிதமான நூதன வசுதுக்களையும் வினோதப் பொருள்களையும் கொண்டு வந்து சேர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நாடக சாலையும், பெரியதொரு புத்தக சாலையும் இருக்கின்றன.

நூல்   :           விட்ணு தல மஞ்சரி (1908-1913)

இரண்டாம் பாகம் பக்கங்கள் 89-93

நூலாசிரியர்  :   மயிலை கொ. பட்டாபிராம முதலியார்

319. Cycle – மிதிவண்டி

நிமிடத்தில் நூறு மையிலோடும் நேர்த்தியுள்ள ரயில்வண்டி, முந்நூறு கப்பல், நாலஞ்சுகப்பல் தப்பமுடன் மிதிவண்டி ஒவ்வொரு கப்பல், தப்புகள் வராமலே உயர்வான மோட்டார் கார்வண்டி,…

நூல்   :   சந்தியா வந்தனம் (1913), பக்கம் – 35

நூலாசிரியர்  :    கோ. வெங்கிடாசல ஆச்சாரியார், திருச்சிராப்பள்ளி

320. மகாநாடு (மாவட்ட) மாநாடு

1 அமெரிக்க மதுரை மிசினில் உள்ள கிறித்துவ ஆலயங்களின் மாவட்ட மாநாட்டின் மூன்றாவது ஆண்டு அறிக்கை : முதற்பதிப்பு; II சாமுவேல் சோசப்பு அய்யர், அருப்புக்கோட்டை, லெனாக்சு பிரசு, பசுமலை, சூலை, 1913

நூல்   :   அமெரிக்க மதுரை மானினில் உள்ள கிறித்துவ ஆலயங்களின் மாவட்ட மாநாட்டின் மூன்றாவது ஆண்டு அறிக்கை (1913)

நூலாசிரியர்  :    ஏ.எசு. அப்பாசாமி பிள்ளை தமிழ்நூல் விவர அட்டவணை (1911-1915) மூன்றாம் தொகுதி – மூன்றாம் பகுதி பக்கம் – 34 பொதுப் பதிப்பாசிரியர் கொண்டல் மகாதேவன், பி.எசி, எம்.ஏ.

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்