மறை சொல்லும் மறுப்பும் மறைப்பும் – இரா. திருமாவளவன், மலேசியா
மறை சொல்லும் மறுப்பும் மறைப்பும்
எதிர்மறை நேர்மறை என மறையைச் சேர்த்து எழுதும் சொல்லும் வழக்கைச் சிலர் ஆள்கின்றனர். இவற்றுள் நேர்மறை எனச் சொல்வது சரியா?
சரியா பிழையா என அறிய, மறையில் மறைந்துள்ள நுட்பப் பொருளை அறிந்தால் கட்டாயம் தெளிவுறும்..
எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு வேர்ச்சொல் விளக்கமேயாகும்…
உல் எனும் ஊகாரச் சுட்டு ஆணிவேர், பல்வகைக் கருத்துகளைத் தந்து சொற்களைப் பிறப்பிக்கும் என்பது பாவாணரின் கோட்பாட்டு விளக்கமாகும்.
அக்கருத்துகளில் ஒன்றே வளைவுக் கருத்தாகும்.
பாவாணர் வித்தினின்று முளைவிட்டு கிளம்பிய ஆணிவேரின் நகர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே வேர்ச்சொல்லின் வழியிலான சொற்பிறப்பியலையும் கண்டறிந்தார். இது இருவகைக் கண்ணறைகளின் நகரும் நகரா இயற்கை அறிவியலையும் விளக்கியுரைக்கும் நுட்பம் வியப்புக்குரியதே.
வேர் நீரைத் தேடி நகர்கையில் முன் தட்டுப்படும் பொருளின் உறுதித் தன்மைக்கேற்ப, அதனைத் தாண்டலாம்; துளைக்கலாம்; அல்லெனில் வளையலாம். வளைந்து திரும்பலாம்.
வளைதலுக்கு முன் முட்டுப்பட்ட வேரின் நேர் நகர்வு முடங்கும், முடங்கிய நகர்வு வளைதலால் தொடரும்; ஆனால் அது வளைவு பெற்ற நகர்ச்சியாகும்.
எனவே, வளைதலால், வளைவு, வட்டம், கோணல், கோடல், நேர் எதிர் திரும்பல், வருதல் முதலானப் பல்வகைக் கருத்துகள் பிறக்கும்.
அவ்வாறு வளைதலால் எதிர் நிலைக் கருத்தை உணர்த்திப் பிறந்த சொல்லே மறை என்பது.
உல்> முல்> மல்> மறு.
வளைந்து எதிர் நிலைக்குத் திரும்பியதால் முந்தைய செல்கைக்கு எதிர்முகமாய் நிற்பது. இது முரணி மறுத்தல் கருத்தை உணர்த்தியது.
முரண் என்பதுவும் அவ்வாறு எதிர்நின்ற கருத்தை உணர்ததும் வளைவுப் பொருள் வேர் விளைச்சலே.
உல்> முல்> மல்>மறு > மறை
இங்கே மறை மறுப்புப் பொருளை உணர்த்தி நிற்கும். எதிர் நிலையில் நின்று மறுத்தலால் எதிர்மறை ஆயிற்று.
வளைவே வட்டமுமாகும். வட்டமாய்ச் சுழன்று சுழன்று வருவது சுழற்சியாகவும் சுழற்சி ஒழுங்கெனவும் கொள்ளப்பெற்றது. சுழற்சியாய் ஓர் ஒழுங்கிற்குள் அமையும் அனைத்து வினைகளும் வட்டப் பொருளையே தந்தன.
தடவை, தாட்டி, வாட்டி, சுழற்சி , முறை என அமைந்த சொற்கள் அனைத்தும் வட்டப் பொருளைத் தந்தனவே.
உல்> முல்> முறு > முறை = சுழற்சியாய் அமைந்த ஒழுங்கு.
முறு > முறுக்கு = வளைத்து நெளித்தல்
( முருகன் எனும் பெயர்ச்சொல்லின் வேர் வளைதல் பொருளைத் தராது. அது தோன்றல் வேர்கருத்தை அடியாகக் கொண்ட இளைமைக் கருத்துச் சொல்லாகும். )
நேர்முறை என்பது நேரியவாறு அமைந்த ஒழுங்கமைவு எனப்பொருளாகும்.
இங்கு மறையும் முறையும் ஒரே வேர் கருத்தினின்று பிறப்பினும் ஒன்று மறுப்பையும் மற்றொன்று ஒழுங்கமைவையும் குறிப்பதாகும்..
வளைவுப் பொருளில், மறுத்தல் , திரும்பல் கருத்தில் பல்வேறு சொற்களைப் பட்டியலாய்க் காணலாம்..
மறு, மறை, மாறு, மாற்று, மற்று, மற்றை , மறுபடி, மறுக்களி, மற்றொன்று, மற்றப்படி, மற்றவர், மாற்றான் முதலியன வளைதல் கருத்தில் மறுதலைப் பொருளைத் தருவனவே.
மறை கலங்கல் கருத்து வேரிலிருந்து கருமைப் பொருளைத் தந்து இன்மைப் பொருளைத் தந்தும் இயங்கும். ஒரே சொல் ஒரே வேரில் பிறப்பினும் இரு வேறு கருத்தில் பிறந்ததுவால் இருவேறு பொருளைத் தந்து விளங்கும்.
உல் > சேர்தல் கருத்தைத் தரும் வேர்.
முன் விளக்கப்பட்டது போல் வேர், முன்னோக்கி நகர்ந்து முட்டுப்படும் பொருளோடு ஒட்டுவதை, சேர்வதை, கலப்பதை விளக்குவதே கலத்தல் அல்லது சேர்தல் கருத்து வேராகும்.
சேரல், கலத்தல், பொருந்தல், இணைதல், கரைதல் அனைத்தும் இக்கருத்துப் பற்றியனவே.
பக்கவேரினின்று கிளைவேர்களும் சல்லி வேர்களும் பிறப்பது போல் சொற்களுக்குள்ளும் கிளைக் கருத்துகளைத் தரும் சொற்களும் பிறக்கும்.
தெளிந்த நீரில் பிற கலந்தால் அல்லது கிண்டி கலக்கினால் கலங்கல் உருவாகுவது போல் சேர்தலால் கலங்கல் கருத்து உருவாகும். கலங்கியது கருக்கலாகும் அல்லது கருமையாகும் . கலங்கிய கருக்கலில் தெளிவற்ற இருண்மை உருவாகி உட்பொருள் தெரியாதும் போகும். தெளிவற்றுத் தெரியாது போதலே மறைதல்.
உல்> முல் > மல் = கருமை கருத்து வேர்.
உல்> முல்> மல் > மய் > மை = கருமை
உல்> முல்> மல் > மால் = கருமை நிறம், திருமால்
உல்>மல் > மால் > மார் > மாரி = மழை
உல்> முல்> மல் > மால்> மாய் > மாயம் = மறைவு
மாய் > மாயோன்
மல்> மய்> மயக்கம் = கலக்கம், குழப்பம், தலைச்சுற்றல்
உல்> மல் > மறு > மறை = காணாதிருத்தல், ஒளித்தல்
மறை = பிறர் அறியாதவாறு ஒளித்தல்,
கள்ளர் அறியாவண்ணம் விலை உயர் பொருட்களை மறைத்து வைத்தலால் , மறை காத்தல் பொருளையும் கிளைக்கருத்தாய்த் தந்தது.
உயர் கருத்துகளைப் பொதித்து வைத்திருப்பதால் அரிய நூல்கள் மறை நூல்கள் எனப்பட்டன. அத்தகு கருத்துகள் மறைபொருள், மறைமொழி எனவும் கூறப்பட்டன.
மறைமொழி தாமே மந்திரம் என்ப எனத் தொல்காப்பியமும்
நிறைமொழி மாந்தர் மறைமொழி என வள்ளுவமும் மறை பற்றி விளக்கியுரைப்பதைக் காணலாம்.
எதிர்மறையில் அமைந்த மறையும் மறைமொழியில் அமைந்த மறையும் ஒருபொருளனவல்ல.
எதிர்மறை போல் நேர்மறை எனல் தவறே.
நேர்முறை எனல் நேரொழுங்காகும். எதிர்மறை , எதிர்நின்று மறுதலையாய் அமைவது. நேர்மமும் எதிர்மமும் நேர்மை எதிர்மை போல் அமைவன. நேரியப் பண்பு நேர்மை , மறுதலைப் பண்பு எதிர்மை.
நேர்மம் நேரிய சிந்தனை
எதிர்மம் முரணிய சிந்தனை
மறை சொல்லும் மறுப்பும் மறைப்பும் ஓரே வேரினின்று இருவேறு கருத்தாய்த் தெளிவுறுவதை வேர்ச்சொல் ஆய்வால் உணரலாம்.
– இரா. திருமாவளவன், மலேசியா
Leave a Reply