இந்திக்கு முதன்மை பிரிவினைக்கு வித்து
– தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்
இந்தியக் கூட்டரசின் பொதுப்பணிக்குழுவின் தேர்வு மொழியாக இந்தியை ஆக்குவதற்கு, இந்திமொழி பேசப்படாத மாநில முதல் அமைச்சர்களுடன் இந்தியக் கூட்டரசுத்துறையினர் ஆய்வு நிகழ்த்தப்போவதாகச் செய்தியொன்று வெளிவந்துள்ளது. கூட்டரசு மொழிகளில் இந்தியை மட்டும் பொதுப் பணிக்குழுவின் தேர்வு மொழியாக ஆக்குதல் இந்திக்கு மட்டும் ஏற்றம் அளித்து, கூட்டரசின் ஏனைய மொழிகளை இழிவுபடுத்துவதாகும்; ஏனைய மாநிலங்களுக்கு இழைக்கும் பெருந்தீங்காகும். ஆதலின் கூட்டரசு மொழிகள் அனைத்திலும் தேர்வு எழுதுவதற்கு உரிமையளித்தல்தான் கூட்டரசுக் கொள்கைக்கு ஏற்றதாகும். இன்றேல் ஏனைய மொழியாளர் கூடி வாழ்வதால் பயனில்லை என்று கருதிப் பிரிந்துவாழும் உரிமையைத் தேடவேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாக்கப்படுவர். உளம் ஒன்றிய கூட்டுறவே என்றும் நிலைத்திருக்கும்; உளத்தால், உணர்வால், ஒன்றுபடாதவரைச் சட்டத்தால் அச்சுறுத்தி ஒன்றுபடுத்த முயலுதல் என்றும் இயலாது என்பது வரலாறு சுட்டும் பாடமாகும்.
“செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை யுற்ற குடி’’.
என்னும் வள்ளுவர் வாய்மொழியை உள்ளுதல் வேண்டும். ஆதலின் எல்லா மாநிலங்களும் ஒன்றுபட்டு வாழும் கூட்டரசு நிலைக்க வேண்டுமானால் எல்லா மொழிகட்கும் சம உரிமை அளிக்க வேண்டும். இந்தி மொழிக்கு மட்டும் ஏற்றம் அளித்தல், ஏனைய மொழிகளைப் புறக்கணிப்பதாகும். இதனை ஏனைய மாநில முதல் அமைச்சர்கள், சிறப்பாகத் தமிழ் மாநில முதல் அமைச்சர். இந்தியக் கூட்டரசினர்க்குத் தெளிவுபடுத்தல் வேண்டும்.
இந்தியக்கூட்டரசினர் தாமாக ஒன்றை முடிவு செய்து கொண்டு, அவ்வாறு முன்கூட்டியே முடிவு செய்த கருத்தை மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளச் செய்து, மாநில முதலமைச்சர்கள் முடிவு என விளம்பரப்படுத்துவதாக மக்கள் கருதுவது உண்மையாகிவிடக்கூடாது. எங்கும் இந்தி முதன்மை எதிர்க்கப்படுவதை, எடுத்துரைத்தும் இந்தியைப் போல் ஏனைய மொழிகளையும் இந்தியக் கூட்டரசின் பொதுப்பணிக் குழுத் தேர்வு மொழிகளாக ஆக்குதல் வேண்டும். இன்றேல் பொதுப்பணிக்குழுத் தேர்வுகளை ஏனைய மொழியாளர் புறக்கணித்து ஒதுக்குவர் எனத் தெளிதல் வேண்டும். பின்னர்க் கூட்டரசினையும் புறக்கணித்து ஒதுங்கும் நிலை எவ்வாற்றானும் தானே உருவாகும்; இந்திக்கு ஏற்றம் பிரிவினைக்கு வித்து என்பதில் எட்டுணையும் ஐயமின்று.
இந்தியக் கூட்டரசின் கல்வியமைச்சர் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் நிகழ்த்திய உரையாடல்களிலிருந்து பின்வருபவை தெளிவாகின்றன;
1. இந்தி மொழிதான் நாளடைவில் பல்கலைக்கழகப் பாடமொழியாகும்.
2. மாநில மொழிகள் பல்கலைக்கழகப் பாடமொழியானால் இந்தியாவின் ஒற்றுமை கெட்டுவிடும்.
3. இந்திமட்டும்தான் மாநிலங்களிடையே தொடர்பு கொள்ளும் மொழியாகும்.
4. பள்ளியிறுதி வகுப்பின் இந்திமொழித் தேர்வில் மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்றாக வேண்டும்.
5. இந்தியப் பொதுப்பணிக்குழுவின் தேர்வு மொழியாக இந்தியிருப்பதைத் தடுத்தல் இயலாது.
இவ்வளவும் அவர் கூற்றினால் அறியக்கூடியனவாக இருந்தும் ‘‘எல்லோரும் ஒப்புக்கொள்ளாத வரையில் இந்தியைத் தென்னாட்டின்மீது சுமத்த முடியாது’’ என்றும் கூறியுள்ளார்.
இந்தி மொழியைக் கற்றால்தான் வாழ்வுண்டு என்ற நிலையை ஏற்படுத்திவிட்டு ‘‘இந்தியை விரும்பாதவர் மீது சுமத்தவில்லை’’ என்று கூறுவது அறநெறிக்கு ஒத்தாகவும் இல்லை; மக்களாட்சி முறைக்கு மாறான தனிக் கொடுங்கோன்மையாட்சிக் குரியதாகவும் உள்ளது. திரு சக்ளா அவர்கள் உரைத்துள்ளமைபோல் இந்தி, ஆங்கிலத்தின் இடத்தை அடையப்போவது உறுதி; அதற்குரிய சூழ்நிலையைத்தான் இந்திய அரசினர் உருவாக்கிக்கொண்டு வருகின்றனர். ஒருவரைக் கொன்றுகொண்டே ‘‘கொல்லவில்லை, கொல்லவில்லை’’ என்று கூறிக்கொண்டிருப்பதுபோல், இந்திக்கு முதன்மையளித்துக்கொண்டே விரும்பாதவரும் படிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையை உருவாக்கிக்கொண்டே, வங்காளத்தின் மீதும் தென்னாட்டின்மீதும் இந்தியைத் திணித்தல் இயலாது’’ என்று கூறிக்கொண்டிருப்பது எட்டுணையும் பொருந்தாது. ‘‘பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே’’ என்பது எக்காலத்திலும் பயன்தருதலில்லை.
இந்திக்கு முதன்மை தரும் செயலே பிரிவினைக் கொள்கைக்கு ஆக்கம் தரும் வித்தாகும் என்பதனை அறிதல் நன்று. மாநில மொழிகள் அனைத்துக்கும் சம உரிமையும் வாய்ப்பும் அளித்தலே கூடி வாழும் கொள்கைக்கு அரண் செய்வதாகும் என்பதனைத் தெளிந்து செயல்படுமாறு இந்தியக் கூட்டரசை வேண்டுகின்றோம்.
தமிழ்ப்பெருமக்களே! இந்தி முதன்மையால் ஏற்பட இருக்கும் ஒற்றுமைச் சிதைவைத் தடுக்க ஒன்றுகூடுவீர்களாக, உயர்தனிச் செம்மொழியாம் தமிழுக்குரிய இடத்தை அளிக்க ஒல்லும் வகையால் முயல்வீர்களாக.
இந்தி முதன்மையைத் தடுத்துச் செந்தமிழைக் காப்பீர்களாக!
குறள்நெறி
Leave a Reply