தொடர்கதை

(சித்திரை 28, 2045 / 11 மே 2014 இதழின் தொடர்ச்சி)

  tear02

  சிவக்கொழுந்து தம் தங்கை மகளுக்குத் தம் தாயாரின் பெயரையே இட்டு அவளைப் பூங்கோதை என அன்புடன் அழைத்து வந்தார். செங்மலத்தின் கொடுமை ஒருபுறம் இருந்தாலும், சிவக்கொழுந்தினுடைய மாறா அன்பும், காளியம்மையின் பாதுகாப்பும் பூங்கோதைக்குத் துணையாக அமைந்தன. காளியம்மைக்குக் குழந்தையிடம் உண்மையிலேயே நல்லபற்று இருந்தாலும் ‘செங்கமலத் தம்மையாரின் கண்சிவக்கும்’ என்று, அவளுக்கு எதிரில் பூங்கோதையைச் சினந்தும் மருட்டியும் வந்தாள்.

  பூங்கோதைக்கு யாண்டு ஐந்து முற்றுப் பெற்றது. சிவக்கொழுந்து அவளைத் தம்மக்களோடு பள்ளிக்கு அனுப்பி வைத்தார். செங்கமலத்திற்கு இத்திக்கற்றக் குழந்தையை, தன் செல்வ மக்களோடு ஒத்த நிலையில் வைத்து வளர்ப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை என்ன செய்வது! தன் கணவனை மீறித்தான் ஒன்றும் செய்ய முடியாத நிலையிலிருந்தாள்.

  சிவக்கொழுந்திற்குத் தலைமகன் காளையப்பனுக்கு யாண்டு பன்னிரண்டு. பிள்ளை கொழு கொழு வென்று அழகாக இருப்பான். யாரும் அவனைக் கடிந்துரைப்பதில்லை. அவன் எத்துணைக் குறும்பு செய்தாலும் தட்டிக் கேட்பாரில்லை. சிவக்கொழுந்து ஏதாவது சொல்லத் தொடங்கினாள் செங்கமலம் சிணுங்கத் தொடங்கிவிடுவாள். ஊரிலுள்ள யாருமற்ற கழுதைகளுக்கெல்லாம் இந்தவீட்டில் செல்வமாக வளர இடமிருக்கிறது. ஆனால் என்னுடைய செல்வ மகனைக் கண்டால் தான் எல்லாருக்கும் கண் கரிப்பாக இருக்கிறது. எல்லாம் என் தலை விதி’’ என்று ஓலமிடுவாள்.

  காளையப்பன் பள்ளிக்குச் சென்று ஏழாண்டுகளாயின. படிப்பது எப்படியிருந்தாலும், ஓராண்டிலும், அவன் தேர்ச்சியில் தவறியதில்லை. அவனுடைய அம்மாவுக்கு இதை விட என்ன பெருமை வேண்டும்? சிவக்கொழுந்திற்கு அவனுடைய வெற்றி வியப்பாகத்தானிருந்தது. அந்த ஊரிலிருந்த உயர் தொடக்கப்பள்ளிக்கு, சிவக்கொழுந்து புரவலரும் தாளாளரும் ஆவர்; அவருடைய செல்வப் புதல்வன் தேர்வில் வெற்றி பெறாவிட்டால், அப்பள்ளியின் தலைமையாசிரியர்க்கு அமைதி இருக்குமா? எப்படியோ காளையப்பன் ஒவ்வோராண்டும் மேல் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்தான்.

 காளையப்பனுக்கு மூன்றாண்டிற்கு இளையவன் பூஞ்சோலை. மூன்றாவது குழந்தைக்கு அப்பொழுது யாண்டு ஏழு நிறைவுற்றிருந்தது. அவர் அக்குழந்தையைத் தன் தங்கை சண்பகத்தின் பெயரால் அழைத்து வந்தார். ஆனால் அந்த அற்பாயுளின் பெயரையா தன் மகளுக்கு வைப்பது என்று கருதிய செங்கமலம் அவளை ‘வண்ணக்கிளி’ என்றே அழைத்து வந்தாள்.

  குழந்தைகள் இயல்பாகவே எத்தகைய தன்மையுடையவர்களாக இருந்தாலும், வளர்ப்பிற்கு ஏற்றவாறும் மாறுபடுவார்களென்பது யாவரும் அறிந்த ஒன்று. சிவக்கொழுந்தின் மகளிர் இருவரும் பூங்கோதையை ‘திக்கற்றக் குழந்தை’ என்ற அருவருப்புடனேயே நடத்தி வந்தனர். தம்மியல்பாகச் சிறுவர் சேர்ந்து பழகினாலும், செங்கமலம் தம் குழந்தைகளை வேறாகப் பிரித்து விடுவாள்.

  பூங்கோதையின் துன்பச்சூழல் நாளுக்கு நாள் மிகுவதாயிற்று. சிவக்கொழுந்திற்கு, வாணிகத்திலும், பயிர்தொழிலிலும் வளங்குறைவதாயிற்று. இத்தீய பயனெல்லாம் பூங்கோதையின் கெட்டவேளைதான் என்று செங்கமலம் சுட்டிக் கொண்டே வந்தாள். மனையாளின் தீய எண்ணமும் கொடிய செயல்களும், இரக்கமின்மையும் சிவக்கொழுந்தை வருத்தின.

  steth01நாளடைவில் அவரது உளநோய் உடல் நோய்க்கு அடிகோலியது. மருத்துவர்களெல்லாம் நோய் ஒன்றும் இல்லை. ஓய்வும் உள்ள அமைதியும் இருந்தால் சரிப்பட்டு விடும் என்றார்கள். ஆனால் சிவக்கொழுந்திற்கு நம்பிக்கை இல்லை. தன் மனைவியின் ஆரவாரப் போக்கும், குழந்தைகள் வளர்க்கும் பண்பாடற்ற முறையும் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு இடையூறு பயக்குமே என ஏங்கினார். பூங்கோதையின் வழியற்ற நிலையை எண்ணி வருந்தினார். தம் இல்லத்தில் பணிபுரிந்து வந்த காளியம்மை, கண்ணம்மாள், கருப்பணன் ஆகியவர்களிடம் தமக்குப் பின்னால் தம் பிள்ளைகளோடு வைத்துக் கவனித்துக் கொள்ளுமாறு கூறினார். சிவக்கொழுந்து நாளுக்கு நாள் நலிந்து வந்தார். அப்பொழுது கூதிர்காலம் வெளியில் சென்று உலவுவதற்கு முடியாது மழையும் அடிக்கடி பெய்து கொண்டிருந்தது. கரிய முகிற் கூட்டம் வானத்தை மறைத்து எங்கும் இருள் கவியச் செய்தது. சிவக்கொழுந்து படுத்திருந்த அறையில் செங்கமலமும் குழந்தைகளும் கண்ணீர் வடித்த காட்சியோடு நின்று கொண்டிருந்தனர். தேம்பிக் கொண்டிருந்த பூங்கோதையைச் சுட்டிக் காட்டிய வண்ணமாய்த் தம் குழந்தைகளையும் அருகணைத்துக் கொண்டார் died body01சிவக்கொழுந்து. அவர் வாயினின்றும் பேச்சு எழவில்லை. சிவக்கொழுந்து இறுதியாகத் தம் கண்ணை மூடி விட்டார்.

பூங்கோதையின் நிலை.

சிவக்கொழுந்து மண்ணுலக வாழ்வை நீத்து யாண்டுகள் இரண்டு கடந்தன. பூங்கோதை மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். வண்ணக்கிளி இரண்டாண்டிற்கு மேல் மூத்தவள். என்றாலும் அவளும் மூன்றாம் வகுப்பிலேதான் படித்துக் கொண்டிருந்தாள். கழுத்தளவில் அலைந்து சுருண்டு விழும் அவளுடைய கரிய கூந்தலும், காதளவோடும் கரிய பெரிய கண்களும், குறும்புப் பார்வையும், காண்போருள்ளத்தைக் கவர்வதாக விருந்தன. அவளுடைய சிவந்த மேனிக்கு அவளுடைய ஆடையும், அணிகலன்களும் அழகுக்கு அழகு செய்வனவாகவே அமைந்தன. ஆயினும், அறிவுக்கூர்மையிலும், ஆணவத்திலும் அவள் தன் தாயை ஒத்திருந்தாள்.

  பூங்கோதை அருவருக்கத்தக்க வடிவ அமைப்பு உள்ளவளாக இல்லையெனினும், வண்ணக்கிளியை நோக்க அவள் கவர்ச்சி இல்லாதவளாக இருந்தாள். போதுமான கவனிப்பின்மையும், உணவுப் பற்றாக்குறையும் செந்தீபப் பொறி பறக்கும் செங்கமலத்தின் நோக்கும், வசைமாரி பொழியும் அவளுடைய வாழ்த்தும் பூங்கோதையின் உடல் வளர்ச்சிக்கு ஊறு பயக்காமல் உறுதியா பயக்கும்? மேலும் காளையப்பனின் குறும்புத் தனத்திற்கும், வண்ணக் கிளியின் எள்ளல் மொழிகளுக்கும் இடையில் பூங்கோதை சிக்கித் தவித்தாள்.

  பூஞ்சோலை வண்ணக்கிளிக்கு மூத்த பெண் அவள் படிப்பிலும், பின்னல் வேலை முதலியவற்றிலும், இசையிலும் சற்று விருப்பமும் தேர்ச்சியும் உடையவள். ஆகையால் அவள் தன்னுடைய நேரத்தைப் பெரும்பாலும் தனியாகவே செலவிடுவாள். அவளால் பூங்கோதைக்கு அத்துணை இடையூறு கிடையாது, என்றாலும், பூஞ்சோலை தன்னை வருத்து ஒதுக்குவதே பூங்கோதைக்குப் போதிய வருத்தத்தைத் தந்தது.

***

  சிவக்கொழுந்து உயிர் துறந்த அதே கூதிர்காலம். காலை வேளையில் பூங்கோதை சற்று நேரம் தனியாக வெளியில் சென்று தம் வீட்டிற்கு அருகே இருந்த பூந்தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்துவிட்டு வீடு திரும்பினாள். அன்று விடுமுறை நாள்; ஆகையால் செங்கமலம் நடுப்பகற்கு முன்னரே தன் குழந்தைகளோடு சேர்ந்து உணவருந்திவிட்டாள். பின்னர் காளியம்மை பூங்கோதைக்குத் தனியாகச் சோறிட்டு வைத்தாள். பூங்கோதை, தன் கவனத்தை வேறு வகையில் செலுத்தியவளாய் அயர்ச்சியோடு உண்டு கொண்டிருந்தாள்.

(தொடரும்)