ஆனி1, 2045 / 15 சூன் 2014 இதழின் தொடர்ச்சி

puungothai01

செங்கமலத் தம்மையார் என்றாவது இடை குறுக்கே அவ்வறைக்குள் பாதுகாப்போடு வைக்கப்பட்டிருந்த ஒரு நிலைப்பேழையில் உள்ளதையைத் திறந்து அதனுள் வைக்கப்பட்டிருந்த அணிகள் முதலாய விலைபெறு பண்டங்களைச் சரிபார்த்து விட்டுப் போவார்.

செங்கமலத்தம்மையாரின் கணவர் சிவக்கொழுந்து அம்மையாரிடமிருந்து விடைபெற்றுச் சென்று ஆண்டுகள் ஒன்பது கடந்து விட்டன. இதே அறையில்தான் அவர் உயிர் நீத்தது. அவரை அடக்கம் செய்வதற்கு வெள்ளாடை போர்த்து தூக்கிச் சென்றபோது கண்ட அவருடைய வெளிறிய முகம் மீண்டும் பூங்கோதையின் நினைவிற்கு வந்தது. அச்சம் மீதூர, பூங்கோதை அலறிக் கொண்டு வெளியே ஓடுவதற்கு எழுந்து வாயிலை நோக்கி ஓடினாள். அப்பொழுதுதான் அவளுக்குத் தெரியவந்தது. தன்னை அவர்கள் ஒரு கொடிய சிறையிலே, அடைத்து விட்டனர் என்று.

இது என்ன அநீதி!

அஞ்சிக் கண்களை மூடினாள். அந்த உருவம் மறையவில்லை. மீண்டும் அது தன்னை நோக்கி வருவது போல் தெரிந்தது. அதே நேரத்தில் கதவிடுக்கிலிருந்து விளக்கொளியின் கதிர் அசைவதுபோலும் தெரிந்தது; சிறிது நேரத்தில் அவளுடைய நெஞ்சு விரைவாகத் துடித்தது; மூச்சுத் திணறி உயிரே போய்விடும் போலிருந்தது. அதற்குமேல் அவளால் தாங்க முடியவில்லை.

‘’ஐயோ அம்மா!’’ என்று அலறிக் கொண்டு கதவை நோக்கி ஓடிவந்து கதவில் மோதித்தாழ்ப்பாளைக் குலுக்கினாள்.

மாடிப்படியில் ஏதோ ஆள் நடமாடும் ஓசை கேட்டது; கதவு திறக்கப்பட்டது.

‘‘என்ன ஏதாவது கனவு கண்டாயா?’’ என்று வினவினாள் காளியம்மை.

‘‘அம்மா! என்ன அலறல்! காதே இடியெடுத்து விட்டது’’ என்று ஓலமிட்டாள் கண்ணம்மாள்.

‘’என்னை வெளியே போக விடுங்கள். அடுப்படியிலாவது போய்ப் படுத்துக் கொள்கிறேன்’’ என்று பூங்கோதை அழுதாள்.

‘‘ஏன் என்ன ஆயிற்று; எதையாவது பார்த்தாயா?’’ என்றாள் காளி.

‘‘ஆம், முதலில் ஓர் உருவம் அசைந்து வந்தது; பிறகு ஒரு வெளிச்சம் தெரிந்தது; அதனால் தான் அலறினேன்’’, என்று காளியம்மையின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள். அவளுடைய உள்ளத்திலும் ஒரு சிறிது இரக்கம் சுரந்தது. அவள் பூங்கோதையை உதறித்தள்ளாமல் அணைத்துக் கொண்டாள்.

கண்ணம்மாவுக்கு மட்டும் இன்னும் பூங்கோதையினிடத்தில் அருவருப்புத்தான். ‘‘வேண்டுமென்றே இவள் இவ்வாறு அலறியிருக்கிறாள். அப்பொழுது தான் நாம் ஓடி வந்து இவளைத் திறந்து விடுவோம் என்ற சூழ்ச்சி’’ என்றாள் கண்ணம்மா.

fire01அதற்குள் மற்றுமொரு குரல் அங்கு அதட்டலோடு கேட்டது. ‘‘இது என்ன கூக்குரல்’ இந்தக்குட்டிப் பிசாசை இந்த அறையிலேயே பூட்டி வைக்கச் சொல்லியிருந்தேனே! யார் திறந்து விட்டார்கள்?’’ என்று செங்கமலத்தம்மையார் சினந்துகொண்டார்கள்.

‘‘மிகவும் அஞ்சி அலறியது அம்மா, அதனால் தான் திறந்து விட்டோம்.’’

‘‘சரி தொலையட்டும் காளியம்மையின் கையை விடு. இந்த மாயமெல்லாம் என்னிடம் செல்லாது. இனி இந்த வீட்டிலேயே நீ இருப்பதனால் உன்னுடைய அடங்காப்பிடாரித்தனத்தையெல்லாம் விட்டு விடு.’’

‘‘அத்தை, எனக்கு என்ன ஒறுத்தல் வேண்டுமானாலும் கொடுங்கள். இந்த அறையிலே மட்டும் என்னைப் பூட்டி விடாதீர்கள்’’ என்று கல்லும் கரையும் படியாகக் கூறினாள் பூங்கோதை. ஆனால் செங்கமலத்தின் உள்ளம் கல்லினும் கடியது போலும்.

‘’போடி, மாயக் கள்ளி! எதிர்த்தா பேசுகிறாய்?’’ என்று மீண்டும் பூங்கோதையை அவ்வறையினுள் தள்ளிக் கதவை இழுத்துப் பூட்டி விட்டு விரைவாகக் கீழே போய் விட்டாள். காளியம்மைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பேசாமல் அவளும் பின் தொடர்ந்தாள். கண்ணம்மாவும் உடன் போய் விட்டாள்.

உள்ளே தள்ளப்பட்ட பூங்கோதைக்கு விழுந்த அதிர்ச்சியில் மயக்கம் வந்து விட்டது. கால் கைகளெல்லாம் உதறின; மயக்கத்தை தொடர்ந்த உறக்கம் அவளுக்கு அமைதி அளித்தது.

இயல் – 4

ஓரளவு மயக்கம் தெளியப்பெற்ற பூங்கோதைக்குத் தான் கண்ட வெருவெருக்கத்தக்க கனவுகள் நினைவிற்கு வந்தன. இரும்புக் கம்பிகளுக்கிடையே அழல் எழுந்து எரிந்து கொண்டிருப்பதுபோல் அவளுடைய கண்களுக்குத் தென்பட்டது. சிலருடைய பேச்சு கிணற்றுக்குள் பேசுவது போல் கேட்டது. அவளை யாரோ அணையோடு சேர்த்து உட்கார வைப்பது தெரிந்தது. தான் அன்று வரை துய்க்கப் பெறாத ஒரு மென்மைத் தன்மையோடு நடத்தப்படுவதையும் உணர்ந்தாள்.

சில வினாடிகளில் ஒருவாறு மயக்கமும், குழப்பமும் நீங்க அவள் தான் தனது கட்டிலின் மேல் படுத்திருப்பதாகத் தெளிந்தாள். அவளுக்கெதிரே தோன்றிய அழல் அடுப்புறையிலே எரிந்து கொண்டிருந்தது என்பது புலப்பட்டது. அப்பொழுது இரவு நேரம். மின் விளக்குகள் இல்லாத காலம்; மெழுகுத் திரி விளக்கு ஒன்று கைம்மேடையின் மேல் எரிந்து கொண்டிருந்தது; அவளது கால் மாட்டில் காளி கவலை தேங்கிய முகத்தோடு நின்று கொண்டிருந்தாள். தலைப் புறத்தில் இடப்பட்டிருந்த நாற்காலியின் மீது உட்கார்ந்திருந்த ஒரு பெரியவர் சற்றுக்குனிந்து பூங்கோதையைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

பூங்கோதையின் உள்ளத்தில் தனக்கும் பாதுகாப்பு உண்டு போலும் என்கிற ஆறுதல் தோன்றியது; காரணம், செங்கமலத்தம்மையாரின் தனியாட்சிக்கு உட்படாத ஒரு புதியவர் அவளருகே தோற்றம் அளித்ததுதான். அப்பெரியவரைப் பூங்கோதைக்கு முன்னரே தெரியும். அவருடைய பெயர் கருப்பன் செட்டியார். குயிற்பொதும்பரில் எண்ணெய் வாணிகம் செய்து கொண்டு வந்தார். துணைத் தொழிலாக மருத்துவமும் செய்து வந்தார்.

(தொடரும்)

குறள்நெறி : பங்குனி 19, 1995 / 01.04.1964