தமிழ்க்கட்டாயக்கல்வி குறித்த வாகை(வின்) தொலைக்காட்சி காணுரை இணைப்பு
தமிழே கல்வி மொழியாக, வாகை (வின்) தொலைக்காட்சியின் கருத்தாக்கப் பணி!
தமிழ்நாட்டில் அனைவரும் தமிழ் பயில வேண்டும் என்பதற்காகப் பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர், 2006 ஆம் ஆண்டு முதல்வகுப்பிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் அடுத்தடுத்த வகுப்பு என்ற முறையில் தமிழ்மொழிப்பாடம் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்பெற்ற சட்டப்படியான செயல்பாடு இது. இதற்கிணங்க இவ்வாண்டு 9 ஆம் வகுப்பு பயில்பவர்கள் தமிழைப் பயில்வார்கள். அடுத்து 10 ஆம் வகுப்பு பயிலும் பொழுது, இவற்றின் தொடர்ச்சியாகத் தமிழைப் பயில்வார்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதல் பாடப்பிரிவாகத் தமிழ்த்தேர்வு மட்டுமே நடத்தப் பெறும். எனவே, இவ்வாறு தமிழ் படிக்காதவர்கள் அடுத்த ஆண்டு தேர்வு எழுத முடியாது என்பதைப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது. உடனே, இதுவரை 2006 ஆம் ஆண்டுமுதல் சட்டத்தையும் பெற்றோர்களையும் மாணாக்கர்களையும் ஏமாற்றி வரும் தமிழைக் கற்பிக்காத ஆங்கிலவழிப்பள்ளியினர் வழக்கு தொடுத்துள்ளனர். தமிழ், கட்டாயப்பாடமொழியாக இருக்க வேண்டும் என விழையும் வாகை(வின்) தொலைக்காட்சியும் இது குறித்த கருத்தாக்கத்தை மக்களிடம் ஏற்படத்தித்தமிழ்த் தொண்டாற்றியுள்ளது பாராட்டிற்குரியது.
வைகாசி 27, 2045 / சூன் 10, 2014 அன்று இரவு, ‘உங்கள் களம்’ என்னும் தலைப்பில் அகரமுதல இதழின் ஆசிரியரும் தமிழ்க்காப்புக் கழகத்தின் தலைவருமான இலக்குவனார் திருவள்ளுவன் – கேட்பாளர் குருபாரதி நேரலை உரைநடைபெற்றது. நேரலையில் பங்கேற்ற மக்களும் தமிழ்க்கல்விக்கு ஆதரவான கருத்துகளையே தெரிவித்தனர்.
இதேபோல் இத் தொலைக்காட்சி மறுநாள் வைகாசி 28, 2045 / சூன் 11, 2014 அன்று இரவு தொடுப்பாளர்நிசந்தன் நடத்தும் ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சி மூலமாகத் தமிழ்த்தேவையை வலியுறுத்தும் நிகழ்ச்சியை நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் பாரதமாதா பள்ளித் தாளாளரும் பாசக கல்வி அணியின் துணைத்தவைருமான திரு மோகன் தமிழ் தேவையில்லை என வாதிட்டார். இத்தகயை கருத்துடையோரையும் நிலமகள் சுமப்பது என்ன கொடுமையோ! நியூட்டன்அறிவியல் மன்றத்தின் இயக்குநர்திரு இளங்கோவும் திரு இலக்குவனார் திருவள்ளுவனும், தமிழ்க்கல்வி தேவை குறித்து வலியுறுத்தினர். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் வேண்டா என்பவர்கள் வேறு நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றும் இதுவரை சட்டமீறலில் ஈடுபட்டுத் தமிழைப் பயிற்றுவிக்காத பள்ளிகள் இசைவு நீக்கப்பட வேண்டும் என்றும் பொறுப்பாளர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் இதுவரை இத்தகைய பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இதுவரை தமிழ் பயிலா மாணாக்கர்களுக்கு விதி விலக்கு அளிக்காமல் புதியப் பாடத்திட்டம் அமைத்து, தமிழ் கற்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். நிசந்தன் சிறப்பாகக் கருத்துகளைத் தொகுத்தும் இணைத்தும் வாதத்தைச் சிறப்பாக நடத்தினார்.
வாகை(வின்) தொலைக்காட்சியில் பணியாற்றிக் கொண்டு இளைய ஊடகவியலார்க்குப் பயிற்சி வகுப்புபோல் தலையங்க விமர்சனம் என்னும் அமைப்பை திரு சோதி இராமலிங்கம் நடத்தி வருகிறார். இதன்78 ஆவது அமர்வு பிற்படுத்தப்பட்டோர் குரல் ஆங்கிலப் பகுதிஆசிரியர் திரு. வேயுறுதோளிபங்கன் அவர்கள் தலைமையில் ஆனி 1, 2045 / சூன் 15, 2014 அன்று மாலைநடைபெற்றது.
தமிழ்நாடு மின்பொறியாளர் சங்கத்தலைவர்,திரு.காந்தி அவர்கள் திறனாய்வுரை வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளிகளில் கட்டாயத் தமிழ் குறித்து இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரையாற்றினார்.
தமிழின் கட்டாயத் தேவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் வாகை(வின்) தொலைக்காட்சிக்குப் பாராட்டுகள்.
உங்கள் களம் (wintv ungalkalam 10th june) காணுரை காணப் பின்வரும் இணைப்பிடத்தில் காண்க:
http://www.youtube.com/watch?v=uTXplynZA1g
Leave a Reply