(உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 2/5 தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

பின்னிணைப்பு

உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்

3/5

  • 5. விபுலானந்த அடிகளார்

ஐந்தாம் கட்டுரை விபுலானந்த அடிகளார் குறித்தது. “யாழ்நூல் கண்ட விபுலானந்தர் தமிழிசைக்கு மட்டுமின்றி, தமிழியலின் பல்வேறு துறைகளுக்கும் பெரும்பங்களிப்பைச் செய்துள்ளார். “படைப்பிலக்கியக்காரராக, திறனாய்வாளராக, மொழியியல் வல்லுநராக, கலைவரலாற்று ஆசிரியராக, கவிஞராக, தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்த்தவராக, தமிழினப் பாதுகாவலராக, இதழியலாளராக, அறிவியல், சமயம், தத்துவம், வரலாறு ஆகிய துறைகளில் புததொளி தந்தவராக, அவர் செய்துள்ள பணி அரியது. வேறு இந்திய அறிஞர் யாரும் இவ்வளவு துறைகளில் தடம் பதித்ததாகத் தெரியவில்லை. இஃது உயர்வு நவிற்சி அன்றென்பதை அவருடைய தமிழ், ஆங்கில நூல்களைப் படிப்பார் உணரமுடியும்.” என ஆசிரியர் குறித்துள்ளார்.

  • 6. தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்

ஆறாம் கட்டுரை தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் குறித்தது.

“இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு நூல்கள் மூலமாகவும் சொற்பொழிவுகள் மூலமாகவும் அரிய பங்களிப்பைச் செய்தவர் திரு.வி.க. எப்பொருள் பற்றிய கட்டுரையாயினும் அதனைப் படைப்பிலக்கியத் தரத்திற்கு உயர்த்தியவர். அவரது வாழ்க்கைக் குறிப்புகள் தன்வரலாறுகளில் தலையாய ஒன்றாகும். முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, தமிழ்க்கலை, தமிழ்நாடும் நம்மாழ்வாரும், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் போன்ற நூல்களில் எல்லாம் தமிழ்மொழியின் சொல்வளத்தைத் தம் உரைநடையால் யாவரும் அறிய எடுத்துக் காட்டிய பெருமை அவருக்கு உண்டு. தமிழ்ச் செவ்விலக்கியங்களை வியந்து வியந்து பாராட்டிய திரு.வி.க., தமிழுக்கும் இயற்கைக்கும் உள்ள நெடுங்கால, நெருக்கமான உறவைமீண்டும் மீண்டும் புலப்படுத்துவது அவரது வாழ்க்கை நோக்கின் சிறப்புக் கூறாகும்.” என்கிறார் ஆசிரியர்.

  • 7. அறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம்

ஏழாவதாக அறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் குறித்து அளித்துள்ளார்.

“மேலைநாட்டார் இலக்கியத் திறனாய்வு என்று கருதுகின்ற துறை தமிழில் தெ.பொ.மீ.யின் தோற்றத்திற்கு முன் அரைகுறையான வளர்ச்சிகூட அடைந்திருந்ததாகச் சொல்ல முடியாது. அவர் தம்முடைய நூல்கள், கட்டுரைகள் மூலமாக இவ்விலக்கிய வகையின் சீரான வளர்ச்சிக்கு உரமிட்டார். தெ. பொ.மீ.யின் கூர்த்த மதியும் இலக்கியம், வரலாறு, மொழியியல், தத்துவம், சமயம் ஆகிய பலதுறையறிவும் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், சமற்கிருதம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய பன்மொழிப் புலமையும் இதற்குப் பெரிதும் துணை செய்தன. தொல்காப்பியத்திலிருந்து தற்காலத் தமிழ்ப் புதினம் வரை குறிப்பிடத்தக்க எல்லா நூல்கள் பற்றியும் இலக்கியச் சிக்கல்கள் குறித்தும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் தன் கருத்துகளைத் தெளிவாக்கினார். தமிழ்மொழி வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய இரு நூல்களும் தமிழ் இலக்கியச் செல்வாக்கைத் தமிழர்க்கும் வெளிநாட்டார்க்கும் தெளிவாகப் புலப்படுத்துபவை.”

  • 8. போர் மறவர் சி.இலக்குவனார்

எட்டாவதாகப் பேராசிரியர் சி.இலக்குவனார் குறித்துக் கட்டுரை அளித்துள்ளார்.

“இலக்குவனார் பேராசிரியராகவும் திறனாய்வாளராகவும் போர் மறவராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் கவிஞராகவும் சொற்பொழிவாளராகவும் இதழியலாளராகவும் மொழியியல் வல்லுநராகவும் நிறுவன அமைப்பாளராகவும் தமிழ்வளர்ச்சிக்குச் செய்துள்ள பங்களிப்பு அரியது. அவர் காலத்துப் பிற தமிழறிஞர்களைப் போலல்லாமல், நூல்களை யெழுதுவதோடு நின்றுவிடாமல் களத்தில் இறங்கித் தமிழுக்காகப் போராடி, இருமுறை சிறை செல்லவும் துணிந்தவர் அவர். கொண்ட கொள்கைக்காகப் பதவியிழந்தபோதும் வறுமையில் வாடிய போதும் தன்னலம் கருதாது தமிழ்ப்பயிர்க்கு நாளும் தண்ணீர் ஊற்றியதோடு அவ்வப்போது தமிழின் உட்பகைவர்களாலும் புறப்பகைவர்களாலும் விளைந்த களைகளை யெடுக்கவும் அவர் தயங்கவில்லை. “துறைதோறும் துறைதோறும் தமிழுக்குத் துடித்தெழுந்தே தொண்டு செய்த”தோடு, “கெடலெங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி”யும் செய்தவர். என்கிறார் ஆசிரியர்.

இலக்குவனாரின் பன்முக ஆளுமையைப் பாராட்டி அறிஞர்கள் நூற்றுவருக்கு மேல்  உரைத்துள்ளனர். அவற்றுள் திரு.வி.க., அண்ணா, சுத்தானந்த பாரதியார் முதலான பதின்மரின் பாராட்டுரைகள ஆசிரியர் தந்துள்ளார். தமிழினம் இன்று அடைந்துள்ள நிலைக்கு வருந்தியும் உண்மையான தமிழர்களை அடையானம் காட்டிப் போற்றியும் இலக்குவனார் எழுதியுள்ள கவிதைகளை ஆசிரியர் நமக்குத் தந்துள்ளார். தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு வாயிலாகவும் தொல்காப்பிய ஆராய்ச்சி நூல் வாயிலாகவும் பல்வேறு கட்டுரைகள் மூலமாகவும் இலக்குவனார் தொல்காப்பியத்தின் நுட்பங்களையும் உண்மைகளையும் எடுத்தோதுவதை ஆசிரியர் நமக்கு அளித்துள்ளார்.

“பழந்தமிழ் நூலில் வடசொற்கள் பல உள்ளன என்பது உள்நோக்குடன் செய்யப்பட்ட பரப்புரை ஆகும். அவற்றைக் காலுடுவல் கூறியுள்ள மொழியியல் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆராய்வோமானால் அவையெல்லாம் தமிழ்ச்சொல்லே என்பது புலப்படும்.”

“தொல்காப்பியம் மிகப் பழங்காலத்தே இயற்றப்பட்டதாயினும் அதன் அணுகுமுறையும் பொருண்மையும்  இக்காலத்திற்கும் பொருந்துபவை.”

“தொல்காப்பிய நூற்பாக்கள் சிலவற்றை விளக்கும்போது வடநூல்களை நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டுவது வருந்துவதற்குரியதாகும்.”

“அரிசுட்டாடில் கவிதையியல்(Poetics) என்ற நூலை எழுதுவதற்கும் பல நூற்றாண்டுகள் முன்னமேயே தமிழ்ப்புலவர்கள் கவிதைபற்றி உலக மொழிகளுக்கெல்லாம் பொருந்தும் கோட்பாடுகளைத் தெளிவாக வகுத்திந்தனர்.”

“தொல்காப்பியர் ‘என்ப’, ‘என்மனார்’ என்று சுட்டும் இலக்கண வல்லுநர்களெல்லாம் அவர் காலத்திற்கு முன் வாழ்ந்த தமிழர்களே”

என்பன போன்ற இலக்குவனாரின் ஆய்வு முடிவுகளை ஆசிரியர் நமக்கு எடுத்துரைக்கின்றார்.

‘இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் – சங்கக்காலம்’ நூல் மூலம் சங்க இலக்கிய வாழ்வியல் சிறப்புகளை இலக்குவனார் நமக்கு உணர்த்தியுள்ளார். ‘சங்க இலக்கியம்’ என்னும் வார  இதழ் மூலம், சங்கப்பாடல்கள் பலவற்றிற்கும் எளிய விளக்கங்கள் தந்துள்ளார். இவற்றுள் சொல்லாராய்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன. சங்கப்பாடல்களில் ‘தமிழ்’ என்னும் சொல் இடம் பெறுவதால், அஃது அழகிய தமிழ்ச்சொல்லே என்றும் ‘திராவிட’ என்னும் சொல்லில் இருந்து பெறப்பட்டது என்பது தவறான கருத்து என்றும் ‘திராவிட’ என்னும் சொல் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே முதலில் தோன்றியதென்றும் இலக்குவனார் தெளிவுறுத்துவதையும் ஆசிரியர் குறிக்கின்றார்.

“திருக்குறள் பற்றி அமைச்சர் யார், எல்லாரும் இந்நாட்டு மன்னர், வள்ளுவர் வகுத்த அரசியல், வள்ளுவர் கண்ட இல்லறம், திருக்குறள் எளிய பொழிப்புரை போன்ற நூல்களை எழுதியதோடு குறள்நெறி என்ற இதழையும் நடத்திக் குறளின் பெருமையைத் தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் எடுத்துச் சென்றார். திருக்குறள் பற்றி அவர் வாழ்நாள் முழுவதும் நிகழ்த்திய உரைகளும் பலவாகும்” என ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

தொன்மங்களை வள்ளுவர் சுட்டுவதால், அவற்றை நம்பினார் என்று முடிவெடுத்தல் கூடாதென்றும் தொன்மங்களுக்குரிய சமயத்துடன் இணைத்துப் பேசுவது தவறு என்றும் இலக்குவனார் விளக்கங்களுடன்  தெரிவிப்பன சரியே என்றும் ஆசிரியர் கூறுகிறார்.

தமிழ் மரபிலக்கணத்தில் ஆழங்கால் பட்டவராதலாலும் மேலை மொழியியல் பயின்றவராதலாலும் இலக்குவனார் ‘பழந்தமிழ்’ என்ற நூலில் தமிழ்மொழியின் சிறப்புக் கூறுகளையெல்லாம் சிறப்பாக அடையாளம் காட்டுவதாக ஆசிரியர் கூறுகின்றார்.

வடமொழி தமிழிலிருந்து எச்சொற்களையும் பெறவில்லை யென்ற பழைய குருட்டு நம்பிக்கையப் புறக்கணித்து இலக்குவனார் பல தமிழ்ச்சொற்கள் வடமொழிக்குச் சென்றுள்ளதைப் பட்டியலிட்டுத் தருவதை நமக்கு ஆசிரியர் உணர்த்துகிறார்.

தூய ஆங்கிலமொழி இயக்கத்தை எடுத்துக்காட்டாகக் கூறி இலக்குவனார் தனித்தமிழ் இயக்கத்தை எதிர்ப்போருக்குத் தக்க விடையிறுத்துள்ளதாக ஆசிரியர் சுட்டுகிறார்.

இலக்குவனார் தமிழின் எதிர்காலம் குறித்து மனம் நொந்து கூறுவது தமிழ் ஆர்வலர் யாவரும் கருத்தில் கொள்ள வேண்டிய எண்ணமாகும் எனப் பின்வரும் மேற்கோளுடன் கட்டுரையை முடிக்கிறார் ஆசிரியர். “வடமொழியை வழிபாட்டு மொழியாகவும் தெலுங்கை இசைமொழியாகவும் இந்தியை நாட்டு மொழியாகவும் ஆங்கிலத்தைப் பன்னாட்டு மொழியாகவும் ஏற்றுக் கொண்டு, தமிழுக்கு வீட்டுமொழியாகக்கூட இடம்தரத் தமிழர் விரும்பாராயின் தமிழின் தலைவிதி என்னாகுமோ” என்று இலக்குவனார் கேட்கும் கேள்வி, “விதியே விதியே தமிழச்சாதியை என் செய நினைத்தாய் “எனும் பாரதியின் அச்சத்தை நினைவூட்டும்.

  • 9. அறிஞர் தனிநாயக அடிகள்

ஒன்பதாவது கட்டுரை அறிஞர் தனிநாயக அடிகள் குறித்தது.

“தனிநாயக அடிகள் உலகின் மூத்த தமிழ்க்குடிமகனாக, தமிழ்ப்பண்பாட்டுத் தூதராக, கல்விச் சிந்தனையாளராக, ஆய்விதழ்களின் ஆசிரியராக, தரமான தமிழியல் கட்டுரைகளின் தொகுப்பாளராக, கல்விச் சிந்தனையாளராக, அருந்தமிழ் நூல்களின் பதிப்பாசிரியராக, தென்கிழக்காசியப் பண்பாட்டுக் காப்பாளராக, புலம் பெயர்ந்த தமிழர்களின் உயிர்த்தோழனாக, தமிழினப்போராளியாக, தமிழிலக்கிய வரலாற்றில் நடந்த மோசடிகளை அம்பலப்படுத்தியவராக, தமிழாய்வு மன்றங்களின் நிறுவனராக, தனித்தமிழ் ஆர்வலராகப் பார்க்கும் வகையில் அவரது பன்முக ஆளுமை அமைந்துள்ளது” என்கிறார் ஆசிரியர்.

இலக்குவனார் திருவள்ளுவன்

உயர்தனிச் செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்

ப.மருதநாயகம்

செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை 600 100

விலை உரூபாய் 500/-