(‘புதிய புரட்சிக்கவி’க்குப் பழ.நெடுமாறன் அணிந்துரை தொடர்ச்சி)

‘புதிய புரட்சிக்கவி’தமிழர் நெஞ்சில் எழுச்சியாய் உலவட்டும்!

பாவேந்தரின் புரட்சிக்கவி குறுங்காப்பியம் வெளிவந்து எழுபத்திரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

          இந்த நூல் வெளிவந்த அந்த ஆண்டில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் பாரதிதாசன் ஒர் செந்தமிழ்ப் புரட்சிக்கவி எனத் தந்தை  பெரியார் புகழாரம் சூட்டி மகிழ்ந்தார். 1946இல்  பேரறிஞர் அண்ணா நடத்திய நிதியளிப்பு விழாவில் புரட்சிக்கவிஞர் எனப் பாராட்டிப் பொற்கிழி வழங்கிப் போற்றினார். சிங்கப்பூர் நகரில் முதன் முதலில் புரட்சிக்கவி மேடை நாடகமாக அரங்கேறியது. அதன்பின்னர். டி.கே.எசு நாடக மன்றத்தினர் பில்கணன் என்ற பெயரில் நாடகத்தை அரங்கேற்றினர். இதனைத் தொடர்ந்து திருச்சி வானொலியில் ஏ.எசு.ஏ. சாமி பில்கணன் நாடகத்தை ஒலிபரப்பினார். பல்வேறு கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் விழாக்களிலும் பாரதிதாசன்  ஆக்கியுள்ள குறுங்காப்பிய வடிவத்தில் ஒரு சிறு மாற்றமின்றி அரங்கேற்றப்பட்டது.

          எனது வானொலிப் பணிக்காலத்தில் இதே வடிவங்களில் நாடகமாக அரங்கேற்றினேன். புகழ் பெற்ற நாட்டியக்கலைஞர்களான நடராசன்  சகுந்தலா இணையர் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் நிதி உதவியுடன் நம் பண்டைத் தமிழ்க்கூத்து முறையில் சில மாற்றங்களோடு புரட்சிக்கவி நாட்டிய நாடக வடிவாகி அரங்கேற்றம் நடந்தது. இது சென்னைத் தொலைக் காட்சியிலும் ஒளிபரப்பாகிறது. புதுச்சேரியில் ஒரு முறை உரைவடிவ நாடகமாகவும். பின்னொரு முறை நாட்டிய நாடகமாகவும் அரங்கேறின.

          இத்தனைக்குப் பின்னர்  பட்டுக்கோட்டை புலவர் சா. பன்னீர் செல்வம் அவர்கள், விரிவாக்கம் செய்து  புதிய வடிவில் ஒரு நூலை இயற்றியிருக்கிறார். என் பார்வைக்கு வந்த நூல் வடிவத்தைப் படித்து முடித்து போது என்னுள் எழுந்த வினா ஒன்று. இந்த வடிவத்தில் இயற்றி வெளியிடத்  தோன்றியது எக்காரணம் பற்றியது?  உலகெங்கும் வாழும் பலகோடித் தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று விட்ட இக்காலத்தில் பாரதிதாசனின் புரட்சிக்கவி இப்படி ஒரு முகம் காட்டவேண்டுமா?

          இந்த வினாவுக்கு நானே கண்டுணர்ந்த விடை, புரட்சிக்கவி  நூலில்  புலவர் பன்னீர் செல்வம் ஆர்வம் மிக்குடையவராக அதனுள் ஆழ்ந்து போனவராக மாறியதும் தமக்கே உரிய பா நடையில் இயற்றும் ஆர்வம் மிகுந்திருக்கலாம். அல்லது பாரதிதாசனின் புரட்சிக்கவி குறுங்காப்பியத்திலே கடவுள்  மறுப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு போன்ற பகுத்தறிவு இயக்கக் கொள்கைகள் விரவி இல்லையே என்பதைப் புலவர் உணர்ந்திருக்கலாம்.

          எல்லாவற்றிற்கும் முதன்மையாக மறைந்த  திராவிட இயக்கத்தளபதி மன்னை நாராயணசாமி அவர்கள் புரட்சிக்கவி நூலை மனப்பாடமாகச் சொல்லிக் காட்டி தமிழ் உணர்வை  ஊட்டியதன்  நல்விளைச்சலாக இந்தப் புலவருக்குள் இப்படி ஒர் எண்ணம் தலைதூக்கியிருக்க வாய்ப்பு நிறையவே உண்டு.

          பாரதிதாசனின் புரட்சிக்கவியைப் பன்முறை படித்து நெஞ்சமெல்லாம் பரவி நிலைத்து விட்டதால் அதனைப் பரப்பும் ஒருவகையாக இந்த விரிவாக்க முயற்சி முளைத்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏன் எனில் பாரதிதாசனின் புரட்சிக்கவியே வடமொழி நூலின் ஒரு தழுவல்  என்று கூறப்பட்டுள்ளது. பில்கணியம் என்ற காசுமீர்க் காப்பியத்தின் வடமொழி ஆக்கத்தை யாழ்ப்பாணத்துப் புலோவியூர் மகாவித்துவான் வ.கணபதிப்பிள்ளை உரைநடையில் அளித்துள்ளார். பதிப்பு 1928 ஆம் ஆண்டு. இதற்கு முன் ஒரு பதிப்பும் வந்துள்ளது.

          பில்கணியம் அல்லது பில்கண சரித்திரம் என்னும் கிரந்தம் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பில்கண கவியினாலே தனது  விருத்தாந்தத்தைக் கூறுவான் வேண்டி இயற்றப்பட்டது”. என்பதாகக் கணபதிப்பிள்ளை தமது முகவுரையில் குறிப்பிடுகிறார். இந்த உரைநடையைப் படிக்கையில் நமக்குக் கிடைக்கும் விவரங்கள்.

          பாஞ்சாலம் என்பதான ஒரு தேசம். அதில்  மதனாபிராம மகாராஜன் அரசன். அரசி மந்தார மாலை. மகள் யாமினி பூரண திலகை இவளுக்கு சாகித்தியம் கற்பிக்கும் முயற்சி. பில் கணகவி நியமனம். யாமினுக்கும் பில்கணனுக்குமிடையே காதல் மலர்கிறது. இதன் பின்னர் பாரதிதாசனின் புரட்சிக்கவி அமைப்பிலேயே தொடர்கிறது. ஆயின், பில்கணன்,

          காமரசம் மீறியையோ காயமெலாஞ் சோருகின்றேன்.

          வாம மணி மேகலையே வந்ததர பான மெனும்

          சோமசுதை யீந்தேயென் துக்க  மெலாம் போக்குவையேல்

          நாமமுறு நின்றனுக்கு நாணொருவி நீயிரங்கே

என்றெல்லாம் கவிஞன் தனது காமப்பசியை வலியுறுத்திப் பாடுவதே நிறைந்துள்ளது இந்தப் பில்கணியம்.

          தன்மகளுக்காகவும். மதியூக மந்திரியும், மக்களும் வேண்டுதலுக்கு ஓர் இளவரசி தேவை என்பதற்காகவும் அரசன் மன மிரங்கித் திருமணம்  நடத்துவிக்கிறான். இதன்படிப் பார்க்குமிடத்து வட மொழிக் காப்பியத்தின் அடியொற்றிப் பாரதிதாசனார் தமது காப்பியத்தை நடத்திச் சென்றிருந்தால்  அது புரட்சிக்கவியாக உருவாகியிருக்க முடியாது.

          தமிழின் மேன்மையை வலியுறுத்தவும். தமிழ்க் கவிஞனின் கருத்துக்குள்ள வலிமையை  எடுத்துக் காட்டவும். உழைப்பாளர் திறத்தைச் சித்தரிக்கவும் நால் வருணப் பாகுபாட்டை எடுத்துக்காட்டவுமான கொள்கை விளக்கக் காவியம் புரட்சிக்கவி.

          இந்நிலையில், புலவர் பன்னீர் செல்வம் இயற்றிய இப்படைப்பில் அவருடைய பகுத்தறிவியக்கக் கோட்பாடுகள். நாடக உத்திகள் பாட்டுத்திறம் மிக நன்றாகவே வெளிப்படுவது கண்டு மகிழ்கிறேன்.

          பாரதிதாசன் தழுவலின் மையக்கருத்துகள் சிதைந்து விடாமல் தமது விரிவாக்கத்தை  முடித்திருப்பது மகிழ்வூட்டுகிறது.

          “தமிழறிந்ததால் தார்வேந்தன் எனை அழைத்தான் தமிழ் என்னாவி அழிவதற்குக் காரணமா யிருந்ததென்று சமுதாயம் நினைத்திடுமோ”

இவைதாம் புரட்சிக்கவியின் உயிர்மூச்சு இதற்கென நாம் ஆற்றும் தொண்டு என்னவாம்?

இக்கேள்விக்கு விடையாகிறது இந்நூல். புலவரின் திறன், அவரின் பல்வகைப் பாவினங்களில் நன்கு வெளிப்படுத்தும் சிறப்பெனலாம். பரட்சிக்கவிஞரின் பாக்களை அரங்கிலே பாடி மன்னையார் மூட்டிய தமிழ் உணர்வுத்தீ புலவர் பன்னீர் செல்வம் வழியில் தமிழர் நெஞ்சில் எழுச்சியாய் உலவட்டும்.

என் வாழ்த்து

                                                                                      மன்னர் மன்னன்

                                                                                      06.02.2010