உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 5/5- ப. மருதநாயகம்
(உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 4/5 தொடர்ச்சி)
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம்
பின்னிணைப்பு
உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்
5/5
- 15. அகழ்வாய்வாளர்கள்
நிறைவாகப் பதினைந்தாவதாக அகழ்வாய்வாளர்கள் குறித்த கட்டுரையை அளித்துள்ளார்.
“ஓர் இனத்தின் தொன்மைபற்றியும் பண்பாட்டின் தனிச்சிறப்பு பற்றியும் பேசுவதும் எழுதுவதும் தேவையா? அவ்வாறு செய்வது பிற இனங்களுக்கு அதன்பால் வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் வளர வழி செய்வதாகாதா? பழம் சமுதாய, மொழி, இலக்கிய, பண்பாட்டு வரலாற்றைக் கிளறி உண்மை யறிய முயல்வதால் ஏதேனும் நன்மை உண்டா?” எனத் தொன்மை வரலாற்றுச் சிறப்பு இல்லாதவர்களும் பொய்யான வரலாற்றைப் பரப்பி வருபவர்களும் கூறி வருகிறார்கள்.
திருவிழாக் கூட்டத்தில் தவறவிட்ட குழந்தையை அலறித் துடித்துத் தேடும் தாயின் செயலுடன் ஒப்பிட்டு விவேகானந்தர், அதே பதைபதைப்புடன் இந்தியர் தம் தொல்வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய முனைந்து செயலபட வேண்டும் என்று தெரிவித்ததன்படி நாம் இருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். உலகப்பண்பாடடிற்குத் தமிழரின் பங்களிப்பு, தமிழ்ப்பண்பாட்டின் தொன்மை, ஆகியவைபற்றி விவேகானந்தர் கூறியுள்ளதை நம்மவர் நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார் ஆகிரியர்.
இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வு வல்லுநர் கிரகாம் ஆன்காக்கு, அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகத்தினும் தொன்மையானது பூம்புகார் நாகரிகம் எனக் கண்டறிந்தவை;
சிந்துவெளிப்பண்பாடு ஆரியப்பண்பாடே என ஆதாரமில்லாமல் தவறான கருத்துகளை அறைகூவும் ஆரிய சமாசத்தை உருவாக்கிய தயானந்த சரசுவதி போன்றோரின் பொய்யுரைகளை மறுக்கும் வகையில் அகழ்வாராய்வாளர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் கருத்துகள்;
வரலாற்றுப் பேராசிரியர் உரோமிலா தாப்பர்(Romila Thapar) மாடுமேய்த்து வந்த வேதகால மக்கள் நகரப்பண்பாடு அறியாதவர்கள், சிந்துவெளிப்பண்பாடு கல்வியறிவு உடைய இனத்தின் நகரப் பண்பாடு எனக் கூறிய கருத்துகள்;
முதலான பல ஆய்வுரைகள் அகழ்வாராய்வாளர்களால் தமிழின் செம்மொழிச் சிறப்பையும் தொன்மையையும் உலகிற்கு உணர்த்துவன.
4500 ஆண்டுப் பழமையுடைய அரியானாவின் இராக்கிகரியில் கிடைத்த எலும்புக்கூடுகளின் மரபணு மாதிரிகள், சிந்து வெளிப்பண்பாடு வேதகாலத்திற்கு முந்தையது என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.
ஆதி வேதங்கள் சிந்துவெளிநகரங்கள் அழிந்து வெகுகாலத்திற்குப் பின் தோற்றம் பெற்றவை; சிந்துவெளிமக்கள் பேசியது மூலத்திராவிடமொழி;
…….
பின்லாந்து அறிஞர் அசுக்கோ பார்ப்போலா(Asko Parpola) சிந்துவெளிப்பண்பாடு பழந்தமிழர் பண்பாடே என நிறுவிய கருத்துகள்; தமிழரின் நாகரிகம் மிகமிகப் பழமை வாய்ந்தது எனப் பலவகைகளில் ஆதாரங்களுடன் நிறுவிய ஈராசு பாதிரியார் கருத்துகள்;
மனிதச்சாதியாரின் தொட்டில் தென்னிந்தியாவாக இருக்கலாம் எனக் கூறும் இயோவான் எவன்சு(Sir John Evans) ஆதாரங்கள்;
என அகழ்வாராய்வாளர்கள் மூலம் வெளிவந்துள்ள உயர்தனிச்செம்மொழியாம் தமிழின் சிறப்புகளை நமக்கு ஆசிரியர் விளக்கியுள்ளார்.
நடுநிலையற்ற பிராமணர்கள் தங்கள் இனத்திற்கு இல்லாத உயர்வைப் புனைந்து கூறுவதையும் தவறான தொன்மை வரலாற்றை இட்டுக்கட்டிக் கூறுவதையும் காலங்காலமாக வழக்கமாகக்கொண்டுள்ளார்கள். பின் அவை பொய்கள் என அம்பலப்பட்டுப்போனாலும் கவலைப்படாமல் பொய்களையே திரும்பத்திரும்பக் கூறி வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒன்று வருமாறு
“பழம் இந்திய வரலாறுபற்றி நடந்துவரும் உள்நாட்டுப்போரில் ஆரிய இனச்சார்புடையோரால் பொய்யும் புரட்டுமு் அவர்கள் கையிலுள்ள ஊடகவழியாகப் பரப்பப்படலாமென்பதை இராக்கிகிர் அகழ்வாய்பு பற்றி இந்தியா இன்று(India Today – sep.10.2018) இதழில் கட்டுரை எழுதிய ஆசிரியர் குறிப்பிடுவார். ஓர் இந்தி நாளேடானது நீரசுபாய் மரபணு ஆய்வால் வடஇந்தியப் பார்ப்பனரே சிந்துவெளிப்பண்பாட்டின் மரபினர் என்றும் இந்தியாவே இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் தாயகமென்றும் ஒரு நேர்காணலில் கூறியதாக சனவரி 2018இல் ஒரு கட்டுரையில் எழுதியதை அவர் அம்பலப்படுத்துவார்.இச்செய்தி தாவீதுவெசலாவுசுக்கி (David Wesolowski) என்னும் அறிஞரிடம் தெரிவிக்கப்பட்டபோது அவர் அருவருப்பூட்டும் பொய் (utter crud) என்று விடையளித்ததாகவும் இராக்கிகரி கட்டுரைஆசிரியர் பதிவு செய்துள்ளார்.”
சிந்துவெளிப்பண்பாட்டு ஆராய்ச்சி அறிஞர் அசுகோ பார்ப்போலா (Asko Parpola), சிந்துவெளிப்பண்பாடு, பழந்தமிழர் பண்பாடே என்பதையும் சிந்துவெளி எழுத்து திராவிட மொழிக்குடும்பத்து மூத்த மொழியான தமிழுக்கே உரியதென்பதையும் அசைக்க முடியாத உறுதியான ஐயத்திற்கிடமில்லாத அகழாய்வுச் சான்றுகள் தந்து நிறுவியுள்ளதை ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார்.
வடமேற்குப்பகுதியில் உள்ள இந்தோ ஆரிய மொழிகளிலும் இரிக்கு வேதத்திலும் உள்ள தமிழ்ச்சொற்களையும், தொல்திராவிடமொழிக்குடும்பத்திலிருந்து எடுக்கப்பட்ட சொற்களையும் அறிஞர்கள் பலரும் எடுத்துரைத்துள்ளதையும் விளக்கியுள்ளார். தமிழின் செவ்வியல் தன்மைகளை உணர்த்தும் பண்புகளை அகழ்வாய்வாளர்கள் தெரிவிக்கும் செய்திகள் பதின்மூன்றையும் தொகுத்து அளித்துள்ளார்.
மொகஞ்சதாரோ, அரப்பா, சாஞ்சுதாரோ ஆகியவற்றின் நாகரிகச் சிறப்புகள், சிந்துவெளிப்பண்பாட்டின் தொடர்ச்சி இன்னும் தமிழ்நாட்டில் உயிரோடிருக்கின்றன என்று ஈராசு பாதிரியார் முதலானவர்கள் கூறுவதையும் ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.
அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டறிந்தவை யாவும் தமிழை உயர்தனிச்செம்மொழியாக உலகிற்கு அறிவுறுத்தும் முன்மொழிவுகளாக அமைந்துள்ளன.
உயர்தனிச் செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் நூல் மூலம், வெவ்வேறு காலங்களில் ஆராய்ச்சியறிஞர்கள் செந்தமிழ்ச்சிறப்பை உலகிற்குப் பறைசாற்றி வந்ததை ஆசிரியர் நன்கு விளக்கியுள்ளார்.
ஒவ்வொருவர் கைகளிலும் தவழவேண்டிய நூல்
தமிழ்க்குடும்ப மொழிகளின் தனித்தன்மையை வெளிப்படுத்தியவர்கள், மொழிபெயர்ப்பு மூலம் தமிழ்ச் செவ்விலக்கியங்களைப் பரப்பியவர்கள் தமிழின் தனித்தியங்கும் ஆற்றலையும் சொல்வளத்தையும் எடுத்துரைத்தவர்கள், பொய்யுரை மூலம் நடுவுநிலையின்றி சமற்கிருதத்தை உய்த்தித் தமிழைத் தாழ்த்தியவர்களின் முகத்திரையைக் கிழித்தவர்கள், சமற்கிருத இலக்கணத்தைக் காட்டிலும் தமிழ்மொழி இலக்கணம் எவ்வாறெல்லாம் சிறந்து விளங்குகின்றது என்பதை ஆராய்ந்து தெரிவித்தவர்கள், சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுகளினின்றும் தமிழை நீக்கிட முயற்சிகள் மேற்கொண்டபொழுது அவற்றிற்கு எதிராகப் போராடித் தமிழை நிலைக்க வைத்தவர்கள், பிற மொழிக்கலப்பும் மாற்றமும் தேவை யெனப் பிதற்றுவோர்க்குத் தக்க மறுமொழி தந்தவர்கள், தமிழ்ச் செவ்விலக்கியங்களை வியந்து வியந்து பாராட்டியவர்கள், தமிழே முதல்மொழி, தமிழினமே முதல் மாந்த இனம், தமிழர் நிலமாகிய குமரிக்கண்டமே மாந்தர் முதலில் வாழ்ந்த நிலப்பரப்பு என ஆராய்ந்து உரைத்தவர்கள், தமிழ் அக இலக்கிய மரபுகள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று நிறுவியவர்கள், அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகத்தினும் தொன்மையானது பூம்புகார் நாகரிகம் என நிறுவியவர்கள், காலங்காலமாகநடுநிலையற்ற பிராமணர்கள் தங்கள் இனத்திற்கு இல்லாத உயர்வைப் புனைந்து கூறுவதையும் தவறான தொன்மை வரலாற்றை இட்டுக்கட்டிக் கூறுவதையும் மறுத்து ஆய்வுரை வழங்கியவர்கள், எனப் பல்வேறு வகையிலும் உயர்தனிச் செம்மொழியை உலகறியச் செய்தவர்களின் ஆய்வுகளைத் திறம்படவும் நிரல்படவும் ஆய்வுலகக் கலங்கரை விளக்கமாகத்திகழும் பேரா.ப.மருதநாயகம் இந்நூல் மூலம் நமக்கு விளக்கியுள்ளார்.
உயர்தனிச்செம்மொழியைப் போற்ற விரும்பும் ஒவ்வொருவர் கைகளிலும் தவழவேண்டிய நூல் இந்நூல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
– இலக்குவனார் திருவள்ளுவன்
உயர்தனிச் செம்மொழி முன்ெமாழிந்த மூதறிஞர்கள்
ப.மருதநாயகம்
செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை 600 100
விலை உரூபாய் 500/-
Leave a Reply