(உ.வே.சா.வின் என் சரித்திரம் 12 இன் தொடர்ச்சி)

அத்தியாயம் 7
கிருட்டிண சாசுதிரிகள்
 (தொடர்ச்சி)

கங்கைகொண்ட சோழபுரத்தில் அவர் இருந்த காலத்தில் மூன்று பெண்கள் பிறந்தனர் அவர்களுக்கு முறையே இலட்சுமி பாகீரதி, சரசுவதி என்னும் பெயர்களை வைத்தனர். தேவ கோட்டத்திலுள்ள பிம்பங்களும் சிங்கக் கிணற்றின் கங்கையுமே அப்பெயர்களை வைப்பதற்குக் காரணமாயின.

மூன்றாம் பெண்ணாகிய சரசுவதியே என் தாயார், என் தாயாரது முகத்தின் முகவாய்க்கட்டையில் ஒரு தழும்பு உண்டு. என் மாதாமகர் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்ததற்கு அடையாளம் அது. என் அன்னையார் சிறு குழந்தையாக இருக்கையில் திண்ணையில் விளையாடும்பொழுது அங்கே சுவரிற் சார்ந்திருந்த காசாங் கட்டையின் நுனி கிழித்து விட்டதாம். அதனால் காயம் உண்டாகிச் சில காலம் இருந்ததாம் அந்தத் தழும்பே அது.


சில வருடங்கள் கிருட்டிண சாசுதிரிகள் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து வருகையில் ஒரு நாள் அங்கிருந்த பிராமணர் ஒருவர் இறந்தார். அவரை சமசு னத்துக்குக் கொண்டு போவதற்குப் பிராமணர் நால்வர் வேண்டுமல்லவா? கிருட்டிண சாசுதிரிகள் அந்தக் கைங்கரியத்தைச் செய்வதாக முன் வந்தார். மற்றொருவரும் உடன்பட்டார். பின்னும் இருவர் வேண்டுமே; அகப்படவில்லை. வேறு வழியின்மையால், வேறு சாதியினராகிய இருவரைப் பிடிக்கச் செய்து நால்வராகக் காரியத்தை நிறைவேற்றினர்.

வைதிக சிரத்தைமிக்க கிருட்டிண சாசுதிரிகளுக்கு அந்த நிகழ்ச்சி ஒரு பெரிய கவலையை உண்டாக்கியது “நமக்கும் இவ்வாறு நேர்ந்தால் என்ன செய்வது?” என்று அவர் யோசித்தார். “இத்தகைய இடத்தில் இருப்பது தவறு” என்று நினைத்துக் கோயிலதிகாரியிடம் விடைபெற்று அவ்வூரைவிட்டுப் புறப்பட்டார்.


அப்பால் அவர் தம்முடைய மைத்துனி குமாரர்களாகிய இருவர் உள்ள கோட்டூருக்கு வந்து சேர்ந்தார். அக்கினீச்சுவர ஐயர், குருசாமி ஐயர் என்னும் பெயருடைய அவ்விருவரும் நிரம்பிய செல்வர்கள். மிகுதியான பூசுதிதியை(நிலச்சொத்தை)யுடையவர்கள்; வைதிக சிரத்தையும் தெய்வ பக்தியும் பொருந்தியவர்கள். யார் வந்தாலும் அன்னமளித்து உபசரிப்பார்கள். எந்த சா தியினரானாலும் உபகாரம் செய்வார்சள். அவர்கள் பலருக்கு விவாகங்களும் உபநயனங்களும் செய்து வைத்தார்கள். உத்தியோகசுதர்களும் வித்துவான்களும் மிராசுதார்களும் அவர்களிடம் நல்ல மதிப்பு வைத்திருந்தார்கள்.

கிருட்டிண சாசுதிரிகளைக் கண்டவுடன் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. “எங்கள் தகப்பனாருடைய தானத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். பல இடங்களில் நீங்கள் ஏன் அலைய வேண்டும்? இங்கேயே இருந்து உங்கள் பூசை முதலியவற்றைக் கவலையில்லாமல் செய்துகொண்டு எங்களை ஆசீர்வதிக்க வேண்டும்” என்றார்கள். அவர்கள் விருப்பப்படியே அவர் சிலகாலம் அங்கே தங்கியிருந்தார். ஆயினும், அவருடைய மனம் தனியே இருத்தலை நாடியது. கவலையற்றுத் தனியே வாழவேண்டுமென்று விரும்பினார். தம் கருத்தை அச்சகோதரர்களிடம் தெரிவிக்கவே, அவர்கள் முன்பே தம்மிடம் கிருட்டிண சாசுதிரிகள் அனுப்பியிருந்த தொகையோடு தாமும் சிறிது பொருள் சேர்த்துச் சூரியமூலையில் நன்செய் புன்செய்கள் அடங்கிய முப்பதுமா நிலம் வாங்கி அளித்துத் தமக்குரிய வீடொன்றையும் உதவி அங்கே சுகமாக வசித்து வரும்படி கேட்டுக்கொண்டனர்.

“பரமேசுவரனது கிருபை இந்த இடத்தில் சாந்தியோடு வாழ வைத்தது” என்ற எண்ணத்தோடு கிருட்டிண சாசுதிரிகள் சூரிய மூலையில் தனியே வாழ்ந்து வரலானார். நிலங்களைக் குத்தகைக்கு விட்டுச் சிவ பூசையிலும் மந்திர சபங்களிலும் ஆனந்தமாகப் பொழுதைப் போக்கிச் சிவ கிருபையை துணையாகக்கொண்டு திருப்தியோடு இருந்து வந்தார்.

நிலங்களைக் குத்தகை எடுத்த குடியானவர்கள் அவருக்குக் கவலை வைக்காமல் அவற்றைப் பாதுகாத்தும் அவருக்கு வேண்டியவற்றைக் கவனித்து அளித்தும் வந்தனர்.

சூரியமூலை இப்போது சூரியமலை யென்று வழங்குகிறது. கஞ்சனூருக்கு ஈசானிய மூலையில் அவ்வூர் இருக்கின்றது. ஈசானிய மூலைக்குச் சூரியமூலை யென்பது ஒரு பெயர். அதனால் இப்பெயர் வந்தது. இதனைச் சூரியகோடி யென்று வடமொழியில் வழங்குவர். அவ்வூர்ச் சிவாலயத்திலுள்ள சிவபெருமானுக்குச் சூரியகோடீசுவர ரென்பது திருநாமம். சூரியமூலை பெரிய ஊரன்று; பெரிய தலமுமன்று. ஆனால் அடக்கமாக வாழ விரும்பிய கிருட்டிண சாசுதிரிகளுக்கு அந்த மூலை ஊரே சிறந்ததாகத் தோன்றியது. “இந்தச் சின்ன ஊரிலே நீங்கள் இருக்கிறீர்களே” என்று யாராவது கேட்டால், “அனாசாரத்திற்கு இடமில்லாதது இந்த ஊர். திரண காசு ட்ட சல சமர்த்தியுள்ளது. வேறு என்ன வேண்டும்?” என்று விடையளிப்பார். (திரணம்-புல்; காட்டம்-விறகு.) பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், சுநானத்திற்குத் தீர்த்தமும் நிரம்பின இடம் வசிப்பதற்குக் தகுதியுள்ள தென்பது அவர் கருத்து.

சூரியமூலைக்கு வடபால் பழவாறு என்ற நதி ஓடுகிறது. காவிரியிலிருந்து வயல்களுக்குப் பாய்ந்த கழிவு நீரோடை அது. அது முதலில் ஓட்டை வாய்க்காலென்னும் பெயரோடு வருகிறது. அதுவே பழவாறாகிப் பிறகு விநாயகநதி யென்ற பெயரைப் பெறுகிறது. திருவெண்காட்டுக்கருகில் மணிகர்ணிகை என்னும் தீர்த்தமாகிப் புராணத்தாற் பாராட்டப்படும் பெருமையை உடையதாக விளங்குகின்றது.

கிருட்டிண சாசுதிரிகள் அந்தப் பழவாற்று சுநானத்தையே கங்கா சுநானத்திலும் பெரியதாக நினைத்தார். தம்முடைய வீட்டின் பின்புறத்திலும் மேல் பக்கத்திலும் உள்ள விசாலமான இடங்களில் பலவகையான புட்ப மரங்களும் செடிகளும் கொடிகளும் பஞ்ச பில்வங்களும் வைத்துப் பயிர் செய்தார். அவற்றிலிருந்து நாள்தோறும் மிகுதியான புட்பங்களையும் பத்திரங்களையும் பறித்துப் பூசை செய்வார். அபிசேகத்திற்குப் பசுவின் பாலும் அருச்சனைக்கு வில்வமும் இல்லாமல் பூசை செய்யமாட்டார். அருச்சனைக்கு மலர் தரும் பூஞ்செடிகளை வைத்துப் பாதுகாத்தது போலவே அபிசேகத்துக்குப் பால் தரும் பசுக்களையும் அவர் அன்போடு வளர்த்து வந்தார். மாலை வேளையில் தாமே புல் பறித்து எடுத்து வந்து பசுக்களுக்குப் போடுவார். அவர் நினைத்திருந்தால் தம் நிலங்களில் பயிர்செய்து பொழுதுபோக்கலாம். அவர் கருத்து அதில் ஊன்றவில்லை. தம்முடைய பூசைக்கு வேண்டிய மலர்களை உதவும் மலர் வனத்தைப் பயிர் செய்வதில்தான் அவருடைய விருப்பம் சென்றது. மகா கைலாச அஷ்டோத்தரம் சொல்லி அம்மலர்களால் அருச்சனை புரிவதே அவருக்கு இன்பத்தைத் தந்தது.

விடியற்காலையில் எழுந்திருப்பதும் பழவாற்றில் சு நானம் செய்வதும் அனுசுட்டானங்கள் செய்வதும் விரிவாகப் பூசை செய்வதும் ஆகிய காரியங்கள் நிறைவேறப் பிற்பகல் இரண்டு மணி வரையில் ஆகும். அப்பால் போசனம் செய்வார். பிறகு சிவநாமம் செய்துகொண்டே இருப்பார். மாலையில் சென்று பசுவுக்குப் புல் எடுத்து வருவார். சந்தியா காலத்தில் சந்தியா வந்தனம் செய்துவிட்டுத் தம்முடைய ஆத்மார்த்த மூர்த்தியாகிய சிதம்பரேசருக்கு அர்ச்சனையும் நிவேதனமும் கற்பூர ஆரத்தியும் செய்வார். பிறகு உண்பார். எப்போதும் சிவநாமசுமரணையை மறவார்.

சூரியமூலைக்கு வந்த பிறகு அவருக்குச் சுப்பலட்சுமி யென்னும் பெண்ணும் சிவராமையர் என்னும் குமாரரும் மீனாட்சி யென்னும் குமாரியும் பிறந்தார்கள்.

என் தந்தையாருக்கு விவாகம் செய்விக்க ஏற்ற பெண்ணைத் தேடிக்கொண்டிருந்த என் பாட்டனாரும் பாட்டியாரும் கிருட்டிண சாசுதிரிகளின் இயல்பை உண்ர்ந்து அவருடைய மூன்றாம் குமாரியாகிய சரசுவதியைத் தம் குமாரனுக்கு மணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்தனர். விவாகம் நிச்சயமானது தெரிந்து உடையார்பாளையம் சமீன்தார் பொருளுதவி செய்ய, என் தந்தையாருடைய விவாகம் இனிது நிறைவேறியது.

(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.